வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

சிதம்பரத்தில் ஒரே நாளில் எட்டு கோயில்களில் கும்பாபிஷேகம்

Published: 06th September 2019 01:04 PM
சிதம்பரம் நடராஜர்


கோயில் என்று சிவனடியார்களிடம் கேட்டால் சிதம்பரம் நடராஜர் கோயில் இருக்கும் திக்கினை காட்டிக் கும்பிடுவார்கள். அவ்வளவு சிறப்புமிக்க வரலாற்று பின்னனி கொண்ட பல ரகசியங்களை தன்னகத்தை கொண்டுள்ள கோயிலின் வரலாற்றினை சற்று பார்ப்போமா? 

பஞ்சபூதத்தலங்களில் கடைசித் தலமான ‘ஆகாயத்தலம்’ ஆகும். சிதம்பரம் நகரத்தின் நடுநாயகமாக 40 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சபாநாயகர் திருக்கோயில் என்று பெயர். நடராஜர் சிவகாமியுடன் தெற்கு பார்த்து ஆடுகின்ற இடத்தினை சிற்சபை, கனகசபை, சிவநடராஜ சபை என்றும் கூறுகின்றனர். 

பஞ்சபூதங்களில் ஐந்தாவது திருத்தலம் - சிதம்பரம் நடராஜர் கோயில்

சிதம்பரம் கோயிலுக்கு 4 திசைகளிலும் 4 கோபுர வாயில்கள் உண்டு. கிழக்கு வாயில் வழியாக மாணிக்க வாசகரும், தெற்கு வாயில் வழியாக ஞானசம்பந்தரும், மேற்கு வாயில் வழியாக அப்பரும், வடக்கு வாயில் வழியாக சுந்தரரும் வந்து நடராஜப் பெருமானை வழிபட்டனர். பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்ற முனிவர்களும், தேவர்களும் இந்த ஈசனின் ஆட்டத்தை காணமாட்டோமா என்று தவமாய் தவமிருந்து பெரும் பேற்றினைப் பெற்றனர். இக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் 101 அடி உயரமும், வடக்குக் கோபுரம் 108 அடி உயரமும் கொண்டது. இக்கோபுரங்களில் பரத நாட்டியத்தின் 108 முத்திரைகளும் சிலைவடிவில் உள்ளது. நடராஜரின் சிற்சபையின் மேற்கூரையின் ஓடுகள் மொத்தமும் தங்கத்தினால் வேயப்பட்டது. 

இங்கு மொத்தம் ஐந்து மதில் சுவர்களைக் கொண்ட ஐந்து பிரகாரங்கள் உள்ளது. நான்காவது பிரகாரத்தின் வழியாக உள்ளே சென்றால் நாம் காண கண்கோடி வேண்டுமென அடியார்களால் கூறப்பட்ட கருவறை; நடராஜ மூர்த்தியின் சிற்சபை வித்யாசமாக ஒரு செவ்வக வடிவில்; கீழே கருங்கல்லினாலும், மேல் சபை மரத்தினால் கட்டப்பட்டுள்ளது. சிற்சபைக்கு வெளியே கனக சபை உள்ளது. இங்கு தான் அபிஷேக ஆராதனைகளெல்லாம் நடைபெறுகிறது. 

இந்த சன்னிதிக்கு நேர் தெற்கில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, கோவிந்தராஜ பெருமாளின் சன்னிதி கிழக்கு நோக்கி உள்ளது. ஒரே இடத்தில் நின்று கொண்டு நடராஜர், கோவிந்தராஜர் இருவரையும் தரிசிக்கலாம். சைவ வைணவ சங்கமம்! ஆச்சர்யம் ஆனால் உண்மை!! இங்கிருந்து மூன்றாவது பிரகாரத்தில் நிருத்த சபை, தேவ சபை என இரு மண்டபங்கள் உள்ளது. இதைத் தாண்டி சென்றால் மஹாலஷ்மிக்கு தனி சன்னிதி உள்ளது. அதனருகில் தான் இக்கோயிலின் சிவலிங்க சொரூபம் கொண்ட கருவறை உள்ளது. 

ஐந்து மதில் சுவர்களைக் கொண்ட பிரகாரங்கள்; நம் உடம்பின் ஐந்து கோசங்களைக் குறிக்கின்றது. முதல் கோசம்; அன்னமய கோசம் - இது நம் உடலைக் குறிக்கின்றது. இரண்டாவது; ப்ராணமய கோசம் - இது நம் உடலிலுள்ள உயிர் சக்தியைக் குறிக்கின்றது. மூன்றாவது; மனோமய கோசம் - இது நம் மனதின் ஓட்டத்தைக் குறிக்கின்றது. நான்காவது; விஞ்ஞானமய கோசம் - இது நம் புத்திசாலித்தனத்தை குறிப்பது. ஐந்தாவதும், கடைசியானதும் ஆன ஆனந்தமய கோசம் - நம் பரிபூரண சந்தோஷமான ஆனந்தத்தைக் குறிக்கின்றது. 

இவை யாவும் சோழர் காலத்தில் 11 மற்றும் 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. பின் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு, பெரும் பொருட்செலவில் இக்கோயிலை விரிவாக்கம் செய்துள்ளார்கள். இக்கோயிலின் சரித்திரப் பின்னனி பல ஆராய்ச்சியாளர்களால் பரிசீலிக்கப்பட்டாலும்; விடை காணாத புதிராகத்தான் ஆரம்ப காலம் தொட்டு இருக்கின்றது. ஒரு வேளை இதையும் ரகசியம் என்று எடுத்துக் கொள்ளலாமா? இங்கு ஒரு காலத்தில் 2,999 தீஷிதர்கள் இருந்தனர் என்|றும், இறையனார் எம்பெருமான் நடராஜருடன் சேர்த்து தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் எனவும் கூறுவார்கள். 

திருமூலர் தன் திருமந்திரத்தில்: “மானுடராக்கை வடிவு சிவலிங்கம், மானுடராக்கை வடிவு சிதம்பரம், மானுடராக்கை வடிவு சதாசிவம், மானுடராக்கை வடிவு திருக்கூத்தே” என்கிறார். இதன் பொருள் நம் மனித உடம்பின் தத்துவமே சிவலிங்கம், சிதம்பரம், சதாசிவம்; இவை யாவும் அவன் ஆடும் ஆட்டமே என்கிறார்.

தினமும் நடக்கும் பூஜைகளை இதன் தலைமை தீக்ஷிதர் இறைவனாகவே “சிவோகம்பவ” என்ற தத்துவத்தை விளக்கும் முகமாக வழிபாடு செய்கிறார். சிவ, அகம் என்றால் நான்/நாம், பவ என்றால் ஒருநிலைப்படுதல். எனவே 'நீ உன் மனதை ஒருநிலைபடுத்தி, சரணாகத தத்துவத்தில் அவன் பாதம் பணிந்தால்; உன் உள்ளே இருக்கும் கர்ம வினைகளை அவன் பிடிங்கி வெளியே தூக்கி எறிந்து பரிபூரண சந்தோஷத்தை அளிப்பான்’ என்பதே ஆகும். 

இக்கோயிலுக்குள் நிருத்ய சபா (56 தூண்கள் கொண்ட மண்டபம்), ராஜ சபா (1000 தூண்கள்), சதாசில சபா (100 தூண்கள் - சிதிலம் அடைந்ததால் தற்போது உபயோகத்தில் இல்லை) தேவ சபா அல்லது பேரம்பலம் என்று பல சபா மண்டபங்கள் உள்ளது. வடபுறம் சிவகங்கை என்ற வற்றாத பெரிய குளம் உள்ளது. இது தவிர சுமார் எட்டு தீர்த்தங்கள் இக்கோயிலின் உள்ளே இருக்கின்றது. 

இப்பெரிய கோயிலின் உள்ளே பல சிறிய கோயில்கள் இருக்கின்றது. அனைத்து கோயில்களுக்கும் ஒருங்கே குடமுழுக்கு செய்ய இயலாது என்பதால் சிறுக சிறுக அவ்வப்போது தில்லை வாழ் பொது தீக்ஷிதர்கள் கும்பாபிஷேகத்தை செய்து கொண்டே இருக்கிறார்கள். தற்போது ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம், ஸ்ரீ மூல விநாயகர் ஆலயம், ஸ்ரீ ஜகன்மோகன கணபதி ஆலயம், ஸ்ரீ வல்லப கணபதி ஆலயம், சிதம்பரத்தில் மதுரை என்றழைக்கப்படும் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயம், ஸ்ரீ சாஸ்தா ஆலயம், ஸ்ரீ பல்லீஸ்வரர் எனும் பல்லிகேஸ்வரர் ஆலயம், ஸ்ரீ தகக்ஷிணாமூர்த்தி ஆலயம்; ஆக மொத்தம் ஒரே நாளில் எட்டு ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் வருகிற 11.9.2019 புதன்கிழ்மையன்று காலை 6.00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் நான்கு வகை வேத விற்பன்னர்களைக் கொண்டு வேதபாராயணங்கள் மற்றும் ஓதுவார்களைக் கொண்டு திருமுறை பாராயணங்களுடன் நடைபெறுகிறது. யாகசாலை பூஜைகள் 8.9.2019 மாலை முதல் ஆரம்பமாகிறது. சிவோகத்தில் கலப்போம் பேரானந்தம் அடைவோம்.

கட்டுரை ஆக்கம்: ஆன்மீக எழுத்தாளர் எஸ்.எஸ்.சீதாராமன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : சிதம்பரம் நடராஜர் கோயில் natarajar temple chidambaram nataraja temple பஞ்சபூதங்களில் ஆகாயத்தலம்

More from the section

ஜோதிடம் அவ்வளவு முக்கியமா, அதை ஏன் பார்க்க வேண்டும்?
திருப்பதியில் செப்.30 முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்
திருப்பரங்குன்றத்தில் செப்.27-ல் வேல் எடுக்கும் விழா
ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி என்கிறது ஜோதிடம்!
புரட்டாசி மாதப் பலன்கள்: பார்த்தால் பசுவாம், பாய்ந்தால் புலியாம் இந்த ராசிக்காரர்கள்?