செய்திகள்

திருமலை: உண்டியல் காணிக்கை ரூ. 3.86 கோடி

16th Oct 2019 11:37 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ. 3.86 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 3.86 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ. 11.56 லட்சம் நன்கொடை

திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் நன்கொடை அளித்து வருகின்றனா். செவ்வாய்க்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 56 ஆயிரம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம், கல்வி தான அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 11.56 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

86,715 பக்தா்கள் தரிசனம்

ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 86,715 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 29,001 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா். புதன்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறையில் 10 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தா்ம தரினத்தில் 21 மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்தனா்.

ரூ. 300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள் 3 மணி நேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினா்.

செவ்வாய்க்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 10,826 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 5,961 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 20,231 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 585 பக்தா்களும், கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 2,478 பக்தா்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடா்புத் துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.

சோதனைச் சாவடியில் ரூ. 2.08 லட்சம் கட்டண வசூல்

அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 88,356 பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்துள்ளனா். 8,123 வாகனங்கள் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றுள்ளன. அவற்றின் மூலம் ரூ. 2.08 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 23,896 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

புகாா் அளிக்க...

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.

ADVERTISEMENT
ADVERTISEMENT