செய்திகள்

சயனக்கோலக் காட்சி இன்றுடன் நிறைவு: மதியம் 12 மணி வரை மட்டுமே பொது தரிசன அனுமதி

31st Jul 2019 02:26 AM

ADVERTISEMENT


அத்திவரதர் பெருவிழா 31-ஆவது நாளான புதன்கிழமையுடன் பெருமாள் சயனக்கோலக்காட்சி நிறைவு பெறுகிறது. பெருமாள் நின்ற கோல ஏற்பாடுகள் செய்ய இருப்பதால் புதன்கிழமை மதியம் 12 மணி வரை மட்டுமே  பொது தரிசனம் வழியாக அனுமதிக்கப்பட இருப்பதுடன், கோயில் கிழக்கு கோபுரவாசலும் மூடப்படவுள்ளது.


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.ஜூலை முதல் தேதி முதல் சயனக்கோலத்தில் காட்சியளித்த பெருமாள்  ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்து 17 நாட்களுக்கு நின்ற கோலத்தில் காட்சியளிக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்ய இருப்பதால் கோயிலின் கிழக்குவாசல் புதன்கிழமை மதியம் 12 மணியுடன் மூடப்படுகிறது.


முக்கிய பிரமுகர்கள்  புதன்கிழமை   மதியம் 3 மணி வரை  மட்டுமே அனுமதிக்கப்படுவர். மதியம் 3 மணிக்கு மேல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது தரிசனப் பாதையில் செல்லக்கூடிய பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சயனக்கோலக் காட்சி புதன்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. எனவே, வியாழக்கிழமை அதிகாலை 5 மணியிலிருந்து அத்திவரதரை நின்ற கோலத்தில்  பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 


காஞ்சிபுரத்தில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்: அத்திவரதரை புதன்கிழமை மதியம் வரை மட்டுமே சயனக்கோலத்தில் காணமுடியும். இதற்குப்பிறகு அடுத்த 40 ஆண்டுகள் கழித்து 2059-ஆண்டில்தான் அத்திவரதரின் சயனக்கோலக்காட்சியை காண முடியும்  என்பதால் காஞ்சிபுரம்  நகர்  முழுவதும் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. ரங்கசாமி திருக்குளம், திருக்கச்சி நம்பி தெரு, செட்டி தெரு, திருக்கோயில் மாட வீதிகளில் பக்தர்களின் கூட்ட நெரிசல்  இருந்தது. முக்கிய பிரமுகர்கள் வரிசையில் வி.வி.ஐ.பி. அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்களின் கூட்டமும் மிக அதிகமாக காணப்பட்டது. வி.ஐ.பி.அனுமதிச்சீட்டு வைத்திருந்தவர்கள் வி.வி.ஐ.பி. வரிசையில் செல்ல முற்பட்டதால் போலீஸாருக்கும் பக்தர்களுக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் தரக்குறைவாக பேசுவதாகவும் பக்தர்கள் கவலை தெரிவித்தனர். முக்கிய பிரமுகர்கள் வரிசையிலும் போலீஸார் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறினார்கள். காஞ்சிபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய சிறப்பு அனுமதிச்சீட்டு பெறுவதற்காக பல ஆயிரக்கணக்கானோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.

ADVERTISEMENT


நீலநிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்: அத்திவரதப் பெருவிழாவின் 30-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அத்திவரதர் சயனக்கோலத்தில் இளம் நீல நிறப்பட்டாடை அணிந்தும், அதே நிறத்தில் அங்கவஸ்திரமும் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாளுக்கென்று பிரத்யேகமாக செய்யப்பட்ட செண்பகப்பூ மாலை, அத்திப்பழ மாலை, மல்லிகை மற்றும் சம்பங்கி மாலைகளும் அணிந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
திருக்கோயில் வஸந்த மண்டபத்தில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கோயில் பட்டாச்சாரியார்கள் அத்திவரதர் உருவப் புகைப்படமும், பிரசாதமும் வழங்கினர். திருக்கோயிலில் 10 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. இவை தவிர, மேலும் 3 உண்டியல்கள் வைக்கப்பட்டன. 


முக்கிய பிரமுகர்கள் சுவாமி தரிசனம் : அத்திவரதரை சயனக்கோலத்தில் தரிசிக்க தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன், ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலைச் சேர்ந்த சுவாமி பாலமுருகனடிமை  உள்ளிட்டோர் தரிசனம்   செய்தனர். 


2.50 லட்சம் பக்தர்கள் தரிசனம்:  அத்திவரதரை செவ்வாய்க்கிழமை  2.50 லட்சம் பக்தர்கள் தரிசித்துச் சென்றனர்.

தரிசனத்துக்கு 7 மணி நேரம் காத்திருப்பு 
அத்திவரதரை பொதுதரிசனப் பாதையில் சென்று பக்தர்கள் தரிசிக்க 7 மணி நேரமும், மிக முக்கிய பிரமுகர்கள் வரிசையில்  2 மணி நேரமும், முக்கிய பிரமுகர்கள் வரிசையில் 3 மணி நேரமும் ஆனது. கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஜெயதீர்த்த வித்யா பீட உத்திராதி மடத்தின் பாடசாலை மாணவர்கள் மேல்சட்டை அணியாமல் ஒரே மாதிரியான  வண்ண உடை அணிந்து அத்திவரதரை  தரிசனம் செய்ய வந்திருந்தனர். அத்திவரதரை செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி வரை 1.35 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT