ஜாதகத்தில் காணும் யோகங்கள் உண்மையிலேயே பலன் தருபவைகளா! (பகுதி 1)

யோகங்கள் என்பது ராசி கட்டம் எனும் (BASICAL CHART)அமைப்பில் உருவாவது தான் என்ற போதும்,
ஜாதகத்தில் காணும் யோகங்கள் உண்மையிலேயே பலன் தருபவைகளா! (பகுதி 1)

1. யோகங்கள் என்பது ராசி கட்டம் எனும் (BASICAL CHART)அமைப்பில் உருவாவது தான் என்ற போதும், அதன் நிலைத்தன்மை அல்லது உறுதியாகச் செயல்படும் தன்மையானது, நவாம்ச சக்கரம் மற்றும் பாவச்சக்கர அடிப்படைக்கொண்டே தெரியவரும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது எனும் இந்த 9 கிரகங்களே யோகங்களுக்கு ஆதார சக்தி ஆகும். சுப யோகங்கள், அசுப யோகங்கள் ஆகிய இரண்டுமே இந்த 9 கிரகங்களும் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள நிலைகளைப் பொறுத்ததே ஆகும். யோகம் அளிக்கவேண்டிய கிரகங்கள் பாவ சக்கரத்தில் பாவ மாற்றத்தில் இருந்தால் யோக பங்கமாகிறது. யோகங்களைப் பற்றி அறிந்துகொள்ளும் போதே யோக பங்கங்களைப் பற்றியும் சேர்த்தே அறிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் உண்மையிலேயே ஜாதகருக்கு யோகம் உள்ளதா அல்லது இல்லையா என அறிய முடியும்.

2. யோகங்களினால் அடையும் நன்மைகள்: யோகம் என்பது தான் ஜாதக அடிப்படையில் மனித வாழ்க்கை நிலையை உயர்த்தும் விஷயம் ஆகும். யோகங்கள் அமைவது பூர்வஜென்ம, சுப கர்ம, பாபா கர்ம அடிப்படையிலும், முன்னோர் செய்த நல்வினை, மற்றும் தீவினை அடிப்படையில் தான். யோகங்கள் என்பது குறுக்கு வழியில் வந்து விடுவதல்ல. கடையில் விற்கும் பொருளுமல்ல, காசு கொடுத்து வாங்கி விடலாம் என்பதற்கு. ஒருவர் தான் செய்த பூர்வ ஜென்ம வினைப்பயன்களின் அடிப்படையில் கிரகநிலைகளின் ஜாதக அமைப்புப்படி, பிரம்ம தேவர் எழுதிய விதியே ஆகும். இல்லாத யோக பலத்தை, எந்தவிதமான வழிமுறைகளை மேற்கொண்டாலும், யோகத்தைக் கொண்டுவர முடியாது என்பது தான் உண்மை. ஒரு ஜாதகர் கஷ்டப்படுவதும், சுகப்படுவதும், அவர் தமக்குப் பெறும் யோகபாவங்களின் அடிப்படையில் தான்.  

3. சுப கிரகங்கள், சுப ஸ்தானங்களில் இருந்து யோகம் அளித்தால் தான் யோக பலன் கிட்டும். மாறாக, சுப கிரகங்கள், அசுப ஸ்தானங்களில் இருந்து யோகம் அளிப்பதாக இருப்பின் யோக பலன் கிட்டாது. ஒருவரின் ஜாதகத்தில், யோக பலங்கள் இருந்தால்தான், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும். யோக பலம் என்பது கொஞ்சமும் இல்லாத அஷ்ட தரித்திர ஜாதகத்தை, எந்தவிதமான குறுக்கு வழிகள் மூலமும், நல்ல நிலைக்கு உயர்த்தவே முடியாது. ஒருவரின் நன்நடத்தையினாலும், இறை வழிபாட்டின் மூலமாகவும், இறைவனின் அருளாலும், வேண்டுமானால் மாறலாம். 

4. யோக பலத்தை அபிவிருத்தி செய்துகொள்ள முடியுமா? ஆம், யோக பலத்தை அபிவிருத்தி செய்துகொள்ள முடியும், அதாவது, கிரக வழிபாடு, தெய்வ வழிபாடு, தெய்வீக எந்திர பிரதிஷ்டை, உரியச் சரியான நவரத்தின கல் அணிதல், முறையான வாஸ்து உள்ள வீடு அமைத்துக் கொள்ளல் மூலமாக தமக்கு கிடைக்கும் யோகத்தை, அபிவிருத்தி செய்துகொள்ள முடியும். இருப்பினும், எந்த அளவுக்கு அபிவிருத்தி என்பதும் அந்த ஜாதகமே, கிரக நிலைகளின் படி நிர்ணயம் செய்து வைத்திருக்கும். விதியின் நியதிக்கு மாறாக எந்த நிகழ்வுகளையும் சாதாரண மனிதன் என்றில்லாமல், உபாசனா சக்தி, மாந்த்ரீக சக்தி, ஆவிகளின் தொடர்பு, சித்துக்கள் அறிந்திருத்தல் போன்றவற்றால் கூட நிகழ்த்திவிட முடியாது என்பதே உண்மையிலும் உண்மை. 

5. யோக பாவங்களின் வகைகள்:- யோக பாவங்களில் நிரந்தர யோக பாவம், தற்காலிக யோகபாவம் என்று உள்ளது. ராஜ யோகம் மட்டுமே நிரந்தர யோகம் ஆகும். மற்ற யோகங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொடங்கி பலன் அளித்து மறைந்துவிடும். அது தசாக்களின் நிலையை அனுசரிப்பதாகும். கால சர்ப்பம் என்பது தீமை அளிக்கக் கூடியது என்ற போதும், அது கால சர்ப்ப யோகம் என்றே குறிப்பிடுவர். 

6. யோக பங்க நிலைகள்:- யோகத்தை அளிக்கும் கிரகங்கள், பகை, நீச்சம் போன்ற நிலையிலிருந்தால் யோகம் பங்கம் ஏற்படும். அஸ்தமனம், வக்கிராஸ்தமனம், வக்கிரம், கிரக யுத்தம் ஆகியவற்றில் இருப்பது, ராசி அடிப்படையில் திக் பலம் பெறும் ராசிக்கு நேர் எதிரில் இருப்பது பாவ மாற்றத்தில் இருப்பது கிரக அவஸ்தை, மற்றும் திதி சூனிய ராசியில் இருப்பது பாபகர்தாரி யோகத்தில் உள்ளது, கால சர்ப யோகத்தில் இருப்பது பாப கிரகங்களின் வலிமையான பார்வையில் இருப்பது யோகம் அளிக்கும் கிரகம் அசுப மறைவு ஸ்தானமான 3, 6, 8, 12-ல் இருப்பது. இவை ஒரு சிலவே, இந்த நிலைகளில் சிக்கும் யோக கிரகங்கள் நேரடியாகவே யோக பங்க நிலை ஏற்படுத்தி விடும். 

7. மூல நூல்களில் கூறப்படும் கிட்டத்தட்ட 3,600 யோகங்கள், இவை யாவற்றிற்கும் தலையாய விளங்குவது பஞ்ச பூத கிரகங்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஐந்தும் தான். அவை தனித்தனியாக ஏற்படுத்தும் யோகம் தான் பஞ்ச மகா புருஷ யோகம் எனப்படும். சூரியனும் சந்திரனும் தனியாக இந்த இருவரும் எந்த யோகத்தையும் அளிக்காவிட்டாலும், மேற்கூறிய அந்த பஞ்ச கிரகங்களின் கூட்டமைப்பில் தான் யோக நிலைகள் ஏற்படும். சூரியனும், சந்திரனும் ஆட்சி, உச்சம் பெறுவதால் கிடைக்கும் பலன் தவிர யோகம் என்ற அடிப்படையில் எதுவும் அளிப்பதில்லை. சூரியனும், சந்திரனும் இருவரும் இணைந்திருந்தால் அமாவாசை என்றும், 180 டிகிரியில், எதிரெதிராக இருப்பின் பௌர்ணமி என்றும் கருதப்படும், அவ்வளவே. ராகு, கேதுக்கள் யோக நிலைகள் ஏதும் அளிப்பதில்லை.

8. அடுத்து பஞ்ச மகா புருஷ யோகம் உருவாகும் விதமும், அதனைப் பெறும் நிலைகளையும் , அதனால் ஒருவருக்குக் கிடைக்கும் பலன்களைப் பற்றியும் அடுத்த கட்டுரையில் காண்போம். சாயியின் பாதம் பணிவோம், எல்லா நலனும் அனைவரும் பெறுவோம்.

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே. லோகநாதன்

தொடர்புக்கு : - 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com