பாசம் வைப்பது தவறா? பாசத்தை ஏன் அறுக்க வேண்டும்?

சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் 'பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே' என்று சிவனைத் துதிக்கிறார். 
பாசம் வைப்பது தவறா? பாசத்தை ஏன் அறுக்க வேண்டும்?

சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் 'பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே' என்று சிவனைத் துதிக்கிறார். 

பாசம் வைப்பது தவறா? பாசத்தை ஏன் அறுக்க வேண்டும்? இதனைப் பற்றி சிறிது சிந்திக்கலாம். மனிதன் மற்றவர்களிடம் பாசம் வைப்பதன் காரணம் அவர்களிடமிருந்து ஏதேனும் கிடைக்கும் என்பதால் தான்.

சுயநலத்தினால் தான் பாசம் என்ற மோகம் ஏற்படுகிறது. அதேசமயம் அந்த மனிதரின் தொடர்பு துன்பம் தருவதாகவோ, நம் மகிழ்ச்சிக்குத் தடையாகவோ இருந்துவிட்டால் மனதில் அவர் மீது வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது. 

பிறகு அவரிடமிருந்து விலகிச் செல்கிறான். அவன் எனக்குரியவன், அவனால் எனக்கு உதவி கிடைக்கும் என்று நினைக்கும் போது பாசம் வளர்கிறது. தனக்குரியவர்களாகவும், உற்றார், உறவினர் எனப் பாசத்தை வளர்கிறான். ஆனால் உண்மை என்ன?

தன்னுடைய தேகமே தன்னை விட்டுப் போய்விடும் எனும் போது அடுத்தவர் மேல் வைக்கும் பாசம் எவ்வகையில் உண்மையாகும்?

அப்போது உறவுகள் பொய்யா? என்ற கேள்வி எழலாம். பாசத்தை அடிப்படையாகக் கொண்ட உறவுகள் பொய்யே தவிர அன்பினால் தோன்றிய உறவு  உண்மையானது. அன்பினால் பிணைக்கப்பட்ட உறவு உன்னதமானது. 

பாசம் என்பது சுயநலமே தவிர அன்பு என்பது சுயநலமற்றது. பாசம் என்பது அன்பாகப் பரிமளிக்க வேண்டும். உதாரணமாக தாய் என்பது பாசம். தாய்மை என்பது அன்பு.

பகவான் இராமகிருஷ்ணர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு நல்ல உதாரணமாக இருக்கும். பகவான் இராமகிருஷ்ணரை தரிசிக்க வந்த ஒரு பெண் அவரைக் கண்டவுடன் கதறி அழத் தொடங்கினாள். பிறகுத் தன் துயரை அவரிடம் வெளியிட்டாள். அவளுக்குப் பிறந்த பல குழந்தைகளை இழந்து கடைசியாக இருந்த ஒரே மகனைப் பாசத்தைக் கொட்டி வளர்த்தாள். 

அந்த மகனும் பட்டாளத்தில் சேர்ந்து ஒரு போரில் இறந்துவிட மீளாத் துயருக்கு ஆளான அந்தப் பெண் தன் மன வேதனைகளை பகவான் இராமகிருஷ்ணர் முன் கொட்டினாள். 

அவள் அழுது ஓயும் வரை பொறுமையாக இருந்த பகவான் இராமகிருஷ்ணர் அந்த பெண்ணைப் பார்த்து மிகுந்த வாஞ்சையுடன் 'அம்மா' என்று அழைத்தார். அதுவரை பாசத்தினால் துயருக்கு ஆளாகியிருந்த அந்த பெண்ணிற்குப் பகவான் இராம கிருஷ்ணர் 'அம்மா' என்று அழைத்ததும் தாய்மை உணர்வு ஊற்றெடுத்து ஆறாய் பெருகியது.

இந்த உலகில் உள்ள அனைவரும் தனது குழந்தைகள் என்ற உணர்வு ஏற்பட்டது. தாய்மை உணர்வு என்ற அன்பு வெள்ளத்தில் அந்த பெண்ணின் துயரங்கள் யாவும் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிற்று. தாய்மை என்பது பெண்ணுக்கு மட்டும் சொந்தமானதல்ல. அது ஆணுக்கும் பொதுவான சொல். அதனால்தான் இறைவனை தாயும் ஆனவர் என்று குறிப்பிடுகிறோம்.

பாசம் என்பது தேங்கியிருக்கும் நீரைப் போன்றது. அன்பு என்பது பிரவாகம் போன்றது. ஒரு நதியில் நீரோட்டம் இல்லாதபோது தண்ணீர் ஆங்காங்கே தேங்கியிருக்கும். அதனைக் குட்டை என்று அழைப்பார்கள். ஆனால், மீண்டும் நதி பெருக்கெடுத்து ஓடும்போது தேங்கியிருக்கும் தண்ணீரும் பிரவாகத்தில் கலந்து தன் இயல்பை மாற்றிக் கொள்ளும். 

அன்பு என்பதில் பாசமும் உண்டு. ஆனால் அது ஒரு இடத்தில் தேங்கி நின்றுவிடாது. ஒரு நதிக்கரையில் வாழும் அனைத்து மக்களும் அந்த நதியால் பயனை அடைவதைப் போல உள்ளத்தில் அன்பு ஊற்றெடுக்கும் ஒருவரால் இந்த உலகமே பயனை அடையும். 

ஒரு நதியின் நோக்கம் பரந்து விரிந்த கடலில் சங்கமம் ஆவதைப் போல அன்பின் நோக்கமும் அன்பே உருவான கடலைப் போன்ற இறைவனைச் சென்று சேர்வதுதான். பாசம் என்ற பற்றை அறுத்து நம்மை அன்பு மயமாக மாற்றுபவர் ஈசன். அன்பு வேறு சிவம் வேறல்ல.. அன்பே சிவம்!!

"அன்பு சிவம் இரண்டென்பார் அறிவிலார்

அன்பே சிவமென்று ஆரும் அறிகிலார்

அன்பே சிவமென்று ஆரும் அறிந்த பின்

அன்பே சிவமென்று அமர்ந்திருந்தாரே."

                                                                    - திருமூலர்

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

- கோவை பாலகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com