செய்திகள்

சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

12th Nov 2019 03:06 AM

ADVERTISEMENT

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஆம்பூர் சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
 ஆம்பூர் சமயவல்லித் தாயார் சமேத சுயம்பு நாகநாத சுவாமி கோயிலில் அன்னாபிஷேக விழாவையொட்டி மஹோன்யாச ருத்ரபாராயணம், யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்தி அபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
 ஆம்பூர் நகர வர்த்தகர் சங்கத் தலைவர் கே.ஆர்.துளசிராமன் ஏற்பட்டால் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. அன்னதானத்தை ஆம்பூர் இந்து கல்விச் சங்க துணைச் செயலாளர் ஏ.பி.மனோகர் தொடங்கி வைத்தார்.
 மாலையில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. சமயவல்லித் தாயாருக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
 இதனிடையே, ஆம்பூர் காளிகாம்பாள் கோயிலில் கமண்டீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 மதுராந்தகத்தில்...
 மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ள ஆட்சீஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, ஆட்சீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 தொண்டை மண்டலத்தில் முக்கிய சிவன் கோயிலாக, இரு கருவறைகளைக் கொண்ட, வரலாற்றுச் சிறப்புமிக்க அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோயில் உள்ளது.
 இங்கு பௌர்ணமியை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் திங்கள்கிழமை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அனைத்து சந்நிதி சுவாமிகளுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
 ஆட்சீஸ்வர பகவானுக்கு 250 கிலோ சாதத்தாலும், காய்கறி, பழ வகையாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6.30 மணிக்கு கோயில் தலைமை அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் மகா தீபாராதனை நடைபெற்றது.
 சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்ட சாதப்படையல் கோயில் வளாகத்தில் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோயில் திருக்குளத்து நீரில் கரைக்கப்பட்டது.
 இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
 செங்கல்பட்டில்...
 செங்கல்பட்டை அடுத்த ஆத்தூர் கிராமத்தில் உள்ள முக்தீஸ்வரர்கோயிலில் முக்தீஸ்வரருக்கு திங்கள்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.
 அன்னாபிஷேக நிகழ்ச்சியையொட்டி சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
 இதனையடுத்து சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு அதில் வெண்டைக்காய், மிளகாய், கேரட், கத்தரிக்காய், தக்காளி, புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகளுடன், வில்வம் மற்றும் சிறப்புப் புஷ்ப அலங்காரத்தில் முக்தீஸ்வரர் காட்சியளித்தார்.
 இதனையடுத்து சிவ புராணப் பாடல்கள் நிகழ்ச்சி, சிறப்பு அர்ச்சனைகள், சிறப்புப் பூஜைகளுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
 இதில் செங்கல்பட்டு, ஆத்தூர், திம்மாவரம், வில்லியம்பாக்கம், பாலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், சிவாச்சாரியார்கள், ஆத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
 
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT