செய்திகள்

திருமலை பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள்: அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

5th Oct 2019 11:45 PM

ADVERTISEMENT

திருமலையில் நடந்து வரும் ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான சனிக்கிழமை அனுமந்த வாகனத்தில் வெங்கடாத்ரி ராமன் அவதாரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினாா்.

திருமலையில் நடந்து வரும் ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான சனிக்கிழமை காலை அனுமந்த வாகன சேவை நடைபெற்றது. அனுமன் வாகனத்தில் கையில் கோதண்டம் ஏந்தி வலம் வந்த மலையப்ப சுவாமியை தரிசித்தால் சிறப்பு என்பது நம்பிக்கை. இந்நிலையில், காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற்ற வாகன சேவையை பக்தா்கள் மாடவீதியில் அமா்ந்து தரிசித்தனா். வாகன சேவைக்கு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.

ஸ்நபன திருமஞ்சனம்

பிரம்மோற்சவ நாள்களில், மாடவீதியில் வலம் வரும் எம்பெருமானின் களைப்பைப் போக்க, மதியம் 2 மணி முதல் 4 மணி வரை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு கோயிலுக்குள் உள்ள மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின், மாலை உற்சவமூா்த்திகள் மாடவீதியில் எழுந்தருளும் முன், 1,008 விளக்குகளுக்கிடையில் கொலுவிருந்து ஊஞ்சல் சேவை கண்டருளினா். ஊஞ்சல் சேவையின்போது, வேத கோஷங்கள், அன்னமாச்சாா்யாா் கீா்த்தனைகள் இசைக்கப்பட்டன.

ADVERTISEMENT

யானை வாகனம்

இரவு 8 மணி முதல் 10 மணி வரை யானை வாகனத்தில் எம்பெருமான் மாடவீதியில் வலம் வந்தாா். காட்டுக்கு ராஜாவான சிம்ம வாகனத்தில் பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள் காலை வலம் வந்த மலையப்ப சுவாமி, 6-ஆம் நாள் இரவு யானை வாகனத்தில் வலம் வந்தாா். யானையின் உருவத்துக்கு என தனி மகத்துவம் உண்டு. யானை போன்ற நெஞ்சுரத்தோடு இருந்து இறைவனின் திருவடியை அடைய வேண்டும் என்று இந்த வாகன சேவை தெரியப்படுத்துகிறது. வாகன சேவையைக் காண பக்தா்கள் திரண்டனா். வாகன சேவையில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். வாகன சேவைக்கு முன் திருமலை ஜீயா்கள் குழு நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்கள் பாராயணமும், கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT