22 செப்டம்பர் 2019

நிறம் மாறும் சாளக்கிராம விநாயகர் க்ஷேத்திரம் எங்குள்ளது தெரியுமா?  

By - கடம்பூர் விஜயன் | Published: 04th June 2019 12:10 PM

 

கும்பகோணம் அருகில் உள்ள அய்யாவாடியிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சிறிய தார்ச் சாலையில் 10 கி.மீ தூரம் பயணித்தால் அம்மன்குடி. அம்மன் குடிகொண்ட கோயில் என்பதால் அம்மன்குடி ஆயிற்று. 

பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில், சிவாலயங்களில் அபூர்வமாக இறைவனுக்கு இணையாக கருவறை கொண்டு இங்கு எழுந்தருளியிருக்கும் அஷ்ட புஜ துர்க்கை எட்டுக் கரங்களில் வில், அம்பு, கத்தி, கேடயம், மகிஷாசுரன் தலை, சங்கு, சக்கரம், அக்னி என ஆயுதங்களைத் தாங்கி, முகத்தில் மெல்லிய புன்னகையுடன், சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கின்றாள். இந்த கோவிலின் மூலவர் கைலாசநாதர் என்றாலும் இந்த கோவில், ஊர் ஆகியவை துர்க்கை அம்மன் கோயில், அம்மன்குடி என்றே அழைக்கப்படுகிறது.

ராஜ ராஜ சோழனின் படைத் தளபதி மும்முடி சோழன் "கிருஷ்ணன் ராமனான பிரம்மராயர்" அவர்கள் பிறந்த ஊர். ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்த ஊர் நாராயண புரம் என்றும் "ராஜ ராஜேஸ்வரம்" என்றும் "அமண்குடி" என்றும் அழைக்கப்பட்டது. இந்த கீர்த்திமான் ஆற்றின் கரையில் சமணம் பௌத்தம் சிறந்து விளங்கியதால் இந்த ஊர் அமண்குடி என அழைக்கப்பட்டிருக்கலாம்.

துளஜா மகாராஜா திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்துள்ளார். இக்கோயிலில் ஆறுகால பூஜையும் திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறவேண்டி திருவிடைமருதூரின் தென்பகுதியில் ஏழு ஊர்களை ஏழு கட்டளை கிராமங்களாக்கி அவற்றில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஆறு கால பூஜையையும் திருவிழாவையும் செவ்வனே நடத்த ஏற்பாடுகள் செய்தார்.

அய்யாவாடி கிழக்கில் உள்ள முருக்கன்குடி தொடங்கி அம்மன்குடி வரை இந்த ஊர்கள் அமைந்துள்ளன. அம்மன்குடி ஏழாம் கட்டளை கிராமம். எனினும் இது அம்மன்குடி என்றே அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் உள்ள விநாயகரின் சிற்பம் சாளக்கிராமத்தால் ஆனது. காலையில் பச்சை, மதியம் நீல நிறம், மீண்டும் மாலையில் பச்சை நிறமாக மாறிவிடும் தன்மை கொண்டது. இவர் தபஸ் விநாயகர் என அழைக்கப்படுகிறார்.

இவரைக் கொங்கணர் ‘தபசு மரகத விநாயகர்’ எனப் போற்றுகின்றார். ஆம், கையில் தபசு மாலை ஏந்தி, நாகாபரணத்தை வயிற்றில் தாங்கி வழவழப்பான சாளக்கிராம சிற்பத்தால் ஆனவர். சூரிய ஒளி விநாயகரின் சிற்பத்தில் காலையில் விழுகையில் பச்சை வர்ணமாகவும், மதியம் நீல வர்ணமாகவும், மீண்டும் மாலை வேளையில் பச்சை வர்ணமாகவும் நிற மாற்றம் ஏற்படும்.
 

நாக தோஷம் கொண்ட மானிடர் தம் தோஷம் நீக்க, பூமியில் பற்பல தலங்கள் உண்டு. ஆனால், தேவர்களுக்கு நாகதோஷம் நீங்க வேண்டுமாயின் அவர்கள் தொழுது நிற்கும் தலம் இந்த சாளக்கிராம விநாயக க்ஷேத்திரம். இவரின் துதிக்கை, தம் உடல் மீதே படாத வண்ணம் இருப்பது சகல நன்மைகளையும் தரவல்லது. 

இங்குள்ள சூரிய பகவான் குழந்தை வடிவாய், தண்டை ஆபரணத்தை அணிந்து அருள் பரிபாலிக்கின்றார். சூரியதிசை நடக்கும் ஜாதகக்காரர் இவரைத் தொழுதால் பெரிய மேன்மைகளை, பதவிகளை அடையலாம். இந்தக் கோயில் சனி பகவானையும் பைரவப் பெருமானையும் போற்றி சொல்லி வணங்குவோருக்கு பெரும் வியாதிகள் அண்டாது, வழக்குகளிலிருந்து நிவாரணம் கிட்டும் என்கின்றனர்.

நாராயண புறந்நிற்குந் 

துர்க்காபரமேச்

சுவரியை கயிலாயநாதருடன் ஏத்துவார்

தம் பிறவியஞ் சிறை யகலுமே - ஆங்கு

பாவநாசனந் நீராடி மந்தரொடு பயிர

வரை வழிபட்டோர் வாழ்வு வாடாது

தளிருஞ் சத்தியமே”

-என்பதிலிருந்து நாராயண புரம் என்ற பெயர் இந்த அம்மன்குடிக்கு முந்தைய பெயர் என அறியலாம்.

பாவநாசனம் என்ற தீர்த்தத்தில் நீராடி, மந்தர் என்ற சனி பகவானையும், பைரவப் பெருமானையும் வணங்குவோருக்கு பெருவாழ்வு சித்திக்குமே எனப் பேசுகிறார் சித்தர். 

இங்குள்ள சரஸ்வதி தேவிக்கு யோக சரஸ்வதி என்று பெயர். கம்பர், ஒட்டக்கூத்தர் போன்ற பெருங்கவிகள் போற்றிய தெய்வம் இவள்.
 
அமாவாசை, அஷ்டமி திதியில் தொழுவர் செல்வந்தராய் வாழ்வர். பௌர்ணமியில் இங்குப் பூஜிப்பவருக்குத் தக்க வயதில் திருமணம் தடையின்றி சிறப்புடன் அமையும். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் நம்பிக்கையுடன் பூஜித்து வருபவர்கள் நல்ல வேலை பெற்று வாழ்வார்கள். 

ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த அம்மன் இத்தனை சிறப்புகள் கொண்டு, அமைதியாய் சிறு கிராமத்தில் வீற்றிருக்கிறார். கிழக்கு நோக்கிய கோயில், தரைமட்டத்திலிருந்து கோயில் வளாகம் சில அடிகள் உயரமாக உள்ளது. இறைவன், அஷ்ட புஜ துர்க்கை இருவரும் கிழக்கு நோக்கிய சன்னதியில் உள்ளனர். இறைவன் எதிரில் கொடிமரம் உள்ளது. தென்புறம் கிழக்கு நோக்கிய தபஸ் விநாயகர் உள்ளார்.

கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை உள்ளனர். வடக்கில் ஆளுயர லிங்க பாணன் உள்ளது அதனைச் சுற்றி நான்கு கல் தூண்கள் உள்ளன. அம்மன் சன்னதியில் பின்புறம் ஒரு பெரிய வில்வமரம் ஒன்றும், அதனடியில் சில நாகர்களும் உள்ளனர். வடகிழக்கில் பைரவர், நவக்கிரகங்களும் உள்ளனர். தலம் தீர்த்தம், கோயில், தெய்வம் என அனைத்திலும் சிறந்து விளங்கும் அம்மன்குடி கண்டு வணங்க வாருங்கள்.

வாருங்கள் கிராம சிவாலயம் செல்வோம்.

- கடம்பூர் விஜயன் 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

திருமலைவையாவூா் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
நவக்கிரக தோஷம் விலக செய்யுங்க நவராத்திரி வழிபாடு!
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
சிதம்பர ரகசியம் என்றால் என்ன? வியப்பூட்டும் தகவல்கள்..!!
புரட்டாசி சனிக்கிழமையில் விரதமிருந்தால் ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலனாம்!