ஜோதிடம் நம்பிக்கையா! அவநம்பிக்கையா!!

நமக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்பதற்காக அந்த விஷயமே இல்லை என்பது எப்படி சரியாகும்.
ஜோதிடம் நம்பிக்கையா! அவநம்பிக்கையா!!

1. நமக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்பதற்காக அந்த விஷயமே இல்லை என்பது எப்படி சரியாகும். ஜோதிட சாஸ்திரம் ஒரு பெரிய கடல். இதில் ஏகப்பட்ட எண்ணிலடங்கா பரிமாணங்கள் உள்ளது. அதாவது விதிகள், விதி விலக்குகள், யோகங்கள், யோக பங்கங்கள், சுப ஆதிபத்திய நிலைகள், அசுப ஆதிபத்திய நிலைகள் போன்ற பல உள்ளது. ஏதோ எங்கேயோ ஒரு சிலர் கூறும் பலன்கள் நடக்கவில்லை என்பதற்காக ஜோதிட சாஸ்திரமே பொய் என்று ஆகிவிடாது.

2. மனித வாழ்வில் ஏகப்பட்ட ரகசியங்கள் உள்ளது. மனித ஜீவன் கருவாக உரு தோன்றிய உடனே, அதன் வாழ்க்கையின் ரகசியங்கள், விதி என்ற வடிவில் (தலையெழுத்து) படைக்கும் கடவுள் பிரம்ம தேவரால் பதிவு செய்யப்பட்டு விடுகிறது. அந்த பதிவின்படி தான் மாறாமல் நிகழ்வுகள் நடந்து வரும். அந்த விதியின் நிகழ்வுகளை, மதியால் வெல்லலாம் என்று கூறினாலும், அப்படி மதியால் வெல்லும் நிகழ்வும் அந்த விதியினுள் அடங்கி இருந்தால் மட்டுமே தான் சாத்தியம் ஆகும். இப்படி ரகசியமாக உள்ள நிகழ்வுகளை ஒரளவேணும் அறிந்து கொள்ள உதவுவதே ஜோதிட சாஸ்திரமாகும். ஜோதிட சாஸ்திரம் மூலம், விதியை முன்கூட்டியே சொல்ல முடியும். ஆனால் அதனை வெல்ல முடியாமல் மதி மௌனம் காக்கும். அந்த மௌனத்தைக் கலைப்பதே ஜோதிடத்தை நன்கு கற்று அனுபவம் வாய்ந்த ஒரு சிறந்த ஜோதிடனின் பணியாகும். 

3. ஒரு ஜீவன், கருவான உடனே நவக்கிரகங்களின் செயல்பாடுகள் அந்த கருவுக்கு ஆரம்பமாகிவிடுகிறது. எனினும், அது, மறைவாகவே நிகழ்வதால், அது அறிவுக்குப் புலன் ஆவதில்லை. அந்த கரு உருவாகி ஜெனித்ததும் நவக்கிரக நிகழ்வுகள், செயல்பாடுகள் வெளிப்படை ஆகின்றது. ஒரு ஜீவன் பிறந்த நேரத்தின் அடிப்படையில், ஜாதகம் கணித்து கிரக நிலைகளை அறிந்து அந்த ஜீவனின் பலபலன்களைக் கூறுவது ஜோதிட சாஸ்திரம் ஆகும். இது முழுவதும் கிரகங்களின் சஞ்சார நிலைகள் எனும் வான சாஸ்திர அடிப்படையில் ஆனது. இதில் எந்த கலப்புமே இல்லை என்று அறுதியிட்டு உறுதியாக கூறலாம்.

4. மனித வாழ்க்கை என்பது பிரம்மதேவன் அளித்த ரகசியமாக இருட்டிலேயே உள்ளது. நாளை என்ன நடக்கும் என்பதனை விட, அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பதையே அறிய முடியாத நிலையில் தான் மனித வாழ்க்கை ரகசியமாகவே உள்ளது. மனித ஜீவன்களைப் பொறுத்தவரை இன்னவர் தான் துணையாக வரவேண்டும் என்பது கூட பிரம்மனால் நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றது. வாழ்க்கையின் ஒவ்வொரு சிறு நிகழ்வுகளும் கூட விதி என்னும் நியதியின் படி தான் நடைபெறுகின்றது. மாற்றுவதற்கான சாத்தியமே இல்லை. மாறவேண்டும் என்ற விதியும் இருந்தால் தான் மாற்ற முடியும். மாறும்!. 

5. இறைவன் அனைத்து ரகசியங்களையும் வெளிவிடுவதில்லை. பல்வேறு ஜாதகக் கணக்கீட்டின் மூலம் கிரக சஞ்சார அடிப்படையில் நல்ல நிபுணத்துவம் பெற்ற ஜோதிடர் மூலம் வெளிப்பட வைக்கிறார். வெளிப்பட வேண்டும் என்பதும், இன்னார் மூலம் வெளிப்படவேண்டும் என்பதும் கூட அந்த விதியின் நியதியே. ஒரு விஷயத்தை இன்ன காலத்தில் இன்னவர் தான் கூறவேண்டும்! அதன் மூலம் அந்த விஷயம் வெளிப்பட வேண்டும், என்ற விதியின் நியதிதான். 

6. ஜோதிடர் ஒருவர் கூறுவதையே மற்றவரும் கூறுவார் என்று எதிர்பார்க்கவும் முடியாது. மாறாக மற்றவர் இவர் கூறாத வேறு எந்த விஷயத்தையும் கூறிவிட முடியும். 
எனவே ரகசியங்கள் வெளிப்பாடு, விதியின் நியதிப்படியே தான் நிகழ்கிறது என்பதனை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். உலகில் பிறந்த அனைவருக்குமே ஒரே மாதிரியான சுக - துக்கம், யோக - அசுப யோக வாழ்வு, அமைந்து விடுவதில்லை. 

7. ஜோதிடம் என்பது நம்பிக்கையின் மூலாதாரம். பகுத்தறிவு பெட்டகம் நாம் தான் என வீம்புக்கு வெளிப்பேச்சில் இருப்பவர்களும், யாரும் அறியாமல், வேறு நபரிடம் கொடுத்துக்கூட தமக்கு எப்படி எதிர்காலம் அமையும் எனவும், விசாரிப்பதை நாம் காணுகிறோம். உண்மையில், ஜோதிடம் என்னவெல்லாம் தகவல்களை அறிவிக்கிறது  எனச் சிலவற்றை, நாம் பார்க்கலாம். 

  • 1) கொடுக்கப்பட்ட ஜனன ஜாதகம் யாருடையது ? ஆணா / பெண்ணா / திருநங்கையா 
  • 2) ஜாதகரின் குல தெய்வம் ஆணா / பெண்ணா ?
  • 3) குலதெய்வம் வழிபாடு எத்தகையது ?  படையலை / பலியிடுதலா 
  • 4) குலதெய்வம் கோவில் தற்போதுள்ள நிலை- முறையான வழிபாடு நடக்கிறதா / இல்லையா  !
  • 5) ஜாதகர் குல தெய்வ வழிபாடு தொடர்கிறார் இல்லையா / வெறுக்கிறாரா !
  • 6) ஜாதகருக்கு யோகங்கள் உள்ளதா / இல்லையா
  • 7) ஜாதகருக்குரிய தோஷங்கள் என்னென்ன ?
     
  • 8) ஜாதகரின் கல்வி நிலை எவ்வாறு ?
     
  • 9) அரசு வேலையா  / சுய தொழிலா 
     
  • 10) வரப்போகும் கணவன் / மனைவி எப்படி இருப்பார் உருவம் /குணம் / வரும் திசை                     

8. மேலேக் கூறியது சிலவே, ஆனால், இதனைக் காண நேர, கால அவகாசம் மட்டுமில்லாமல், காண வருபவரிடம் பொறுமை நிச்சயம் தேவை. ஜோதிடரும் மனிதர் தானே, அவருக்கும் மற்றவர்களைப்போல் உடல் உபாதை, குடும்பச் சூழல் அனைத்தையும் தாண்டித்தான் பலன்களைச் சொல்ல முடியும். சில போது ஒரு சிலரின் கர்ம பதிவுகளை வெளிக்கொணர்ந்து சொல்லாவிடில் அதனால் ஏற்படும் பாதிப்பு ஜோதிடரையேச் சாரும் என்பதனை எத்தனைப் பேருக்குத் தெரியும்.

அதனால் தான் பெரும்பாலான ஜோதிடர்கள் உண்மை என்னவென கூறாமல் ஒரு மண்டலம் (48 நாள், அதாவது 27 நட்சத்திரம், 12 ராசி, 9 கிரகங்கள் இவைகளின் கூட்டே) சில பல பூஜைகள் / கோவில்கள் போன்றவற்றைச் செய்யவோ / போய்வரவோ சொல்வார்கள். இந்த கால அவகாசத்தில், ஒரு ஜாதகரின் தோஷ நிவர்த்தி பெறுவதோடு, தரை இறங்கிய தொடர் வண்டியை மறுபடி தண்டவாளத்தில் ஏற்றியது போல் செய்து, வாழ்க்கைப் பயணத்தைத் தொடரச் செய்வர். 

9. ஆகையால், ஜோதிடம் நம்பிக்கைக்குரியதே. அதனால் பலன் அடைந்தோர் பலர், வெற்றி கொண்டோர் பலர், தமது வாழ்க்கையை நெறிப்படுத்தியவர்கள் பலர். எனவே ஒவ்வொருவரும் இனி பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு குறிப்புகளான தேதி, மாதம், வருடம், நேரம், பிறந்த ஊர் போன்றவற்றை சரியான முறையில் எழுதிப் பத்திரப்படுத்திவிட்டால், பிரச்னை வரும் நேரம் அது கைகொடுக்கும், வாழ்வில் கைதூக்கி விடும். 

சாயியை பணிவோம், எல்லா வளமும் பெறுவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன்

தொடர்புக்கு: 98407  17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com