யாருக்கெல்லாம் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு?

வெளிநாடு செல்லும் யோகம் உண்டா? வெளிநாடு கல்வி பயில / மேற்படிப்புக்காக, கடல் கடந்து செல்வாரா?
யாருக்கெல்லாம் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு?

1. வெளிநாடு செல்லும் யோகம் உண்டா? வெளிநாடு கல்வி பயில / மேற்படிப்புக்காக, கடல் கடந்து செல்வாரா? வெளிநாடு வேலைக்காக, கடல் கடந்துசெல்வாரா?  வெளிநாடு வியாபாரத்துக்காக, கடல் கடந்து செல்வாரா? வெளிநாடு சுற்றுலாவுக்காக, கடல் கடந்து செல்வாரா? புனித யாத்திரை காரணமாக கடல் கடந்து வெளிநாட்டுக்குச்  செல்வாரா? அந்திம காலம் வெளிநாட்டில் தானா? ஒரு சிலர் திருமணத்துக்குப் பிறகு கணவனது வேலை காரணமாகச் செல்கிறார்கள். இதற்கு அவர்களின் ஜாதக அமைப்பே காரணமாகும். இத்தனை கேள்விகள் மனதில் தோன்றும். இவற்றிற்கு ஜோதிடம் பதில் சொல்லுமா? / தெளிவுபடுத்துமா! ஒவ்வொருவரும் பதிலுக்காகக் காத்திருக்கும்  தருணம்.

2. இதுபோன்ற பல வினாக்களுக்கு ஜாதக அடிப்படையில் விடை தேடி அதற்குப் பிறகு வெளிநாடு செல்லல், நலம் பயக்கும். இவ்வாறு எதுவும் பார்க்காமல் வட்டிக்குப் பணம்  வாங்கி, வீட்டை அடகு வைத்து, பல லட்சங்களைக் கட்டிப் போய் சில வாரங்களிலே "போன மச்சான் திரும்பி வந்தான்?" என்ற கதையாகத் திரும்ப வந்து அந்த கடனை  அடைக்க முடியாமல் அந்த குடும்பம் நொறுங்கிப்போய் ஏன் சில நேரங்களில் தற்கொலை வரை சென்று விடுகிறார்கள். எனவே வெளிநாடு செல்ல விரும்புவோர் பயன்பெறும் வகையில் இப்பதிவு இங்குப் பதியப்படுகிறது. 

3. வெளிநாடு விரும்புவோர்களுக்கு லக்னம், லக்னாதிபதி, சந்திர லக்னம் இவைகள் நீர் அல்லது காற்று ராசிகளில் அமைய வேண்டும். 2,11.12 ஆகிய ஜாதக கட்டங்கள்  ஒருவருக்கு காற்று அல்லது ஜல ராசியாக அமைய வேண்டும். 11- ம் வீட்டு அதிபதி, 12-ஆம் வீட்டு அதிபதி காற்று அல்லது நீர் ராசியாக இருந்து இவை ஆட்சி, உச்சம்,  கேந்திரம், திரிகோணம், லாபஸ்தானம் பெற்று இருக்க வேண்டும். இவை அம்சத்திலும் இதே போன்ற அமைப்பை அடைந்திருக்க வேண்டும்.

11 மற்றும் 12-ஆம் வீட்டு அதிபதிகள் காற்று அல்லது நீர் ராசிக்குரிய நட்சத்திர சாரம் பெற்றிருக்க வேண்டும். காற்று ராசி அல்லது ஜென்ம ராசி; ஜென்ம லக்னத்திற்கு சுப  ராசிகளாக இருக்கவேண்டும். தொலைதூரப் பயணம் செல்லக் காரணமான ஒன்பதாம் இடம், பன்னிரண்டாம் இடம், இவ்விடங்களைப் பார்க்கும் கிரகம், இவ்விடங்களில்  இருக்கும் கிரகம், இவ்விடங்களில் இணையும் கிரகம், மற்றும் லக்னாதிபதியின் நிலை ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். மேலும் அப்போது நடைபெறும் தசா புக்தியின்  நிலை போன்றவற்றையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். 

4. வெளிநாட்டு வாசம் எவ்வளவு காலம்? 
சிலருக்கு வெளி நாடு செல்லும் யோகம் இருந்தாலும், அவர்கள் நிரந்தரமாகக் குடியுரிமை வாங்க முடியாது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டும் தங்கி விட்டு, மீண்டும் தன் தாய் நாட்டுக்கே வந்து விடுகிறார்கள். ஒரு சிலர் மட்டும் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி குடியுரிமையையும் வாங்கி விடுகிறார்கள். இதெல்லாம் ஜாதகத்தில் யோகம் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். ஒரு சிலர் பெண் நண்பர் மூலமாகவோ, முகநூல் மூலமாகவோ, கடல் கடந்துள்ள ஆண் பெண்களைக் கண்டுபிடித்து, காதலித்து அங்கேயே சென்று திருமணம் முடிந்து தங்கி விடுவதும் உண்டு. இங்கு முக்கியமான ஒன்று பதிவு செய்ய விரும்புகிறேன்.

அதாவது யார் ஒருவர் தனது தாய் நாட்டை விட்டு வெளியே சென்று வேறு நாட்டில் வாசிக்க நேருகிறதோ அவர்கள் எவ்வளவு இழக்கிறார்கள் என்பதனை சொல்லில்  அடங்காது. காசு, பணம், வசதி போன்ற அனைத்தும் தன்னிடம் வந்து சேர்ந்தாலும் அவர்களின் உறவுகளை அவர்கள் விரையம் செய்து / பெற்றோர் பாசத்தை விட்டொழித்துத்  தான் செல்கிறார்கள் என்பதனை இங்கு மறைக்கவோ மறக்கவோ முடியாத ஒன்று. அதனால் தான் ஒருவரின் ஜாதகத்தில், 12ஆம் பாவம் (விரைய பாவம்) சம்பந்தம்  இல்லாமல் போக இயலாது. வெகு சிலரே தங்களது பெற்றோர்களை அவர்களுடனேயே அழைத்துவந்து அவர்களுடனேயே வைத்துக்கொள்கிறார்கள். அப்படியே  பார்த்தாலும் மற்றைய உறவுகளை விரயம் செய்யத்தான் வேண்டிவரும். 

5. வெளிநாடு செல்ல இருக்க வேண்டிய கிரக நிலை என்ன? 
ஒருவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமானால் அவர்களின் ஜாதகத்தில் நீர் கிரகங்களான சந்திரன், சுக்கிரன் மற்றும் வீரிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய மூன்றாம் இடத்தையும், பாக்கியஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்பதாம் இடத்தையும் மற்றும் அயன சயன போக ஸ்தானமான பன்னிரெண்டாம் ஸ்தானத்தையும் தொலைதூரப் பயணம் செல்ல காரணமாகிறது.

6.  திருமணத்திற்குப் பின் வெளிநாடு வாசம் எவ்வளவு காலம்?
ஒரு சிலர் திருமணம் ஆனபின் வெளிநாடு செல்லும் யோகம் இருந்தாலும் அவர்கள் நிரந்தரமாகக் குடியுரிமை வாங்க முடியாது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டும் தங்கிவிட்டு மீண்டும் தன் தாய் நாட்டிற்கு வந்துவிடுகிறார்கள். ஒரு சிலருக்கு அங்கேயே நிரந்தரமாகத் தங்கி குடியுரிமையையும் வாங்கி விடுகிறார்கள். இதற்கெல்லாம் ஜாதகத்தில் யோகம் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

7. வெளிநாட்டு மாப்பிள்ளையா என்று அறிந்துகொள்வது எப்படி?
பொதுவாக ஜோதிட விதிப்படி பொதுவாக மேஷம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம், மீனம் இந்த ராசிக்காரர்கள் பெரும்பான்மையாக வெளியூர் அல்லது வெளிநாடு அடிக்கடி செல்வதைப் பார்க்கலாம். ஆனால் மற்ற ராசிக்காரர்கள் செல்ல முடியாதா என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றும். மற்ற ராசிக்காரர்களின் ஜாதகத்தை மேலோட்டமாக பார்த்துவிட்டு அவர்கள் செல்ல முடியாது என்று சொல்லக்கூடாது. மேலும், மேற்கூறிய ராசிகள் வெளிநாடு செல்ல முடியாதவர்களையும் நான் பார்த்திருக்கின்றேன். 

இங்கு நாம் குறிப்பாகப் பார்க்கப்போவது என்னவென்றால் ஜாதகர் திருமணத்தினால் கணவருடன் அயல்நாடு பயணம் மேற்கொள்வாரா என்பதைப் பற்றித்தான். அதற்குத்தான் மாப்பிள்ளை வெளிநாட்டில் இருப்பதற்கு முக்கிய காரண கிரகமான சந்திரனின் நிலை, சனியின் நிலை தொலைதூரப் பயணம் செல்ல காரணமான ஒன்பதாம் இடம், பன்னிரெண்டாம், இவ்விடங்களைப் பார்க்கும் கிரகம், இவ்விடங்களில் இருக்கும் கிரகம், இவ்விடங்களில் கணவருடைய ஸ்தானாதிபதி தொடர்புள்ளதா? போன்ற விவரங்களையும் நாம் தீர்க்கமாகக் கண்டுபிடிக்க வேண்டும். 

மேலும் இவ்விடங்களில் இணையும் கிரகம், மற்றும் லக்னாதிபதியின் நிலை, மற்றும் நடைபெறும் திசா புக்தியின் நிலை போன்றவற்றையெல்லாம் பார்த்து விட்டுத்தான் மாப்பிள்ளை வெளிநாடா என்று முடிவெடுக்க வேண்டும்.

8. ஜோதிடத்தில் வெளிநாடு செல்லும் யோகம் 9 மற்றும் 12ம் வீடுகளைக் கொண்டு அறியலாம். 9, 12 வீடுகள் சர ராசியாக அமைய வேண்டும் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தோருக்கு மற்ற கிரக அமைப்பு சரியாக இருந்தால் வெளிநாடு யோகம் உண்டு 9, 12 வீடுகளின் அதிபதிகள் சர ராசியில் இடம் பெற்றிருக்க வேண்டும். சர ராசிகள் மேஷம் கடகம் துலாம் மகரம். சர ராசியில் நீா் கிரகம் சந்திரன் இடம் பெற்றிருக்க வேண்டும் சர லக்னத்தில் பிறந்து லக்னாதிபதி சர ராசிகளில் அமா்ந்தால் வெளிநாடு யோகம் உண்டு லக்னாதிபதியும் 9ம் அதிபதியும் பரிவர்த்தனை அல்லது ஒருவரையொருவா் எவ்விதத்திலாவது தொடர்பு வைத்திருக்க வேண்டும்.

9ம் அதிபதி 12ம் அதிபதி உச்ச பலம் ஆட்சி பலம் பெற்று சுபா் பார்வை பெற வேண்டும். 9, 12ம் வீடுகள் அதிபதி பரிவர்த்தனை பெற்றாலும் வெளிநாடு யோகம் 9, 12ம் வீடுகளுக்குரிய கிரகங்கள் நீா் ராசிகளில் அமர்ந்து சுபா் பார்வை சுபா் தொடர்பு பெற்றாலும் வெளிநாடு யோகம் லக்னாதிபதி 9 அல்லது 12ல் அமர்ந்திருந்தாலும் வெளிநாடு யோகம் 9ம் அதிபதி லக்னம் 12ல் அமர்ந்திருந்தாலும் வெளிநாடு யோகம் 12ம் அதிபதி லக்னம் 9ல் அமர்ந்திருந்தாலும் வெளிநாடு யோகம் 7ம் வீடும் 1ம் வீடும் சேர்ந்திருந்தாலும் பலம் பெற்று சுபா் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் காற்று ராசிகள் விமான பயணத்தினை குறிக்கும் நீா் ராசிகள் கடல் பயணத்தினை குறிக்கும் காற்று ராசியும் நீா் ராசியும் 9 , 12 அதிபதிகளுடன் தொடர்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் வெளிநாடு செல்லும் யோகத்தினை தீர்மானிக்கும் கிரகங்கள் சந்திரன், குரு, ராகு, செவ்வாய் இவா்கள் 9, 12 வீடுகளுடன் சேர்ந்திருந்தாலும் தொடர்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் 9, 12ம் அதிபதிகள் 8-ம் வீட்டில் அமர்ந்தாலும் 8ம் அதிபதியோடு தொடர்புகொண்டாலும் மறைவு தேசங்களில் வாழ நேரிடும்.

9. பாவத் தொடர்புகள் மூலமாகக் கூட வெளிநாடு செல்லும் பாக்கியத்தை அறியமுடியும். இதற்கு, ஜனன கால ஜாதகம் மூலமாகவும் மற்றும் தசா புத்தி தொடர்பு மூலமாகவும், கோச்சார கிரக தொடர்பு மூலமாகவும் எப்போது சரியாகச் செல்வார் என்பதனை, அறியலாம். சரியான தசா புத்தி தொடர்பில் உள்ள ஒருவர் ஜாதகத்தில், தசை நாதனுக்கோ அல்லது புத்தி நாதனுக்கோ, வேதகன் / பாதகாதிபன் சம்பந்தப்படும் போது மிகுந்த சிரமத்தின் பேரில் வெளிநாடு செல்லவோ அல்லது போவதற்கு ஏதேனும் தடையோ கூட ஏற்படலாம். அப்படிப்பட்ட வேதகனின் தசை, புத்தி அடுத்து நல்ல யோகமான தசை / புத்தியில் முயற்சிக்குப்பின் வாய்ப்பு ஏற்படும். 

பாவத் தொடர்புகள்

கடல் கடந்த பயணம் அது படிப்பாக இருப்பின்:-  3, 9, 12 உடன் 4

கடல் கடந்த பயணம் அது சுற்றுலாவாக இருப்பின்:- 3, 9, 12 உடன் 5

கடல் கடந்த பயணம் அது வேலையாக இருப்பின்:- 3, 9, 12 உடன் 6

கடல் கடந்த பயணம் அது வியாபாரமாக இருப்பின்:- 3, 9, 12 உடன் 7

பாக்கியாதிபதி ஸ்தானமான 9ஆம் இடத்தில் ராகுவுடன் மாரகாதிபதியான சனி கூட்டணி போட்டு இருப்பின், அந்த ஜாதகரின் இறுதிக்காலம் வெளிநாட்டில் தான் என்பதை ஒருவரின் ஜாதகம், சுட்டிக்காட்டும். இக்கட்டுரையில் காணப்படுபவை ஒரு சிலவே, நன்கு ஆய்வுக்குப் பின்னரே முடிவு தெளிந்து, தெரிய வேண்டும். 
சாயியின் பாதம் பணிந்து அமைகிறேன். 

"ஜோதிட ரத்னா" தையூர்.சி.வே.லோகநாதன்

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com