வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

காதல் - பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்...!!

By - ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன| DIN | Published: 06th September 2019 06:14 PM

ஆம், காதல் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம். உறவில் ஏற்படும் ஒரு தலைக்காதல், உறவில் உருவாகும் காதல் திருமணம், காதல் கலப்புத் திருமணம், இரகசிய காதல் திருமணம், காவல் நிலையம் செல்லும் நிலை வரை சென்று திருமணம், காவல் நிலையம் சென்றும் திருமணம்  முடிக்காமல் காவலில் இருக்கும் நிலை, காதலித்தவரையே நினைந்து வாழும் சந்நியாசி நிலை. இவ்வளவு உண்டு காதலில். ஒருவர்  எப்படி வேண்டுமானாலும் காதலித்து இருக்கலாம். ஆனால், அது திருமணத்தில் முடியுமா அல்லது முடியாதா என்பதனை, ஜோதிடம் அவர் தம் பிறப்பு ஜாதகத்தால் நிச்சயம் அறிய முடியும். 

ஒருவரின் ஜனன ஜாதகத்தில், 7 ஆம் பாவம் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரக பாவமாக இருந்தால் பிறர் மனைவியரிடத்தில் நாட்டம் கொள்கிறார்கள். அதுவே 7 ஆம் பாவம் ஏக கிரக பாவமாக (கடகம் - சந்திரன் / சிம்மம் -சூரியன்  ) இருந்தால் ஜாதகன் காம வேட்கை உள்ளவனாக இருந்தாலும், பிறர் மனைவியர்களிடத்தில் நாட்டம் அதிகமாக இருப்பதில்லை. 7 ஆம் அதிபதியும், சுக்கிரனும் பாதிப்படைந்திருந்தால் பல பெண்களுடன் தவறான பழக்கம் ஏற்படும். இவைகளை காதலிப்பவர்கள் காண்பாரோ. அதனாலேயே சிலருக்கு காதலித்து திருமணத்திற்குப் பின்னர் உண்மை ஸ்வரூபம் வெளிப்படுவதால் , திருமண வாழ்வு கசந்து பிரிவினையில் எடுத்துச் செல்கிறது.

இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் சிலவற்றைத் தெரிந்துகொள்வோம். ஆம் ஜாதகர் என்றால், ஒன்றாம் இடம் , லக்கின பாவம். நான்காம் இடம், தாய் ஸ்தானம். அதற்கு மூன்றாம் இடமான ஆறாம் இடம், தாயின் சகோதரரான மாமன் பற்றிய இடம். இந்த இடத்தில் ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் 7 ஆம் வீட்டு அதிபதி இருப்பாரே ஆனால், அவருக்கு தாய் மாமன் மகளை மணக்கும் வாய்ப்பு ஏற்படலாம். இந்த மாதிரி நிலை இருப்பின் அது விவாகரத்து வரை செல்வதில்லை. இவ்வாறு அமையும் ஜாதக அமைப்பில், ஒருவருக்கு மாமன் இருந்தாலும், யாரும் இல்லாத நிலையிலும், 7 ஆம் இடத்துக்கு 6 ஆம் இடம் விரைய ஸ்தானம் ஆகிவிடுவதால்,  வெகு சிலருக்கு மற்றொரு விவாகம் கூட ஏற்பட , சிலசமயங்களில் காரணமாக ஆகிவிடுகிறது. 

ஒரு சிலர் நன்கு காதலிப்பார்கள், ஆனால் திருமணம் என்ற வட்டத்திற்குள் அவர்களால் நுழையவே இயலாது. காரணம், அவர்களின் பிறப்பு ஜாதகத்தில், 7 ஆம் வீடு அதிபதி, 12 எனும் விரைய பாவத்தில் நிற்பதால், ஜாதகர்  திருமணம் பற்றிய கனவு காணமுடியும் தவிர அவரால் திருமணம் செய்து கொள்ளவே முடியாது.அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் பொதுவாக ஜாதகர் ஒரு ஏழையான வரனையே மணக்க நேரிடும்.

காதல் செய்து திருமணம் வரை செல்லும் பாக்கியசாலிகள் யார் யார்?
ஒரு ஜாதகரின், பிறப்பு ஜாதகத்தில், 

1. ராசி அல்லது லக்கினத்திற்கு, 1 , 5 , 7 , 9 ஆம் அதிபதிகளின் தொடர்பு பெற்றிருப்பவர்கள். 

2. 11ஆம் பாவம் பாபர்களுடன் தொடர்பு பெற்றிருப்பவர்கள். (இயற்கை பாபர்கள் மற்றும் லக்கின பாபர்கள்)

3. 7ஆம் அதிபதி களத்திரக்காரனான சுக்கிரன் , சனியுடன் இணைந்திருப்பது. 

4. 2 , 5 , 7 , 11 ஆம் அதிபதிகளுடன் தொடர்பு.

காதல் கலப்புத் திருமணம் செய்யும் பாக்கியசாலிகள் யார் யார்?

ஒரு ஜாதகரின், பிறப்பு ஜாதகத்தில், 

1. லக்கினம் / ராசிக்கு 8 ஆம் பாவத்தில் ராகு / கேது  / சனி / செவ்வாய் இருப்பது.

2. செவ்வாய் , சுக்கிரன், சனி மூவரும், 7 ஆம் பாவத்துடனோ அல்லது 7 ஆம் அதிபதியுடனோ தொடர்பு பெறுவது.

3. 9ஆம் பாவம் அல்லது 9 ஆம் அதிபதிக்கு , 2  மற்றும் 12 ல் பாவிகள் இருப்பதும், 7 ஆம் இடத்தில் ராகு / கேது இருப்பதும். (ராகு - முகமதியர் , கேது- கிறிஸ்தவர் )

4. 7 ஆம் அதிபதி , நவாம்சத்தில், சூரியன், சந்திரன், செவ்வாய் வீட்டில் இருப்பது. 

5. பொதுவாக 7 ல் ராகு / செவ்வாய் இருப்பது , கலப்பு திருமணம் தான். 

அயல் நாட்டவரை மணக்கும் ஜாதக அமைப்பு:-

7 ஆம் அதிபதி, அம்சத்தில், ராகு / கேதுவுடன் இருந்தாலும் (அல்லது ) சுக்கிரன் இவர்களுடன் தொடர்பு கொண்டாலும், அயல் நாட்டவரை மணக்கும் பாக்கியம் கிட்டும். 

ரகசிய காதல் திருமணம்:

மேற்கூறியபடி காதல் திருமணத்திற்கான கிரக அமைப்பு இருந்து, கேது; ஒருவரின் லக்கினம், ராசி இவற்றிற்கு 5 அல்லது 7 ஆம் இடத்தில் இருந்தாலும், 5 அல்லது 7ஆம் அதிபதிகளுடன் தொடர்பு கொண்டாலும் ரகசியமாகத் திருமணம் செய்து கொள்வார்கள். 

காதல் திருமண பிரிவினை / விவாகரத்து:-

1. இரண்டாம் அதிபதி, நீச்சம் பெறுவது அல்லது நீச்சம் பெற்ற கிரகம்  இரண்டாம் இடத்தில் இருப்பது. 

2. பூர்வபுண்ணிய இடம் எனும், 5 மற்றும் களத்திரம் எனும் 7 ஆம் அதிபதிகளுடன், 6 ஆம் அதிபதி சம்பந்தம் ஏற்பட்டால், நீதிமன்றம் சென்று விவாகரத்து பெறும் நிலை ஏற்படும். 

ஒருதலைக் காதல்:-

லக்கினம் அல்லது ராசிக்கு, 8 ஆம் அதிபதி, 5 ல் இருந்தாலும், அல்லது சம்பந்தம் பெற்றாலும், ராகு / கேதுக்களுடன், சந்திரன், செவ்வாய் இணைந்து 5 ல் இருந்தால், இவர்கள் காதலை விரும்பாமல் இருப்பது நல்லது. 

காவல் நிலையம் வரை சென்று திருமணம் செய்யும் நிலை:- 

சனி அல்லது ராசிக்கு கேந்திரத்தில் அல்லது திரிகோணத்தில், 6 ஆம் அதிபதி இருப்பது. இதில், குருவின் பார்வை 6 ஆம் அதிபதிக்கு இருப்பின் விசாரணையுடன் முடிந்து, திருமணம் நடந்தேறும். இல்லையேல், காவலில் இருக்கும் நிலையே ஏற்படும். 

உதாரண ஜாதகம் :-

இந்த கட்டத்தில் உள்ள ஜாதகருக்கு , ராசிக்கு 9 ஆம் இடமான திரிகோணத்தில், 6ஆம் அதிபதியான சூரியன் இருப்பதாலும், அதனை குரு 5 ஆம் பார்வையாகப் பார்ப்பதாலும், இந்த ஜாதகர், காவல் நிலையம் வரை சென்று வந்து, தமது காதல் திருமணத்தைச் செய்துகொண்டார். குரு பார்வை மட்டும் இல்லை என்றால் அவர் சிறைக்கம்பிகளை தான் காதலித்துக்கொண்டிருப்பார்.

தேவதாஸ் போன்றும் சந்நியாசி நிலை போன்றும் இருப்பவர்களின் ஜாதக நிலை:-

1. சுக்கிரனுக்கு, 3 , 5 , 7 , 12 ல் கேது இருப்பது. 

2. லக்கினம் / ராசியை சனி பார்ப்பது. 

3.  சனி, சந்திரன் இணைந்து 10 ல் இருப்பது. 

4. 10 ல் நான்கு கிரகங்கள் இருப்பது.

மேலே கூறியவை யாவும் ஒரு சிலவே, மேலும் பல அமைப்புகள் உள்ளது. அனைத்தையும் ஆராய்ந்து கூறுவதில் சிக்கலும், கால அவகாசமும் தேவைப்படுவதோடு, ஜோதிடர்களுக்குரிய ஆய்வுக்கான கட்டணத்தைத் தருவதிலும் சிலர் வருத்தப் படுவதால், அவசர நிலையிலும் வந்து கேட்பவர்கள் கடைசி நிலையில் கொடுக்கும் அழுத்தத்திற்கு சில சமயம் தவறுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடுகின்றன. 

சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன

தொடர்புக்கு : 98407 17857

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : couple love love marriage arranged marriage காதல் திருமணம் Different Types of Love  ஜாதக அமைப்பு ஒருதலைக் காதல்

More from the section

ஏகாம்பரநாதர் கோயிலில் சார்-ஆட்சியர் ஆய்வு
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர்ரெட்டி
ஜோதிடம் அவ்வளவு முக்கியமா, அதை ஏன் பார்க்க வேண்டும்?
திருப்பதியில் செப்.30 முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்
திருப்பரங்குன்றத்தில் செப்.27-ல் வேல் எடுக்கும் விழா