சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

சைவ சமயம் வளர திருப்புமுனையாக இருந்த குணபர ஈசுவரம் கோயில்! 

DIN | Published: 13th May 2019 02:47 PM

 

பண்ருட்டிக்கு மிக அருகாமையில் உள்ளது திருவதிகை சிவாலயம். இந்த ஊரின் பெயரைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது, அட்ட வீரட்டங்களில் ஒன்றாக விளங்கும்  சிறப்பு வாய்ந்த தலமான, வீரட்டானேசுவரர் கோயில்தான். ஆனாலும், அதைவிட அந்த ஊருக்கு இன்னொரு சிறப்பு ஒன்று இருக்கிறது. அதுதான், குணபர ஈசுவரம் கோயில்  எனப்படும் பல்லவ மன்னனால் கட்டப்பட்ட கோயில்.

திருவதிகை வீரட்டானேசுரர் கோயிலில் இருந்து சுமார் 1 கி.மீட்டருக்குள் அமைந்துள்ளது இக்கோயில்.
 
இறைவன் - குணபரீசுவரர் 

இறைவி - நீலாயதாட்சி 
 
அதிகம் என்பதுவே அதிகை எனப் பொருள் கொண்டது. பிற தலங்களை விடக் கூடுதல் சிறப்புடையது எனும் பெயரில் அமைத்த ஊர் ஆகும். அதியமான் அல்லது அதிகன்  என்பது சேரர் குலத்தில் ஒரு பிரிவு என்று கூறப்படுகிறது. அக்குலத்தைச் சார்ந்த மன்னர்கள் அதிராசர் எனப்பட்டனர். அவர்கள் இக்காலத்தில் தருமபுரி எனப் பெறும்  தகடூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தனர். அம்மன்னர்களில் ஒருவர் இக்கோயிலைக் கட்டியமையால் அதியரைய மங்கலம் எனப்பெயர் பெற்றது எனக்  கருதப்படுகிறது
 

நிருபதுங்க பல்லவர் காலத்தில் இவ்வூர் அதியரையமங்கலம் என்றும் முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தில் அதிராசமங்கலம் என்றும் முதற் குலோத்துங்க சோழன்  காலத்தில் அதிராமங்கலியபுரம் என்றும் மணவிற் கூத்தனான காலிங்கராயனின் திருப்பணிகளைக் கூறும் பாடல்களில் அதிகை என்றும் குறிக்கப்பெற்றுள்ளன. இப்படி  திருவதிகை ஆனதற்குப் பல பெயர்க் காரணங்கள் உண்டு.
 
இந்த திருவதிகையின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது இந்த குணபரஈச்சரம் திருக்கோயில். திருநாவுக்கரசரால் சைவனாக மாறிய மகேந்திரவர்மன் கடலூர் பாடலிபுத்திரம் எனும் திருப்பாதிரிபுலியூரில் இருந்த சமணப்பள்ளிகளை இடித்து திருவதிகையில் தன் விருதுப் பெயரான குணபரன் என்னும் பெயரில் குணபரஈச்சுரம் என்னும் சிவன் கோவிலை எடுப்பித்தான். சேக்கிழாரின் பெரியபுராணம் மூலம் மகேந்திரவர்மன் கட்டிய கோவிலை அறிய முடிகிறது. பல்லவர் கால கோயில் சிதைவுற,  பாண்டியர் காலத்தில் செங்கல் கோயிலாகக் கட்டப்பட்டது. பின்பு அவையும் இடிந்துபோக தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலைச் சுற்றி சமண சிற்பங்கள் இருந்துள்ளன. தற்போது அவை இங்கு இல்லை. 
 
தற்போது திருப்பாதிரிப்புலியூர் என அழைக்கப்படும் அன்றைய பாடலிபுத்திரத்தின் ஜைன மடத்தில் சிம்ம சூரி என்ற ஜைனப் பெரியார் இருந்துவந்தார். இந்த ஜைன  மடத்துக்குதான் பின்னர் மருள்நீக்கியார் தலைவராகிறார். அப்போது அவருடைய பெயர் ‘தருமசேனர்’ பின்னர், மருள்நீக்கியார் தன் தமக்கையால் சைவசமயத்துக்குத் திரும்புகிறார். ‘திருநாவுக்கரசர்’ என்ற பெயர் பெறுகிறார். சிவபெருமானைப் போற்றிப் பாடத்தொடங்குகிறார். 

இதனால் வெகுண்ட சமணர்கள் அரசன் துணையோடு அவருக்குத் தீங்கு செய்கிறார்கள். அவர் அனைத்தையும் இறைவர் அருளால் வெல்கிறார். சமணர்களுக்குத் துணையாக நின்ற மகேந்திரவர்மன் மனம் மாறி பாடலிபுத்திரத்திலிருந்த சமணர் பள்ளிகளை இடிக்கிறான். அவற்றைக்கொண்டு திருவதிகையில் ‘குணபரவீச்சரம்’ என்ற திருக்கோயிலைக் கட்டுகிறான் குணபரன் என்பது மகேந்திரவர்ம பல்லவனின் சிறப்புப் பெயர்களில் ஒன்று. ஈச்சரம் என்று சிவபெருமானின் ஆலயங்களை அழைப்பர்.
 
பல்லவ மன்னன் நாவுக்கரசரை வணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டு சைவ மதத்தையும் சார்ந்தான். இதனை உணர்த்தும் பெரியபுராண பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
       
புல்லறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும்
பல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறிய
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்து
வல்லமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான்
 
வீடுபேறு என்ற நிலையை சமண மதம் ஏற்பதில்லை. எனவே வீடு அறியா சமணர் என்று சேக்கிழார் இங்கே குறிப்பிடுகின்றார். காடவன் என்பது பல்லவ மன்னர்களின்  பொதுவான பெயர்.
       
வீடறியாச் சமணர் மொழி பொய் என்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின் கண் கண்ணுதற்குப்
பாடலிபுத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
கூட இடித்துக் கொணர்ந்து குணபரவீச்சரம் எடுத்தான்

இக்கோயில் பல காலங்களில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. பாண்டியர்கள், பாளையக்காரர்கள் எனப் பலர் இக்கோயிலைத் திருப்பணி செய்துள்ளனர்.

கோயில் கிழக்கு நோக்கியது, கருவறை, உயர்ந்த முகப்பு மண்டபம் என உள்ளது. முகப்பு மண்டபத்தின் வெளியில் நந்தியும் பெரிய விநாயகரும் உள்ளன. கொடிமரம்  இல்லை. கருவறையில் பல்லவர் கால லிங்கமாக பதினாறு பட்டைகள் கொண்ட சோடச லிங்கம் ஆறடி உயரத்திலும், பத்து அடி அகலவாட்டிலும் உள்ளார். கோயிலில் வேறு  தெய்வங்கள் இல்லை. தென் புறத்தில் வடக்கு நோக்கிய பெருமாள் சன்னதி உள்ளது. ஓரிடத்தில் நின்று சிவனையும், பெருமாளையும் தரிசிக்க இயலும். அம்பிகை தெற்கு  நோக்கிய கருவறை கொண்டுள்ளார். 

வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன் சன்னதி தற்போது அமைக்கப்பட்டுள்ளது. சண்டேஸ்வரர் உள்ளார். பிற தெய்வங்கள் சுதையால் செய்யப்பட்டுள்ளன. சில சிதைவுற்ற  சிலைகள் வடபுறம் வைக்கப்பட்டுள்ளன. ஒரு லிங்க பாணம் தனித்து உள்ளது. ஒரு நவக்கிரக சன்னதியும் உள்ளது. 

சைவ சமயம் வளர பெரும் திருப்புமுனையாக அமைத்துள்ள இக்கோயிலை அன்பர்கள் அனைவரும் தரிசித்து மகிழ வேண்டும். 
 
- கடம்பூர் விஜயன் 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்
காஞ்சிபுரம் அருகே  12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு
ஆம்பூரில் இன்று அத்திவரதர் தரிசனம்
தேவஸ்தானத்துக்கு வாகனம் நன்கொடை
ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்துக்கான வாகனப் பட்டியல்