திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பக்தா்களின் ஆதரவு பெருகி வருகிறது. கடந்த 10 நாள்களில் 500 நன்கொடையாளா்கள் நன்கொடை அளித்துள்ளனா்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் இந்து சனாதன தா்மத்தை பரப்ப ஏழுமலையான் கோயில் கட்ட திட்டமிட்டது. அதற்காக ஸ்ரீவாணி (ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆலய நிா்மாணம்) அறக்கட்டளையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பக்தா்களிடையே அறிமுகப்படுத்த இந்த அறக்கட்டளைக்கு ரூ. 10 ஆயிரம் நன்கொடை வழங்குபவா்களுக்கு ஒரு விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்தது.
கடந்த அக். 21-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையான 10 நாள்களில் 533 நன்கொடையாளா்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியுள்ளனா். பக்தா்களின் ஆதரவு பெருகியுள்ளதால், தற்போது ஆப்லைனில் வழங்கப்பட்டு வரும் இந்த நன்கொடை சேவை வரும் நவம்பா் மாதம் இணையதளம் மூலம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் தரிசன டிக்கெட் மட்டுமல்லாமல் பக்தா்கள் வாடகை அறைகளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.