செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

அள்ளிக்கொடுக்கும் அக்ஷ்ய த்ருதியை!

DIN | Published: 03rd May 2019 12:47 PM

 

வட இந்தியாவை மையமாகக் கொண்டு வைகாச மாதத்தில் (நமக்குத் தென்னிந்தியாவில் சித்திரை மாத அமாவாசைக்குப் பின்) 3-ம் நாள் வரும் திதியை "அக்ஷ்ய த்ருதியை"  என்பர். செல்வத்தை அள்ளித்தருபவளான மஹாலெஷ்மிக்கு மிகவும் பிடித்தமான நாள். இதனை இந்தியாவின் பல மாநிலங்களில் அஹ்டி, அக்ஹா டீஜ், தந்தேராஸ்,  பரசுராம் ஜெயந்தி, எனப் பல பெயர்களில் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். 

இந்தியாவிலுள்ள இந்துக்கள் மற்றும் ஜைனர்களுக்கு மிகவும் உன்னதமான நாள். இந்த நாளில் பல முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளது. மஹேஸ்வர புத்ரன் விநாயகர்  தன்னுடைய தந்தத்தினால் மஹாபாரதத்தை எழுத ஆரம்பித்த நாள். பத்து அவதாரங்களில் கோபத்துடனேயே இருந்தவரான பரசுராமர் அவதரித்த நாள். மஹாபாரதத்தில்  பாண்டவர்களின் வனவாசத்தில் அனைவருக்கும் உணவளித்த 'அக்ஷ்ய பாத்திரம்' இறைவனால் கொடுக்கப்பட்ட நாள். 

உள்ளம் கவர் கள்வன் ராதாகிருஷ்ணனின் பால்ய நண்பனான சுதாமா (குசேலன்) தன் வறுமையை எடுத்துக்கூறி உதவி கேட்க நினைத்துத் தான் கொண்டுவந்த அவலினை,  கிருஷ்ண பரமாத்மா இருந்த அரச சூழ்நிலையைப் பார்த்து லஜ்ஜையாகி தராமல் இருந்தபோது, கண்ணன் எனக்கு என்ன கொண்டு வந்தாய் என உரிமையோடு கேட்க,  சுதாமனோ அவலை மறைக்க, சுதாமாவிடமிருந்து அவலைப் பிடுங்கி ருசித்தான். ஒவ்வொரு பிடியாக அவல் பரந்தாமனின் உள்ளே செல்லச்செல்ல ஒரு நொடியில்  குசேலனின் குடிசை, மாடமாளிகையாகவும், கூட கோபுரங்களாகவும், செல்வச்செழிப்பும் நிறைய ஆரம்பித்த நாள்.

மனிதனின் பாவச்சுமைகள் ஏறிக்கொண்டே செல்ல அதனை நீக்கும் நோக்கில் தேவர்கள் அனைவரும் நெற்றிக்கண்ணன் மஹாதேவனிடம் வேண்டினர். அவரும் அவரின்  சகதர்மினியான கங்காமாதாவை பூமிக்குச் செல். உன்னை யார் வணங்கி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு உன் நல்லாசியை வழங்கு எனக்கூற, அதன் தொடர்ச்சியாக  ஆர்ப்பரித்துக் கிளம்பிய கங்கா மாதாவின் வேகத்தைத் தடுத்து சிவனார் தன் தலையில் உள்வாங்கி, இந்த நன்னாளில் பூமியில் சாந்தமாக விழச்செய்த நாள்.

இந்தியாவின் பல பாகங்களில் புதுக்கணக்கு, புதிய தொழில் போன்றவை மஹாலெட்சுமியை வழிபட்டு தொடங்குகிறார்கள். இந்த நாள் வளர்ச்சிக்கு உகந்த நாள் எனக்  குறிப்பிடுவதால் ஜெபம், யக்யம், வேதாரம்பம், பூஜை எடுத்துக்கொள்ளுதல் போன்றவை நடைபெறும். அக்ஷ்ய த்ருதியை நாள் ரோகிணி நட்சத்திரத்திலும், புதன்  கிழமையிலும் சேர்ந்து வந்தால் அந்த நாளை ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் உன்னதமான நாளாக சொல்கிறார்கள். மேலும் நம் ஜோதிட சாஸ்திரத்தில் யுகாதி, விஜய  தசமி மற்றும் அக்ஷ்ய த்ரிதியை நாளில் எந்த நல்ல காரியங்களையும் தொடங்கலாம் என்றும் இந்த நாட்களில், நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை  என்றும் சிலர் கூறுகின்றனர். அக்ஷ்ய த்ரிதியை நாளில் சத்ய யுகம் முடிந்து, த்ரேதா யுகம் ஆரம்பித்ததாம்.

சார்தாம் யாத்திரை என்பது கங்கோத்ரி (கங்கை உற்பத்தியாகும் இடம்), யமுனோத்ரி (யமுனை உற்பத்தியாகும் இடம்), கேதார்நாத் (இது சிவனாரின் 12 ஜோதிர்லிங்கங்களில்  முதன்மையானது), பத்ரிநாத் (பத்ரிநாராயணர், தன்னுடன் லக்ஷ்மி, குபேரன், நாராத மஹாரிஷி, உத்தவருடன், நர-நாராயணராக, யோக முத்ரையுடன் சங்க சக்ரதாரியாக  வீற்றிருந்து அருளாட்சி செய்கிறார்) ஆகிய நான்கு முக்கியமான ஸ்தலம் இமயமலைச் சாரலில் அமைந்துள்ளது. இவர்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 13,000 அடி  உயரத்தில் பனி படர்ந்த மலையின் மேலே அருளாட்சி செய்து வருகிறார்கள். இங்கிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் சீன எல்லை ஆரம்பிக்கிறது. இவை அனைத்து  ஊர்களும் செப்டம்பருக்குப்பின் பனியினால் மூடப்பட்டுவிடுவதால் அங்கு வாழும் மக்கள் அனைவரும். சுவாமியிடம் விளக்கேற்றி வைத்து வழிபட்டு கீழே வந்துவிடுவார்கள். 

பின் ஏப்ரல்/மே-யில் வரும் அக்ஷ்ய த்ரிதியை அன்று சென்று கோயிலைத் திறப்பார்கள். அங்கு அருளாட்சி செய்து வரும் இறையனாருடன், நம் பாரத தேசத்தின் எல்லைப்  பாதுகாவலர்களான ராணுவ வீரர்கள் மட்டுமே இருப்பார்கள். சுமார் 6 மாதங்களுக்கு முன் ஏற்றி வைக்கப்பட்ட அந்த விளக்கானது அப்படியே அணையாமல் இருக்கும். அதீத  ப்ரேம பக்தி அந்த பகுதி வாழ் மக்களிடம் உள்ளது. அந்த ஒரு நாள், அந்த பகுதிவாழ் மக்களுக்கு மட்டுமே தரிசனம் கிட்டும். மற்ற வெளியூர்களிலிருந்து வருபவர்கள்  மறுநாள் முதல் தான் கிடைக்கும்.

இப்படிப்பட்ட பக்தியுடன் கூடிய அக்ஷ்ய த்ரிதியை அன்று தங்க வியாபாரிகள் தன் வியாபாரத்திற்கு மிக அழகாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நாள் ஈகைக்கான நாள்.  'அட்ஷய பாத்திரா' என்றால் பிறருக்குக் கொடுத்தல் என்று பொருள். அதனால் தங்கம் வாங்குவதை மட்டும் நினையாமல் தங்கம், வெள்ளி மற்றும் தானியங்களை வாங்கி  நம்மால் முடிந்ததை ஏழை எளியோருக்கு தானம் செய்வதால் சாதாரணமாகக் கிட்டும் நல்ல புண்ணிய பலனைக்காட்டிலும், ஏற்றமிகு புண்ணியம் கிட்டும் என்று தன் கீதையில் பார்த்தசாரதி பார்த்தனுக்குக் கூறுகிறான். அவனடி பின்பற்றுவோம் ஏற்றம் பெறுவோம். வரும் மே மாதம் 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை அக்ஷ்ய த்ரிதியை வருகிறது. ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனை வணங்குவோம் அவர்களின் பேரருளைப் பெறுவோம்.

- எஸ். எஸ். சீதாராமன்

மொபைல்: 94441 51068

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் மாங்கனி இறைத்து வழிபாடு
இன்று நள்ளிரவில் சந்திரகிரகணம்: சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!
திருப்பதிக்குச் செல்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா!
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை முதல் ராமாயண பாராயணம்
அத்திவரதர் பெருவிழா: மருத்துவ முகாம்களில் இதுவரை 12,500 பேருக்கு சிகிச்சை