திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் தேரோட்டத்துக்கு தயாராகி வரும் தேர்கள்

திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் பிரமோத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 12-ஆம் தேதி..
திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் தேரோட்டத்துக்கு தயாராகி வரும் தேர்கள்


திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் பிரமோத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, சுவாமிகள் எழுந்தருளும் விதத்தில் தேர்கள் அலங்காரம் செய்யும் பணிகள் நிறைவு நிலையை எட்டியுள்ளன.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் பிரமோத்ஸவம், தேரோட்டம், தங்க காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் உள்ளடக்கி நடத்தப்பட்டு வருகிறது.

முறைப்படி திருவிழா கடந்த மே மாதம் 29-ஆம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை தர்பாரண்யேசுவரர் சன்னிதியில் தேவாரப் பாடல்கள் ஓதுவார்கள் குழுவினர் பாடிவருகின்றனர். காலையில் பல்லக்கில் சுவாமி வீதியுலாவும், இரவு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெற்று வருகிறது.

முக்கிய நிகழ்ச்சிகள் செண்பக தியாகராஜர் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளல், மறுநாள் யதாஸ்தானம் எழுந்தருளல் நிகழ்ச்சி முறையே ஜூன் 6, 7-ஆம் தேதிகளில் நடைபெற்றது. ஜூன் 7-ஆம் தேதி இரவு இந்திர விமானத்திலும், ஜூன் 8-ஆம் தேதி பூத வாகனத்திலும், ஜூன் 9-ஆம் தேதி யானை  வாகனத்திலும் புறப்பாடு நடைபெற்றது. 

திங்கள்கிழமை (ஜூன் 10) இரவு தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் மின்சார சப்பரப் படலில் (தெருவடைச்சான்) வீதியுலா நடைபெறுகிறது. பிரதான நிகழ்ச்சியாக தேரோட்டம் ஜூன் 12-ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது.சுவாமி, அம்பாள் வீற்றிருக்கக்கூடிய பெரிய 2 தேர்கள் மற்றும் விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேசுவரர் ஆகியோர் வீற்றிருக்கக்கூடிய தனித்தனி தேர் 3 என மொத்தம் 5 தேர்கள் இழுத்துச் செல்லப்படவுள்ளன. 

இதற்காக 5 தேர்களும் அலங்கரிக்கும் பணிகளாக, தேர் முகப்பில் குதிரை வாகனங்கள் பூட்டுதல் உள்ளிட்ட பணிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றன. தேர் சுற்றில் தேர்துணிக்கட்டுதல், கலசம் அமைத்தல் பணிகள் திங்கள்கிழமை நிறைவு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி பெல் நிறுவனத்திலிருந்து வல்லுநர் குழுவினர் வந்து, பிரதான தேரின் ஹைட்ராலிக் பிரேக் செயல்பாடுகளை  பரிசோதனை செய்யும் பணியை தேரோட்டத்துக்கு முதல் நாள் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டது. முதல் நாளான ஜூன் 11-ஆம் தேதி தேர் வடம் (இழுக்கும் கயிறு)  கட்டும் பணிகள் நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் தேரோட்டத்துக்கு பல்வேறு சிறப்புகள் கூறப்படுகிறது. தியாகராஜர் உன்மத்த நடனமாடும் திருக்கோயிலாக விளங்குவதாலும், நளனுக்கு விமோசனம் அளித்த தலமாகவும் திகழ்வதால், திருநள்ளாறு தேரோட்டம் காண்பது சிறந்த பயனைத் தரும் என பெருமைகள் கூறப்படுகிறது. 

தேரோட்ட நாளில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வர் என்பதை கருத்தில்கொண்டு கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை செய்துத்தரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com