அத்தி வரதரை  எதிர்பார்த்து தமிழகம்...

40 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதரின் தரிசனம் தொடர்பான செய்திகள் வெளிவந்தபோது இது குறித்துத் தெரியாத பலருக்கும் அவரைத் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.
அத்தி வரதரை  எதிர்பார்த்து தமிழகம்...

40 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதரின் தரிசனம் தொடர்பான செய்திகள் வெளிவந்தபோது இது குறித்துத் தெரியாத பலருக்கும் அவரைத் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.  இதனால் வரும் ஜூலை முதல் தேதியில் இருந்து ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை அனைவரின் சிந்தனைகளும் அத்திவரதரை நோக்கியே இருக்கும். அனைத்துச் சாலைகளும் காஞ்சிபுரம் நோக்கியே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

சென்னை: உலக நாடுகளில் இந்தியாவுக்கென உள்ள மிகப் பெரிய பெருமை ஆன்மிகம்தான். அந்த வகையில் நமது நாட்டின் வட, தென் திசைகளில் நடைபெறும் கும்பமேளாக்கள் அனைவரின் கவனத்தையும் கவருகின்றன. ஒவ்வொரு முறையும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் இவ்விழாக்களில் பங்கேற்கின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தின் தனிப்பெரும் சிறப்புக் கொண்ட ஆன்மிகத் தலமான காஞ்சிபுரத்தில்  40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதரை தரிசிப்பதற்கான வாய்ப்பு ஆன்மிக அன்பர்களுக்கு இந்த ஆண்டு கிடைக்க உள்ளது.

காஞ்சிபுரத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது.  இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலின் ராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவராக வரதராஜப்பெருமாளும் பெருந்தேவி தாயாரும் உள்ளனர். கோயில் தீர்த்தங்களாக வேகவதி ஆறு,  அனந்தசரஸ் குளம் ஆகியவை விளங்குகின்றன. காஞ்சிபுரத்தின் தெற்கே அமைந்துள்ள இக்கோயிலில் ஐராவதம் யானையே மலைவடிவம் கொண்டு நாராயணனைத் தாங்கி நின்றதால் இத்தலம் அத்திகிரி என்றும் அழைக்கப்படுகிறது. தங்கப்பல்லி, வெள்ளிப் பல்லி தரிசனம் இக்கோயிலின் மற்றொரு சிறப்பு.

இக்கோயிலின் மிகச்சிறப்பாகப் போற்றப்படுவது அனந்தசரஸ் திருக்குளத்தின் உள்ளே வீற்றிருக்கும் ஆதி அத்தி வரதர். இவரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க முடியும். திருக்குளத்தின் உள்ளே தன்னை மறைத்துக் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஆதி அத்திவரதர் 40 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.

இந்த அற்புத நிகழ்வுக்காகக் கடந்த இரு மாதங்களாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் ஆன்மிக அமைப்புகளும், தன்னார்வ அமைப்புகளும்  இணைந்து தீவிர ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகின்றன.

அனந்த சரஸ் குளத்தில் உள்ள நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு அருகே உள்ள பொற்றாமரைக்குளத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. குளத்தில் துள்ளிக் கொண்டிருந்த மீன்களும் பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டு பொற்றாமரைக்குளத்தில் விடப்பட்டுள்ளன.

40 ஆண்டுகளுக்குப் பின் பக்தர்களுக்குக் காட்சியளிக்க உள்ள அத்தி வரதர், வரும் ஜூலை முதல் தேதியில் இருந்து ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை சயனக்கோலம் மற்றும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க உள்ளார். 

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காட்சிதரும் இந்த நிகழ்வுக்காக உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் காஞ்சிபுரத்தை நோக்கிப் படையெடுக்கத் தயாராகி வருகின்றனர்.

இதற்கு முன் கடந்த 1979-இல் இந்நிகழ்ச்சி நடைபெற்றபோது சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. அப்போதைய சூழ்நிலையை விட இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்பாடு பலமடங்கு அதிகரித்திருந்தாலும் பக்தர்கள் கூட்டமும்  பல மடங்கு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தங்கும் விடுதிகள்

காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகளில் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆக. 17-ஆம் தேதி வரை முன்பதிவு நிறைவடைந்துள்ளதாகத் தெரிகிறது. அத்திவரதரை நீருக்குள் இருந்து எடுக்கும் நிகழ்ச்சியிலும் அவரைத் தரிசிக்கும் நாள்களிலும் பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் வெளியூர் பக்தர்கள் பலர் முன்கூட்டியே முன்பதிவு செய்துவிட்டனர். தேவை அதிகரித்துவிட்டதால் கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

பஜனை கோஷ்டியினர்

பெருமாள் என்றவுடன் நம் அனைவருக்குமே நினைவுக்கு வருவது பஜனைக் குழுவினர்தான். பக்தர்களைக் கவர்ந்திழுக்கும் ராகம், தாளம் மற்றும் இசைக்கருவிகளுடன் ஒவ்வொரு நாளும் 100-க்கும் மேற்பட்ட பஜனைக்குழுவினர் பெருமாளின் பாடல்களை பாடத் தயாராகி வருகின்றனர்.

தற்காலிக பேருந்து நிலையங்கள்

பக்தர்களின் வசதிக்காக 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். ஒவ்வொரு பஸ் நிலையத்தில் இருந்தும் நகருக்குள் வந்து அத்திவரதரைத் தரிசனம் செய்யும் பக்தர்கள் மீண்டும் சிரமமின்றிச் செல்வதற்காக நகருக்குள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் பேருந்துகளை இயக்குவதற்காக சிறப்பு ஏற்பாடுகளை போக்குவரத்துத் துறையினருடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

இது தவிர குறிப்பிட்ட இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு ஆட்டோக்கள் மற்றும் வாடகைக் கார்களுக்கும் கட்டணம் நிர்ணயிக்கவும் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது.


தீவிர ஏற்பாடுகள்

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் வைபவம் என்பதால் பல லட்சம் பக்தர்கள்   காஞ்சிபுரத்துக்கு வந்து செல்வார்கள் என்று மாவட்ட நிர்வாகம் கருதுகிறது. இதனால் பக்தர்கள் சிரமமின்றி அத்தி வரதரைத் தரிசித்துச் செல்லத் தேவையான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தீவிரமாகச் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை,  குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தேவையான பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருமண மண்டபங்கள் 
காஞ்சிபுரம் நகரத்தில் சிறியதும் பெரியதுமாக சுமார் 75 திருமண மண்டபங்கள் உள்ளன. இதில் 55 மண்டபங்கள், உரிமையாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இம்மண்டபங்களில் சிலவற்றில் மட்டும் ஆனி மாதத்தில் திருமணங்கள் ஒரு சில நாள்கள் நடக்க உள்ளன. அவற்றைத் தவிர அனைத்து மண்டபங்களுமே அத்தி வரதர் உற்சவத்துக்காக பல்வேறு தரப்பினரால் 48 நாள்களுக்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக காஞ்சிபுரம் நகர திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கச் செயலர் எல்.கிஷோர் குமார் கூறுகையில், இதற்கு முன் 1979-இல் நடைபெற்ற அத்திவரதர் உற்சவத்தை நேரில் கண்டேன். இரண்டாவது முறையாகவும் இந்த ஆண்டு காண உள்ளேன். இது மிகப் பெரிய வரம்.

காஞ்சிபுரத்தைப் பொருத்தவரையில் எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 55 மண்டபங்களும் அத்திவரதர் விழாவுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதிலும் ஒரு சில மண்டபங்களில் ஏற்கெனவே முன்பதிவு செய்தபடி திருமணங்கள் நடைபெற உள்ளன.  ஜூலை 1 -ஆம் தேதி முதல் ஆக. 17-ஆம் தேதி வரை 48 நாள்களும் அனைத்து மண்டபங்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விமானங்களிலும்...

அனந்தசரஸ் குளத்து நீரில் தன்னை மறைத்துக் கொண்டுள்ள அத்திவரதரைக் காண்பதற்கு வெளிநாடுகளில் இருந்து வருவதற்காக பல ஆயிரக்கணக்கானவர்கள் விமானங்களில் முன்பதிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஜூலை 1 முதல் ஆக. 17-ஆம் தேதி வரை சென்னைக்கு வரும் விமானங்களில் பெரும்பாலும் அத்தி வரதரைத் தரிசிப்பதற்காகவே   பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com