செய்திகள்

திருத்தணியில் ஆடி கிருத்திகை தெப்பத்திருவிழா

27th Jul 2019 02:36 AM

ADVERTISEMENT


 திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா மற்றும் முதல் நாள் தெப்பத்திருவிழாவையொட்டி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்தனர். காவடிகளுடன் மலைக்கோயிலுக்கு வந்த பக்தர்கள், 5 மணி நேரம் பொது வழியில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
 திருத்தணி முருகன் கோயிலில், ஆடி கிருத்திகை விழா கடந்த  24-ஆம் தேதி ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. வியாழக்கிழமை ஆடி பரணி விழாவும், இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஆடி கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெற்றது. ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை, 4 மணிக்கு மூலவர் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து தங்கக் கீரிடம், தங்க வேல், பச்சை மாணிக்க, மரகதக் கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதேநேரத்தில் காவடி மண்டபத்தில் உள்ள உற்சவர் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மதியம் 12.30 மணிக்கு, திருப்பதி திருமலை மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்களில் இருந்து, திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு பட்டு வஸ்திரம் கொண்டு வந்து சாத்தப்பட்டது.  
2 லட்சம் பக்தர்கள் தரிசனம்:ஆடி கிருத்திகை விழாவையொட்டிதமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, அன்னக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து தோளில் சுமந்தபடி அரோகரா கோஷம் முழங்க, பம்பை, சிலம்பாட்டத்துடன் பக்தி பாடல்களை பாடியவாறு மலைக்கோயிலுக்கு சென்று மூலவரை வழிபட்டனர். வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.
அதிகளவில் பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்ததால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, 5 மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விரைவு தரிசனம் செய்ய ரூ. 200 மற்றும் ரூ.100 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆடி கிருத்திகையையொட்டி, திருத்தணி நகர் முழுவதும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் விநியோகப்பட்டது. 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழாவில் திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம்.நரசிம்மன், முன்னாள் நகர் மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன் உள்பட நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT