செய்திகள்

ஆடி அமாவாசையையொட்டி திருப்பூந்துருத்தியில் பிதுர் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

31st Jul 2019 01:01 PM

ADVERTISEMENT

 

பிதுர் சாப நிவர்த்தி தலங்களில் முக்கியமாக கருதப்படும் திருப்பூந்துருத்தியில் இன்று காலை முதல் பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டத்தில் உள்ளது திருப்பூந்துருத்தி. திருநாவுக்கரசரின் தேவாரத்திருப்பதிகம் பெற்ற காவிரியின் தென்கரையில் உள்ள பதினோறாவது திருத்தலமாகும். அவர் இங்கு திருமடம் ஒன்று அமைத்து பலகாலம், தங்கி, முதன் முதலில் உழவாரப்பணி செய்த திருத்தலம், சப்தஸ்தான தலங்களுள் ஒன்று. திருஞானசம்பந்தரை பூந்துருத்தி எல்லையில் நாவுக்கரசர் எதிர்கொண்டு அழைத்து அவர் வரும் பல்லக்கை தன் தோளில் சுமந்த பெருமையுடைய இத்தலத்தில்தான் சம்பந்தப்பெருமானுக்காக திருநந்தியை விலகச் செய்து இறைவன் காட்சியளித்த வரலாறும் உண்டு.

காசிப முனிவரின் கடுந்தவத்திற்கு மகிழ்ந்து அவருக்கு இறைவன் இத்தலத்தில் உள்ள ஆதி விநாயகர் சந்நிதியில் உள்ள கிணற்றில் ஓர் ஆடி அமாவாசைத் தினத்தன்று பதிமூன்று புண்ணிய கங்கை உட்பட ஜீவநதிகளை பொங்கி எழச் செய்து காசி விசாலாட்சி சமேத விஸ்வநாதராகக் காட்சி தந்தபெருமை வாய்ந்தது. அந்த புண்ணிய தினத்தில் காசியிலிருந்து கங்கை இங்கு வருவதாக ஐதீகம். பிதுர்சாபம் நீங்கவும், உலக நன்மையைக் கருதியும், அனைத்து விதத்தில் வளர்ச்சியடை வேண்டியும், இன்று சிறப்பு பூஜை, ஹோமங்கள் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

பிதுர் சாப நிவர்த்தி தலங்களில் ஒன்றாகிய திருப்பூந்துருத்தியில் ஆடி அமாவாசையன்று செய்யப்படும் பிரார்த்தனை, பித்ரு பூஜை, தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவை மிகவும் உன்னதமடைவதாகக் கூறப்படுகிறது. நமது முன்னோர்களை வழிபடும் ஒரு முறையே அவர்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு பிரார்த்தனையே தர்ப்பணம் எனப்படும். மிகவும் எளிதான அனைவரும் செய்யக்கூடிய வழிபாடாகும்.

திருப்பூந்துருத்தி சென்று பித்ரு பூஜை வழிபாட்டில் கலந்து கொள்பவர்கள் ஆலயத்தில் உள்ள ஜீவநதிகள் பொங்கிய கிணற்று நீரை தலையில் தெளித்துக்கொண்டு சங்கல்பம் செய்த பின் பூஜைகளில் கலந்துகொள்ளலாம்.

 தொடர்புக்கு: 98944 01250.

 - எஸ்.வெங்கட்ராமன்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT