செய்திகள்

அத்திப்பழம், வெண்தாமரை மாலைகளுடன் அருள்பாலித்த அத்திவரதர்

30th Jul 2019 02:57 AM

ADVERTISEMENT


அத்திவரதர் பெருவிழாவின் 29-ஆவது நாளான திங்கள்கிழமை ஆரஞ்சு நிறப் பட்டாடை அணிந்து, அத்திப்பழம் மற்றும் வெண்தாமரை மாலைகள் சூடி, முத்து கிரீடத்துடன் பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா 29-ஆவது நாளாக நடந்து வருகிறது. திங்கள்கிழமை அத்திவரதர் ஆரஞ்சு நிறப் பட்டாடையும், அதே நிறத்தினாலான அங்கவஸ்திரமும் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
அத்திப்பழம், வெண்தாமரை மாலை: காலையும், மாலையும் சகஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தது. பவளம், திராட்சை, லவங்கம் ஆகியவற்றால் செய்யப்பட்ட முத்து கிரீடமும் அணிந்திருந்தார். முத்து கிரீடத்துக்கு மேலும் அழகூட்டும் வகையில் அதன் மேலாக மலர் கிரீடமும் இருந்தது. அத்துடன் வெண்தாமரை  மற்றும் அத்திப்பழ மாலைகள் அணிந்து பக்தர்களுக்கு அத்திவரதர் அருள்பாலித்தார். அத்திவரதருக்கென பிரத்யேகமாக செய்யப்பட்ட பாதாம் பருப்பு,திராட்சை, சம்பங்கி மாலைகளும் அணிவிக்கப்பட்டன. தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு நன்கொடையாளர்களால் தயாரித்து வழங்கப்பட்ட அத்திவரதர் திருவுருவப் படங்களையும், புஷ்பங்களையும் கோயில் பட்டாச்சாரியார்கள் வழங்கினார்கள்.
கோயில் வளாகத்தில் மாண்டலின் ராஜேஷ் குழுவினரின் இசைக் கச்சேரியும் நடைபெற்றது.
தரிசனத்துக்கு 3 மணி நேரம்: கடந்த வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி தினமாகவும், விடுமுறை நாளாகவும் இருந்ததால் ஒரேநாளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய வந்திருந்தனர். கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு கருதி 10 ஆயிரம் பேர் வரை நிறுத்தி, நிறுத்தி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
திங்கள்கிழமை பக்தர்கள் கூட்டம் கணிசமாகக் குறைந்திருந்தது. மாலை 4 மணி வரை சுமார் 1.50 லட்சம் பேர் வரை சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பொது தரிசனப் பாதையில் அத்திவரதரை தரிசிக்க 3 மணி நேரமும், முக்கிய பிரமுகர்கள் வரிசையில் தரிசிக்க சுமார் ஒரு மணி நேரமும் ஆனது.
முக்கிய பிரமுகர்கள் தரிசனம்: திங்கள்கிழமை நீதிபதிகள், அரசு  உயர் அதிகாரிகள், திரைப்பட நடிகை கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
நாளை மட்டும் பொது தரிசனம் ரத்து
வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க இருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் செய்வதற்காக வரும் புதன்கிழமை ஒருநாள் மட்டும் மதியம் 12 மணிக்கு மேல் பொது தரிசனப் பாதையில் செல்பவர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியது: 
அத்திவரதர் வரும் 31-ஆம் தேதி வரை சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார். ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து நின்ற கோலத்தில் காட்சியளிக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது இருப்பதால் வரும் புதன்கிழமை மதியம் 12 மணிக்கு மேல்  பொதுதரிசனப் பாதையில் அத்திவரதரை தரிசனம் செய்வது ரத்து செய்யப்படுகிறது. 
முக்கியஸ்தர்கள் புதன்கிழமை மதியம் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். பொதுவரிசையில் உள்ளோர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரிசையில் உள்ளவர்கள் அனைவரும் கோயிலை விட்டு வெளியேறிய பிறகு மாலை 5 மணிக்கு  மேலாக  அத்திவரதரை நின்ற கோலத்தில் இருக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
இணையம் வாயிலாக தரிசன அனுமதிச்சீட்டு பெற்றவர்கள் மதியம் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து அத்திவரதரை நின்ற கோலத்தில் அதிகாலை 5 மணியிலிருந்து தரிசிக்கலாம்.
ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுவதால் மதியம் 3 மணிக்கு கோபுர வாசல் அடைக்கப்பட்டு கோயில் உள்ளே வந்தவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க முடியும்.
திருக்கல்யாணம் முடிந்த பின்னர் இரவு 8 மணியிலிருந்து 11 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம். இதே போல ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஆடி கருட சேவை உற்சவத்தை முன்னிட்டு சுவாமி  திருவீதியுலா  வர  இருப்பதால் மாலை 5 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசிக்க இயலாது.
ஆகம விதிகளின்படி அத்திவரதரை நின்ற கோலத்தில் காட்சியளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தற்போது சயனக்கோலத்தில் காட்சியளிக்கும் அதே வஸந்த மண்டபத்திலேயே நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
பிரதமர் அத்திவரதரை தரிசனம் செய்ய  31-ஆம் தேதி வருகை தருவதாக கூறப்படுவதற்கு அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.  2 ஐ.ஜி.க்கள், 2 டி.ஐ.ஜி.க்கள், 14 எஸ்.பி.க்கள், 48 டி.எஸ்.பி.க்கள் உள்பட இதுவரை மொத்தம் 5,118 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து நின்ற கோலத்தில் பெருமாளை தரிசனம் செய்ய அதிகமானோர் வருவார்கள் என்பதால் மேலும் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டம் அதிகமாக இருந்தால் வாழைத்தோப்பு  மற்றும் வடக்கு மாட வீதி ஆகிய பகுதிகளில் 10 ஆயிரம் பேர் வரை நிறுத்தி, நிறுத்தி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் 16 இடங்களில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து பாதுகாப்புப் பணியினை செய்து வருகின்றனர். தேவையான உதவிகளையும், வசதிகளையும்  தொடர்ந்து  கண்காணித்து பக்தர்களுக்கு உடனுக்குடன் அவர்கள் செய்து தருகிறார்கள்.
கிழக்கு மற்றும் வடக்கு மாட வீதிகள்,டோல்கேட் ஆகிய பகுதிகளில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக் குழந்தைகளை வைத்திருப்போர்களுக்கென சக்கர நாற்காலிகள் வழங்கப்படுவதை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 5 ஷேர் ஆட்டோக்களும் இலவசமாக ரங்கசாமி குளம் பகுதியிலிருந்து செட்டி தெரு வழியாக கோயிலுக்குச் செல்லும் வகையில் பக்தர்களை ஏற்றிச் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. 
பெருமாளை தரிசனம் செய்த பிறகு உணவருந்தலாம் என்று சிலர் சாப்பிடாமல் வந்து மயக்கமடைகின்றனர். அவர்கள் யாரும் வெறும்  வயிற்றோடு  சுவாமி  தரிசனம்  செய்ய  வர  வேண்டாம். அத்திவரதர்  திருவிழா தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.
கூடுதல் தீயணைப்பு வீரர்கள் வரவழைப்பு
 காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பெருவிழாவையொட்டி 15 தீயணைப்பு வாகனங்களும், 360 தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது கூடுதலாக 50 வீரர்கள் வரவழைக்கப்பட்டிருப்பதாக தீயணைப்புத்துறை இயக்குநர் சி.கே.காந்திராஜன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
அத்திவரதர் பெருவிழா பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்ய வந்திருந்த அவர் இது குறித்து கூறியது:
அத்திவரதர் பெருவிழாவுக்கான பாதுகாப்புப் பணிகளில் தமிழகம் முழுவதுமிருந்து 40 பாதுகாப்பு அலுவலர்களும் 360 தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்காலிகப் பேருந்து நிலையங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், கோயிலின் உள்புறம், வெளிப்புறம்  என 15 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
முதியோர் மற்றும் சோர்வு காரணமாக மயக்கம் அடைந்தவர்களுக்கு  முதலுதவி செய்தல், மருத்துவ மையங்களுக்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்க உதவி செய்தல், மின் கசிவினால் ஏற்படும் விபத்து மற்றும் தீ விபத்து ஏற்படும்போது தீயணைப்பான்களால் அணைத்தல் போன்ற பணிகளை செய்துவருகின்றனர். இப்பணிகûளை மேற்பார்வையிட சுழற்சி முறையில்  மாவட்ட அலுவலர்கள், துணை மற்றும் இணை இயக்குநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதியோர்களை சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்து அழைத்து வரும் பணிகளையும் தீயணைப்பு வீரர்கள் செய்து வருகின்றனர்.
இதுவரை 3 தீ விபத்துகள், இரு இடங்களில் பாம்புகளைப் பிடிக்க உதவுதல், மயங்கி விழுந்தோரைக் காப்பாற்றக் கோரி வந்த 30 அழைப்புகளை ஏற்று உதவுதல் என பல்வேறு பணிகளையும் தீயணைப்புத்துறையினர் செய்துள்ளனர். பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்த மேலும் 50 தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்திவரதருக்கு அணிவிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பாதாம் பருப்பு மற்றும் ஏலக்காய் மாலைகள். (வலது) உலர் திராட்சை, பவளம், லவங்கம் ஆகியனவற்றால் செய்யப்பட்ட முத்து கிரீடம். 

ADVERTISEMENT
ADVERTISEMENT