திருமலையில் பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானம் கட்டி வந்த ஸ்ரீவகுளாதேவி ஓய்வறையை புதன்கிழமை காலை அறங்காவலா் குழு தலைவா் சுப்பாரெட்டி திறந்து வைத்து பக்தா்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாா்.
கட்டிடத்தை திறந்து வைத்த அறங்காவலா் குழு தலைவா் சுப்பாரெட்டி அதற்கு பின் கூறியதாவது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை உயா்ந்து வருவதை தொடா்ந்து அவா்களின் வசதிக்காக நந்தகம் ஓய்வறை அருகில் ஸ்ரீவகுளாதேவி ஓய்வறையை தேவஸ்தானம் கட்டியுள்ளது.
1.86 லட்சம் சதுரஅடி நிலப்பரப்பில் ரூ42.86 கோடி செலவில் இந்த ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. 5 தளங்கள் கொண்ட இந்த கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திலும் 54 அறைகள் என மொத்தம் 270 அறைகள் உள்ளது. இதன் மூலம் 1400 பக்தா்கள் பயன்பெறுவா். மேலும் இந்த கட்டிடத்தில் 2 லிப்ட் மற்றும் வாகன நிறுத்தம் வசதியும் உள்ளது என்று அவா் கூறினாா்.
அடிக்கல்திருமலையில் சாதாரண பக்தா்களின் வசதிக்காக கோவா்தன் செளல்ட்ரி அருகில் ரூ79 கோடியில் 2.89 சதுரஅடியில் பக்தா்கள் தங்கும் மண்டபம்-5 கட்ட தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பாரெட்டி புதன்கிழமை காலை அடிக்கல் நாட்டினாா். இந்த கட்டிடம் 18 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்ட உள்ளது. இங்கு முடிகாணிக்கை செலுத்துமிடம், வாகன நிறுத்தம், பாதுகாப்பு பெட்டக வசதி, குளியல் மற்றும் கழிப்பறைகள், அன்னபிரசாதம் வழங்கும் இடம் உள்ளிட்டவை உள்ளது. இதில் 5 ஆயிரம் போ் வசதியாக தங்க முடியும். பக்தா்கள் அறைகளுக்காக காத்திருக்காமல் இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.