திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை சோமாஸ்கந்தர் வீதியுலா வந்தார்.
கபில தீர்த்தம் அருவிக்கரையில் அமைந்துள்ள இக்கோயிலை தேவஸ்தானம் நிர்வகிக்கிறது. இக்கோயிலில் கடந்த திங்கள்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கியது.
அதன் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை கபிலேஸ்வரர் சோமாஸ்கந்தராக, காமாட்சி அம்மனுடன் இணைந்து மாடவீதியில் வலம் வந்தனர். மதியம் 12 மணிக்கு உற்சவர்களுக்கு பல்வேறு அபிஷேகப் பொருள்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவர்கள் இரவு அதிகாரநந்தி வாகனத்தில் காமாட்சி அம்மன் உடன் வர கபிலேஸ்வரர் மாடவீதியில் வலம் வந்தார். வாகனச் சேவை காண வந்த பக்தர்கள், உற்சவர்களுக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினர்.
இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாகனச் சேவை காண வரும் பக்தர்களுக்காக கோயிலில் தேவஸ்தானத்தின் அன்னமாச்சார்யா திட்டம், இந்து தர்ம பிரசார பரிஷத் ஆகியவை சார்பில் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.