செய்திகள்

உலகிலேயே மிக வேகமானது எது தெரியுமா?

7th Sep 2019 05:27 PM

ADVERTISEMENT

 

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க! என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். இதனைப் பற்றி சிறிது சிந்திக்கலாம்.

இந்த உலகிலேயே மிக வேகமானது எது? என்று கேட்டால் அனைவரும் சரியாக கூறும் விடை மனம். மனோ வேகம் என்று கூறப்படும் மனதின் எண்ணங்களின் வேகம்  அளவிட முடியாததாக இருக்கிறது. மனதில் எழும் எண்ணங்களின் வேகம் மிகவும் அதிகமாகும் போது பாதிப்புகள் தொடங்குகிறது.

ஒரு காட்டாற்று வெள்ளம் எப்படி கரைகளை உடைத்து, மரங்களை வேரோடு பெயர்த்து சர்வ நாசத்தை விளைவிக்கிறதோ அதே போல எண்ணங்களின் வேகம் உடலையும்  உள்ளத்தையும் பாதிக்கிறது. இப்படி அலைபாயும் மனதை அமைதிப்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று மனோ லயம் மற்றொன்று மனோ நாசம். 

ADVERTISEMENT

கலை, இலக்கியம், தொழில், நாம ஜெபம் போன்ற ஏதோ ஒன்றில் மனதை லயிக்க விடும் போது மனம் எண்ணங்களை விடுத்து அதனுடன் ஒன்றிப்போகிறது. இது யானை  துதிக்கையில் ஒரு கழியை கொடுப்பது போன்றதாகும்.

யானையை தெருவில் அழைத்துச் செல்லும்போது துதிக்கையால் அங்கும் இங்கும் எதையாவது பிடுங்கி அழிவை ஏற்படுத்தாமல் இருக்க ஒரு சிறிய கழியை கொடுப்பார்கள். அதை பிடித்துக் கொண்டு யானை அமைதியாக வரும். 

அதே போல மனோ லயம் ஏற்படும் போது மனம் அமைதி அடைகிறது. ஆனால் இது நிரந்தரமானதல்ல. கழியை எடுத்தால் மீண்டும் யானை துதிக்கையைக் கொண்டு  அழிவைச் செய்ய ஆரம்பித்து விடுவதைப் போல, மனம் மீண்டும் வேகமாகப் பயணிக்க ஆரம்பிக்கிறது. இதைப்போல அல்லாது மனம் நிரந்தரமான அமைதியில் நிற்பது மனோ  நாசம். இரண்டு வழியில் மனோ நாசம் ஏற்படுகிறது. ஒன்று அரூப நாசம் மற்றொன்று சொரூப நாசம்.

உயிர் உடலை விட்டு அகலும் போது மனமும் அதனுடன் சேர்ந்தே பயணிக்கிறது. இது அரூப நாசம். இந்த மனமற்ற நிலை உயிருடன் இருக்கும் போதே நிகழ்வது சொரூப நாசம்.

மனம் சொரூப நாசத்தை அடைய மாணிக்கவாசகர் வழி காட்டுகிறார். மனம் இல்லாது போக வேண்டுமானால் நம்மை ஈசன் ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும். அண்ட அகில சரா சரத்துக்கும் தலைவனான சிவனின் ஆட்சிக்கு நம்மை உட்படுத்தினால் அவர் வேகத்தைக் கெடுத்து மனம் சொரூப நாசமடையச் செய்வார்.

எதன் மீது ஆசை வைத்தாலும் பிறகு அது நம்மை ஆள ஆரம்பித்து விடுகிறது. உலகியல் பொருளில் முழுமையானது என்பது எதுவுமில்லை. எது கிடைத்தாலும் மனம் அமைதியே அடையாமல் அதைவிடச் சிறந்த ஒன்றைப் பார்த்து ஏங்கிக் கொண்டே கற்பனை கோட்டைகளைக் கட்டுகிறது.

ஆனால் ஈசன் முழுமையானவர். உலகியல் பொருட்களை விடுத்து ஈசனை ஆள விடுத்தால் நிகழ்காலத்தில் நிற்றல் கை கூடுகிறது. ஏனெனில் நாம் அடைந்ததைத் தவிரச் சிறந்தது உலகில் வேறொன்று இல்லை என்ற நிறைவு. நிகழ்காலத்தைத் தொடவே முடியாமல் மனம் இல்லாமல் போகிறது. மனோ வேகத்தைக் கெடுத்து எமை ஆளும் ஈசனடி வெல்க!!. வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க!

ஓம் நமச்சிவாய....

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

தொகுப்பு - கோவை ச. பாலகிருஷ்ணன்

Tags : வேந்தன் அடி வெல்க மாணிக்கவாசகர் திருவாசகம் உலகிலேயே மிக வேகமானது எது?
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT