ஆத்மாவின் ஆசையை ஜோதிடத்தால் அறிய முடியுமா?

ஜோதிடத்தில் ஆத்ம காரக கிரகம் என்றால் என்ன? எந்தெந்த கிரகங்கள் ஆத்ம காரகர்களாக வருவர்?
ஆத்மாவின் ஆசையை ஜோதிடத்தால் அறிய முடியுமா?

1. ஜோதிடத்தில் ஆத்ம காரக கிரகம் என்றால் என்ன? எந்தெந்த கிரகங்கள் ஆத்ம காரகர்களாக வருவர்? அப்படி வந்தால், அவர்கள் ஜாதகர்களுக்கு அளிக்கும் பலன்கள் என்ன? எந்தெந்த வீடுகளில் இந்த ஆத்ம காரக கிரகங்கள் இருப்பின் என்னென்ன பலன்கள்? இவற்றைப் பற்றி இந்த கட்டுரை விளக்குவதாக இருக்கும்.

2. ஆத்ம காரகா, என்றால் சொந்தமாக (OWN SELF)மற்றும் ஆன்மா (SOUL) எனப்படும். ஜனன ஜாதகத்தில், சூரியன் தான் இயற்கை ஆத்ம காரகர். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் எந்த ஒரு கிரகம் அதிகபட்ச பாகையைப் பெற்றிருக்கிறதோ, அதுவே அந்த ஜாதகரின் சர - ஆத்மகாரகர் எனக் கருதப்படும். (CHARA-ATMAKARAGA). ஜோதிடத்தில் சர-ஆத்ம காரகர், என்றால் ஆத்மாவின் ஆசை என பொருள்படும். (SIGNIFICATOR OF THE SOUL's DESIRE). ஆத்மா, எனப்படுவது, நமது உடல், அதன் அமைப்பு  மற்றும் அதன் செயல்பாடுகள் என்பவற்றை வரையறுக்கும், இதன் காரணமாகவே, ஆத்ம காரக கிரகம் என்பது, லக்கினம், மற்ற கிரகங்களைக் காட்டிலும், மிக முக்கியமானதாகும். இந்த ஆத்ம காரக கிரகம், ஒருவரின் கர்மாவுடம் சம்பந்தப்பட்டதாகும், ஏனெனில் அதுவே நமது பிறப்பையும், இந்த பூலோகத்தில் நாம் இருக்கும் இருப்பையும் கூறுவதாகும். ஒருவரின் ஜனன ஜாதகத்தில், இந்த அதிக பாகைப் பெற்ற ஆத்மகாரக கிரகமே, அந்த ஜாதகத்தில் அரசனாகக் கருதப்படும். இதுவே அந்த ஜாதகரை, வழி நடத்திச் செல்லும். அந்த ஜாதகரின் குண நலன்கள், செய்கைகள் யாவும் இதனைச் சார்ந்ததே ஆகும்.

3. எந்தெந்த கிரகங்கள் ஆத்ம காரகர்களாக வருவர்? அப்படி வந்தால், அவர்கள் ஜாதகர்களுக்கு அளிக்கும் பலன்கள் என்ன? நவக்கிரங்களில், கேதுவைத் தவிர மற்ற 8- கிரகங்களும், அதாவது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் ராகு இவர்களே ஆத்ம காரர்களாக வருவர். கெடுதல் செய்யும் பாப கிரகங்கள் ஆத்ம காரர்களாக வந்தால், அது ஆன்மீக வளர்ச்சிக்கு அதிக அளவு கொண்டுசெல்லும். அதுவே, நன்மை செய்யும் சுப கிரகங்கள் ஆத்ம காரர்களாக வந்தால், மேற்சொன்ன அளவை விட குறைவானதாகவே ஆன்மீக ஈடுபாடு இருக்கும். உதாரணத்திற்குக் கூறுவோமே ஆனால், ஸ்ரீல ஸ்ரீ பிரபுபாதர் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்களுக்கு ராகுவே ஆத்ம காரக கிரகமாக அவர்களின் ஜனன கால ஜாதகத்தில் இருந்துள்ளது. 

4. வக்கிரம் பெற்ற ஒரு ஆத்ம காரகர், ஒரு ஜாதகரின், இந்தப் பிறவியின் ஆசையின் ஆணிவேராக இருப்பதைச் சுட்டிக் காட்டும். இதனை, அந்த கிரகத்தின் இயற்கைத்தன்மையை பொறுத்தே அந்த ஆத்ம காரக கிரகம் அமையும். உதாரணத்திற்கு, வக்கிரம் பெற்ற செவ்வாய் ஒரு ஜாதகருக்கு ஆத்மகாரகர் என வந்தால், அந்த ஜாதகர், ஒரு போர்க்களத்தில் வெற்றியடைய வேண்டும் என்றோ அல்லது அவர் கலந்துகொள்ளும் போட்டியில் வெற்றி வாகை சூடவேண்டும் என்றோ, அதிக ஆசை கொண்டிருப்பார். அதேபோன்று, வக்கிரம் பெற்ற சனி, ஆத்ம காரகராக ஒருவரின் ஜனன ஜாதகத்தில் வருமே ஆயின்,  அந்த ஜாதகரின் மனதில் பகிரங்கமாக வெளித்தோன்றும் ஆசைகள் என்னவென்றால், அவரை விட வயதில் மூத்தோர்களுக்குச் சம்பந்தப்பட்ட ஏதேனும் செய்யத் தோன்றும் மற்றும் பழைய அறிவார்ந்த விஷயங்களை புதிய பாட்டில்களில் அடைத்துச் சொல்லித் திரிவார்கள்.

5. எப்பொழுது, வக்கிர நிலை பெறுகிறதோ, ஆசை என்பது மிகத் திடமான ஒன்றாக இருப்பதோடு, அதுவே வாழ்வின் எல்லா திசைகளுக்கும் செல்ல காரணம் ஆகிவிடும். இந்த சனி வக்கிர நிலை பெற்று வரும் ஜாதகருக்கு, இன்னொரு பொருள் பட, கூறவேண்டுமாயின், வருத்தம். இந்த வருத்தத்தை ஜாதகர் மற்றவர்களுக்கு அளிப்பதாகவே இருக்கும், அதிலும் தனக்கு குரு / ஆசான் போன்றோருக்கு அல்லது முக்கியமாக வயதில் மூத்தோருக்கு வருத்தத்தை அளிப்பார். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது யாதெனில் அந்த ஜாதகருக்கு கெட்ட நேரம் நடந்து கொண்டுள்ளது என்றும் அவரின் எந்த காரியத்திலும் / செயலிலும் வருத்தமே மிஞ்சும் என்பதனை அறியவேண்டும். இதற்கு சரியான பரிகாரம் என்னவென்றால், வெறுப்பற்ற அணுகுமுறையை, மற்றையவரின் செயலுக்கும் வார்த்தைகளுக்கும் பின்பற்றினாலும், ஜாதகர் தான் உண்டு தன்வேலை உண்டு என்ற பாணியில் செயல்படும் போதும் சரியான தீர்வாக இருக்க முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் ஜாதகர் ஆன்மீக உள் உணர்வை அளிக்கும் எனலாம். 

6. சூரியன் ஆத்ம காரகராக வரும் பட்சத்தில், அந்த ஜாதகர், தமது தற்பெருமைகளை அடக்கிவைத்து தாழ்மையான எண்ணம் கொள்வாராயின் மிகச்சிறப்புப் பெறுவார்.

சந்திரன் ஆத்ம காரகராக வரும்பட்சத்தில், அந்த ஜாதகர், மற்றவர்களை உபசரிப்பதிலும், நன்கு கவனிப்பதிலும் இருப்பதோடு, கருணையோடு இருப்பது சாலச் சிறந்ததாகும்.

செவ்வாய் ஆத்மகாரகராக வரும் பட்சத்தில், அந்த ஜாதகர், எல்லாவிதமான வன்முறை செயல்களிலிருந்து விலகி இருப்பதோடு, அகிம்சை வழியில் தன்னை நடத்திச்செல்வதில் உறுதி பூணவேண்டும்.

புதன் ஆத்ம காரகராக வரும் பட்சத்தில், அந்த ஜாதகர், தமது பேச்சை அடக்கிக் கொள்வதோடு, எந்த காலத்திலும் உண்மையைப் பேசுவதே குறிக்கோளாய் இருத்தல் நன்று. 

குரு ஆத்ம காரகராக வரும் பட்சத்தில், அந்த ஜாதகர், எப்போதும் ஆச்சரியங்களை, எந்த விஷயத்திலாவது தமக்கு குருவாக வரும் நபர்களையும், ஒரு மனைவி கணவரையும் மதிக்கச் செய்வதோடு, குழந்தைகளுக்கு அதிக அக்கறை மற்றும் பாதுகாப்புடன் நடந்து கொள்வதே சாலச் சிறந்ததாகும்.

சுக்கிரன் ஆத்ம காரகராக வரும் பட்சத்தில், அந்த ஜாதகர், கண்டிப்பாக மிகவும் சுத்தமான குண நலன்களைப் பெற்றிருப்பதோடு, சட்டத்துக்குப் புறம்பான ஆசை கொள்வதிலும் மற்றும் பாலின தொடர்பு கொள்வதிலும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

சனி ஆத்ம காரகராக வரும் பட்சத்தில், அந்த ஜாதகர், மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் வருத்தத்தை / துயரத்தை அளித்தல் கூடாது, அதற்கு பதிலாக மற்றவர்களின் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால், நன்மையே.

ராகு ஆத்மகாரகராக வரும் பட்சத்தில், அந்த ஜாதகர், மற்றவர்களை எளிதில் ஏமாற்றுபவராகவே இருப்பார், எனவே மற்றவர்களிடம் சூது /வாது தன்மைகளை நீக்கியும் பரிசுத்தமான மனதுடனும் பலகுவராயின், நல்லதே நடக்கும். 

7. ஆத்ம காரக கிரகம் என்பது, ஒருவரின் ஆன்மாவை பற்றி விளக்குவதே ஆகும். எனவே ஆத்ம காரக கிரகமானது மிகவும் வலிமையுடையதாக இருப்பதே மிகவும் நல்லது. ஏனெனில் பரமாத்மாவின் ஒரு அங்கமான ஆத்மாவை மோக்க்ஷத்திற்கு அழைத்துச் செல்லும் பாதையை காண்பிப்பது அதுவே ஆகும். எந்த ஒரு ஜாதகர் / ஆத்மா போனபிறவியில் அதிக நன்மைகளைச் செய்தும், மற்றும் மோக்க்ஷப் பாதையை நோக்கி சென்றுகொண்டிருப்பவர்களின் ஜனன கால ஜாதகத்தில் ஆத்மகாரக கிரகம் வர்கோத்தமம் பெற்றோ அல்லது உச்சம் பெற்றோ இருப்பதைக்காண முடியும். அவ்வாறு, மோக்க்ஷப் பாதையை நோக்கி சென்றுகொண்டிருப்பவர்களின் ஜாதகத்தில் காணும் ஆத்ம காரக கிரகம் எந்த விதத்திலும் ஆசை மற்றும் எதிலும் நாட்டம் கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். பொதுவாக ஆத்மகாரக கிரகம் இவற்றிற்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லை.

8. எந்தெந்த வீடுகளில் இந்த ஆத்மகாரக கிரகங்கள் இருப்பின் என்னென்ன பலன்கள்? வலுப்பெற்ற, ஆத்மகாரக கிரகம், நவாம்ச லக்கினத்தில் இருப்பின் அந்த ஜாதகர், பெரிய அரச குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். நவாம்ச லக்கின அதிபதியும் இதனுடன் சேர்ந்திருப்பின், அரசராகவே இருப்பார். ஆத்மகாரக கிரகம் நவாம்ச லக்கின சாரம் பெற்றிருப்பின் அரச குடும்பத்தாருடன் நட்பு பெற்றிருப்பார்.

ஆத்மகாரக கிரகம், இரண்டாம் இடத்தில் இருப்பின் அந்த ஜாதகர், மிகவும் ஆன்மீக ஈடுபாடுடன் இருப்பார் மற்றும் துறவியைப் போல் வாழ்வார். சனி வலுவாக இருப்பின், துறத்தல் முழுமைபெறும். சுக்கிரன் வலுவாக இருப்பின், கடுமையான நடவடிக்கைகள் ஆற்றுபவராக இருப்பார். 

ஆத்மகாரக கிரகம், மூன்றாம் இடத்தில் இருப்பின் அந்த ஜாதகர், ஜாதகர் பணக்காரராக இருப்பார். பல நிறுவனங்களை நடத்தி வெற்றி காண்பார். சக்தி வாய்ந்த பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். 

ஆத்மகாரக கிரகம், நான்காம் இடத்தில் இருப்பின் அந்த ஜாதகர், ஒரு கர்ம யோகி ஆவார். சந்திரனும், குருவும் வலிமை  பெற்றிருந்தால், அவர் புகழ் வாய்ந்தவராயும், சூரியன் வலிமையுடையவராயின் ராஜயோகத்தையும், சனி வலிமை பெற்றிருந்தால், கடுமையாக உழைக்கும் நபராயும் இருப்பர். 

ஆத்மகாரக கிரகம், ஐந்தாம் இடத்தில் இருப்பின் அந்த ஜாதகர், நேர்மையுடையவராயும், தர்மம் பரிபாலனம் செய்பவராயும். சூரியன் வலிமைப் பெற்றிருந்தால், பல நல்ல யோகங்களைப் பெற்றிருப்பார். அவரின் தந்தையின் ஆசீர்வாதம் என்றென்றும் இவரை, பாதுகாத்து இருக்கும். 

ஆத்மகாரக கிரகம், ஆறாம் இடத்தில் இருப்பின் அந்த ஜாதகர், தொல்லை பல பெற்றவராகவும், நோய்வாய்ப்பட வேண்டியதாயும் இருக்கும். பௌர்ணமி நாளன்று உபவாசம் இருப்பதும், சத்யநாராயணன் பூஜை செய்வதும், உண்மையே (OM TAT SAT) பேசுவதும் தான் இதற்குச் சிறந்த பரிகாரமாய் இருக்கும். 

ஆத்ம காரக கிரகம், ஏழாம் இடத்தில் இருப்பின் அந்த ஜாதகர், நல் இதயம் பெறுவதற்கும், பல மகிழ்ச்சி பெறவும், ஆசீர்வதிக்கப்பட்டவர். சுக்கிரன் வலிமை பெற்றிருந்தால், இவரின் திருமண வாழ்வு ஒரு பெரிய ஆசீர்வாதமும், அதன் பின்னர் இவரின் வாழ்வு பல நலம் பெறவும் செய்யும். 

ஆத்ம காரக கிரகம், எட்டாம் இடத்தில் இருப்பின் அந்த ஜாதகர், உடல் வலிமையற்றவராகவும், பல தொல்லைகளை அடைபவராகவும், போர்க்களத்தில் தோல்வி பெறுபவராகவும் இருப்பார். பௌர்ணமி நாளன்று உபவாசம் இருப்பதும், சத்யநாராயணன் பூஜை செய்வதும், உண்மையே (OM TAT SAT) பேசுவதும் தான் இதற்குச் சிறந்த பரிகாரமாய் இருக்கும். ஆத்ம காரக கிரகம், ஒன்பதாம் இடத்தில் இருப்பின் அந்த ஜாதகர், அதிர்ஷ்டம் மிக்கவரும், வசதியானவரும், மிக்க பக்தியுள்ளவரும் ஆவார்.

ஆத்ம காரக கிரகம், பத்தாம் இடத்தில் இருப்பின் அந்த ஜாதகர், நல்ல வீடு, மற்றும் நல்ல இதயத்தையும் பெற ஆசீர்வதிக்கப் பெற்றவர். இவரின் குடும்பத்திற்கு இவர் ஒரு தூண் ஆக இருப்பதோடு, சந்திரன் வலிமை பெற்றிருந்தால், தாயின் ஆசீர்வாதமும் பெற இவருக்கு ஒரு கூடுதல் நன்மைப் பிறக்கும். 

ஆத்ம காரக கிரகம், பதினொன்றாம் இடத்தில் இருப்பின் அந்த ஜாதகர், தைரியசாலி, போரில் வெற்றி அடைபவர், எந்த பணியையும் செய்யும் ஆற்றல் இருக்கும். செவ்வாய் வலிமைப் பெற்றிருப்பின் ராஜயோகமே. 

ஆத்மகாரக கிரகம், பன்னிரெண்டாம் இடத்தில் இருப்பின் அந்த ஜாதகர், மிகப்பெரிய பணக்காரராகவும், லட்சுமி ஆசீர்வாதம் கிடைக்கப் பெற்றவராயும் இருப்பார். இதிலிருந்தே நீங்கள் இப்போது அறிந்திருப்பீர்கள், ஆத்ம காரக கிரகம், ஒரு முதன்மைப் பெற்ற, முக்கியமான ஒன்று என. ஆத்ம காரகர், வலிமைப் பெற்றிருப்பின், மற்ற காரக கிரகங்களும் நன்மையே  அளிக்கும். மற்றும், வலிமை குறைந்த கிரகங்கள் தமது, பாதகமான முடிவுகளை முழுமையாகத் தராது. அதேபோல், ஆத்ம காரகர், வலிமைக் குறைந்து காணப்படின், வலிமைபெற்ற கிரகங்கள் தமது, நன்மைகளை முழுமையாக அளிக்காது.

மொத்தமுள்ள 9 கிரகங்களில், கேதுவைத் தவிர மற்ற எல்லா கிரகங்களும் ஆத்ம காரக கிரகங்கள் பெறும் நிலையை அடையும். ராகு, இந்த நிலைக்குத் தள்ளப்பட்டாலும், அது பெற்ற பாகையிலிருந்து, 30 பாகையைக் கழிப்பது ஒன்றே, அதன் காரக நிலையை அறிய ஏதுவாகும். ஒரு ஆன்மாவின், ஆழ்மனதின் நிலையை அறிவிப்பதே, ஆத்ம காரக கிரகம் ஆகும். அப்படிப்பட்ட, கிரகத்தின் தெய்வத்தை வணங்கிச் செயல்படுவதே, ஒரு ஜாதகரின் பாதகமான / கடினமான நேரங்களில் கைதூக்கி விடும் என்றால், அது மிகை ஆகாது. சாயியின் பாதம் பணிந்து அமைகிறேன்.

"ஜோதிட ரத்னா" தையூர். சி.வே.லோகநாதன்

தொடர்புக்கு: 98407  17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com