புதன்கிழமை 17 ஜூலை 2019

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மே 9-இல் வைகாசி வசந்த திருவிழா தொடக்கம்

Published: 06th May 2019 12:36 AM

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) வைகாசி வசந்த திருவிழா தொடங்குகிறது.
 முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழாகும். இது வசந்த விழாவாக மே 9-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. திருவிழா நாள்களில் தினமும் கோயிலில் உச்சிகால தீபாராதனையை தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் வருகிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையை அடுத்து, வசந்த மண்டபத்தை 11 முறை சுவாமி வலம் வருதல் நடைபெறுகிறது.
 அப்போது, ஒவ்வொரு சுற்றிலும் வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ், பிரம்மதாளம், நந்தி மத்தளம், சங்கநாதம், பிள்ளைத்தமிழ், நாகசுரம், வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு, கப்பல் பாட்டு முதலியன பாடப்படும். பின்னர், சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயிலுக்கு வந்து சேர்கிறார்.
 திருவிழாவின் நிறைவு நாளான வரும் 18-ஆம் தேதி (சனிக்கிழமை) வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்படும். பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் வந்தடைகிறார்.
 அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெறும். தொடர்ந்து வசந்த மண்டபத்தை 11 முறை சுவாமி வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது.
 மகா தீபாராதனையை தொடர்ந்து தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயிலுக்கு வந்து சேர்கிறார்.
 வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு மே 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் பக்தர்கள் வசதிக்காக கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து திருப்பதிக்கு வஸ்திரங்கள் அனுப்பிவைப்பு
கருங்குழி ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஆனி மாத பௌர்ணமி விழா
பிடாரி செல்லியம்மன் கோயில் தேரோட்டம்
சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு
சாய் மந்திர் கோயிலில் குரு பௌர்ணமி பூஜை