செய்திகள்

ஜாதகத்தில் அடிப்படை வேர் லக்னம் - சிம்ம லக்னம் (பகுதி 5)

1st Oct 2019 02:55 PM | - ஜோதிட சிரோன்மணி தேவி

ADVERTISEMENT

 
சிம்ம லக்னம்

ஜாதகத்தில் அடிப்படை வேர் - கடக லக்கின (14-9-2019) தொடர்ச்சியாக- இன்று வானமண்டலத்தில் 5-வது கட்டமான சிம்ம லக்னம் பற்றிப் பார்ப்போம். 

இந்த லக்கினத்தை ஆளும் நெருப்பு கிரகம் சூரியன் மற்றும் இது ஒரு தலை கிரகம் ஆகும். இது ஸ்திர தன்மையுடன் இருப்பதால் நிகழ்காலத்தை அதிகம் விரும்பக்கூடிய  லக்னம். இது காலபுருஷ தத்துவப்படி வயிறு பகுதி என்பதால் இங்குக் குழந்தை பிறப்பை மற்றும் பூர்வ புண்ணியத்தைக் குறிக்கும் பாவம். அதற்கேற்ப இந்த கட்டத்திற்குள்  உள்ள நட்சத்திர அதிபதிகள் கேது, சுக்கிரன், சூரியன் கிரகங்கள் ஆகும். 

சிம்ம லக்கினதிற்கு புதன் 2,11-க்கும் உரியவர் இந்த இடத்தில் புதன் இந்த லக்னகாரர்களுக்கு நன்மை செய்வார். ஆறுக்கும் ஏழுக்கும் உரிய சனி மற்றும் 3-க்கும் 10-க்கும்  உரிய சுக்கிரன் பாவராக வருவார். ஜோதிடத்தில் சூரியன் தகப்பன் என்பவன் சனி என்பவர் மகன் என்று குறிக்கும்; அதனால் சனி இங்கு அமர்ந்தால் தந்தை மகனுக்கான  ஒற்றுமை குறையும் அதனால் சனி இங்கு பாவியாக இருப்பார். 4ம் மற்றும் 9ம் இடத்துக்கு அதிபதி செவ்வாய் இவர் சுகத்தைத் தருபவராகவும் பாதகாதிபதி திகழ்வார். 

ADVERTISEMENT

ஆனால் செவ்வாய் முழு யோகர் மற்றும் சூரியனுக்கு நெருக்கிய நண்பர் என்பதால் பாதகத்தன்மையைக் கட்டுக்குள்ளேயே வைத்திருப்பர். ஆனால் சனி அதோடு கூடினால்  பாதக தன்மை அதிக கூட்டிக் கொடுப்பார். சுக்கிரன் இந்த லக்கினகாரர்களுக்கு முயற்சித்து தன் ஜீவனத்தையும் சுக வாழ்வை அடையச்செய்வார். குரு என்பவர் முழு நன்மை  தரமுடியாது இவர் சுக்கிரனோடு சேர்ந்து மரணத்திற்கு நிகரான துன்பத்தை அவரின் தசா புத்திகளில் தருவார். இங்கு சூரியன் பலமாக இருந்தால் எல்லாரையும் சுட்டெரிக்கும்  ஆளுமை தன்மையுடன் கூடிய நெருப்பாக இருப்பார் மற்றும் ஆயுள் கெட்டி. தந்தை வழி சொத்து கிடைப்பது கொஞ்சம் கடினம். 

பாரப்பா சிங்கத்தில் செனித்த பேர்க்கு

பவுமனுமே திரிகோண மேறிநிற்க

சீரப்பா செம்பொன்னும் செல்வம் பூமி

சிவ சிவா சிக்குமடா சென்மனுக்கு

வீரப்பா மற்றயிடந் தனிலேநிற்க

வெகுமோசம் வருகுமடா வினையால் துன்பம்

கூறப்பா போகருடா கடாக்ஷத்தாலே

கொற்றவனே புலிப்பாணி குறித்திட்டேனே. (புலிப்பாணி எ-று)

சிம்ம லக்கின ஜாதகருக்கு செவ்வாய்க் கிரகமானது திரிகோண ஸ்தானத்தில் அமைந்தால் பெருஞ்சீர் வாய்க்கும். செம்பொன் சேரும், செல்வமும் பூமியும் வாய்க்கும்.  இவையும் சிவபரம்பொருளின் பேரருளேயாகும். ஆனால், அத்திரிகோண ஸ்தானம் தவிர வேறிடத்தில் அமர்ந்திருப்பின், அவனால் மிகுந்த துன்பமும் செய்வினை முதலிய  துன்பங்கள் ஏற்படுதலும் உண்டாகும். எனது சத்குருவாகிய போக மகா முனிவரின் பேரருளால் கூறினேன். இக்குறிப்பினை அறிந்து ஜாதகனுக்குப் பலன் கூறுவாயாக.

சிம்மம் என்ற உடன் அவற்றின் சின்னம் சிங்கம் என்பதால், இவர்கள் பேசுவது கனீர் என்றும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருக்கும். இந்த லக்னகாரர்கள் காடு மலை  சுற்றுவது மற்றும் தனிமை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் குணம் மற்றும் செயல் திறன்களை பொதுவாக பார்ப்போம்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கலை, இசை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும், அரசு சம்பந்தப்பட்ட துறை, பெருந்தன்மை குணம், கௌரவமான  பதவிகள், கடவுள் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள், அறிவாற்றல், பேச்சாற்றல், நேரம் தவறாதவர்கள், எழுத்தாற்றல், பொருளாதார உயர்வில் அதிக நாட்டமிக்கவர்,  தானம் செய்வார்கள் ஆனால் யாருக்கென்று பார்க்கமாட்டார்கள், பெரிய அளவில் ஆற்றல் கொண்டவர், முன்கோபி, பத்திரிகைத் துறை, அலைச்சல் மிக்கவர், சிலருக்கு  சொந்த தொழில், சந்திரன் கேது சம்பந்தப்பட்டால் கண் அறுவை சிகிச்சை மருத்துவராக இருப்பார்.

குரு சேர்க்கைப் பெற்றால் அரசு ஆசிரியர் வேலை, செவ்வாய் சேர்க்கை பெற்றால் முரடனாக இருப்பார், புதன் சம்பந்தப்பட்டால் கதை, கவிதை எழுதக்கூடிய கற்பனை ஆற்றல், சுக்கிரனோடு சம்பந்தப்பட்டால் திரைத்துறைகளில் மற்றும்  டிராவல்ஸ் தொழில், புகழுடைய அனைத்து துறைகளும், கடந்த காலத்தை நினைக்கமாட்டார்கள் எதிர்கால திட்ட மிக்கவர், இவருக்குக் கீழ் வேலை செய்பவர்களால் சிக்கல்  இருக்கும், சந்திரன் சேர்க்கை இருந்தால் கொஞ்சம் கண்டிப்பானவர். கிரகங்களின் சேர்க்கை பார்வைக்கு ஏற்ப அவர்கள் தொழில் மாற்றம் இருக்கும். 

சிம்ம லக்கினத்தில் எந்த நட்சத்திரத்தை சாரம் மற்றும் பதம் பார்க்கவேண்டும். அவற்றினுள் மகத்தின் 4 பாதங்களும், பூரத்தின் 4 பாதங்களும், உத்திரத்தின் முதல் பாதமும்  அடங்கும். இந்த கட்டுரையில் சொல்வதெல்லாம் லக்கினம் மற்றும் லக்கினமேறிய நட்சத்திர பொதுவான பலன்கள். இவற்றில் உள்ள ஒவ்வொரு பாதம் மற்றும் அவற்றோடு  அமர்ந்த அல்லது சேர்ந்த நட்சத்திரங்கள் கொண்டு பலன் மாறுபடும் 

மகம்:

மகத்தில் பிறந்தவர்கள் ஜகத்தை ஆள்வார்கள் என்பது உண்மை தான். இது கேது நட்சத்திரம். அவர்களுக்கு என்று ஒரு வரைமுறை வைத்திருப்பார்கள். இந்த  நட்சத்திரத்தில் லக்கினம் அமையப்பெற்றால் நற்பண்பாளர்கள், மனைவி சொல்வதை கேட்பார்கள், சிந்தித்து செயலில் இறங்குவான், மனக்கவலை இருக்கும், எந்நேரம் வியாதி  உடலில் இருக்கும், பரிசுத்தமானவர்கள், சாந்தசொரூபன், அதிக ஆசைகொண்டவன், தீயால் வடு உள்ளவன், களிப்புடையவன், செந்நிற அல்லது தங்க நிற விழியுடையவன், நெஞ்சழுத்தம் கொண்டவன், தோல் வியாதி கொஞ்சம் துன்பப்படுவதும், பேசுவதில் இனிமையிருக்கும், மற்றவர்கள் பார்க்கும் பொழுது கொஞ்சம் பயங்கரமாக இருப்பார்கள்,  ஆற்றல் மிக்கவர்கள், கொஞ்சம் கபட புத்தி இருக்கும்.

பூரம்:

இது ஒரு சுக்கிரன் நட்சத்திரம். இந்த நட்சத்திர சாரத்தில் லக்கனம் கொண்டு பிறப்பவர்கள் பலரால் அறியப்படுபவனாயிருப்பான், அஞ்சா நெஞ்சம் கொண்டவன், வீரன்,  வாணிகன், மதுர வார்த்தை பேசுபவன், பொன் பொருள் ஆசை இருக்கும், விவசாயி, பண்பாளன், குடியானவன், கோபக்காரன், ஒழுக்க வெறிகொண்டவன், சிறிய இல்லத்தில்  வசிப்பவன், சதா நீர்வேட்கை இருக்கும், வடு உடலில் இருக்கும், ரகசியம் மனதில் தங்காது, அதி உன்னதமானவன், நன்மைகள் பெறுபவன், பிறரை இகழ்வான், தெய்வ  வழிபாடு குறைவு, பெரும் செல்வம் இருக்காது, புகழாளன், தேவையற்ற கவலை கொள்பவன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போகலாம்.

உத்திரம்:

உத்திரம் முதல் பாதத்தில் பிறப்பவன் கற்கண்டைப்போல இனிமையாகப் பேசுபவன், புகழுடையவன், நன்னடத்தை கொண்டவன், பயப்படமாட்டான், இடம் பொருள்  ஏவல் அறிந்து நடப்பவன், உற்றார் மீது அதிக பாசம் கொண்டவன், நெருப்பாக தெரிவான் அனல் அன்பானவன். 

சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்கள் குரு பெயர்ச்சி 2019-20 எப்படி இருக்கும் என்று பார்ப்போம். தனுசில் இருக்கும் குருவானவர் நான்கிலிருந்து ஐந்துக்கு செல்லும்பொழுது பெயர்  புகழ் உயர்நிலை அடைவீர். அதற்கேற்ப உங்கள் தசா புத்தி சரியாக இருந்தால் வெற்றிக்குமேல் வெற்றி தான். கடந்த இருவருடமாக இருந்த பிரச்னை பிறகு சரியான  வெற்றிப் பாதை தெரியும். குரு பார்க்கும் பார்வை உங்கள் லக்கினத்திற்கு 9, 11, 1-ம் பாவத்தை பார்க்கிறார்.

அதனால் உங்கள் லக்கினம் பலம் பெரும், உடலில் சக்தி ஏற்படும்,  தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும், செல்வ சேர்க்கை, தெய்வ அனுகூலம் கிட்டும், லாபம் அடைவீர், தேடிக்கொண்டு இருந்த உங்கள் குலதெய்வம் கிடைக்கும், எடுத்த காரியம் வெற்றி, மாணவர்களுக்கு உயர் கல்வி, வெளிநாட்டு பிரயாணம், நாள்பட வியாதி குணமாகும். ஜாதகருக்கு ஜாதக கட்டமும் தசை புத்தியும் சரியாக இருந்தால் 2020-க்கு பிறகு இன்னும் அதீத நன்மைகள் கிட்டும். 

குருவே சரணம் .

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

ADVERTISEMENT
ADVERTISEMENT