ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்கு அமாவாசை, பெளர்ணமி நாள்களில் ஏராளமான பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசனம் செய்வது வழக்கம்.
அதேபோல, ஆடி அமாவாசையன்று வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனத்துக்கு வருகின்றனர். இதையொட்டி மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சதுரகிரி மலையில் சுவாமி தரிசனம் செய்ய செல்வதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நிகழ் ஆண்டில் ஆடி அமாவாசை ஜூலை 31-ம் தேதி வருகிறது. இதையொட்டி ஜூலை 27 (இன்று) முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறிச் சென்று சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுச் செல்ல அனுமதியில்லை.
சதுரகிரி மலைக்கு வரும் பக்தர்களை ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மலை ஏறவும், இறங்கவும் அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. சதுரகிரி மலைக்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக வெள்ளைப்பாறை வழியாக சுந்தரமூர்த்தி சன்னதி சென்று சுந்தர மகாலிங்க சுவாமியைத் தரிசனம் செய்துவிட்டு, சன்னதிக்கு எதிரே உள்ள புதிய பாதை வழியாக வெளியே வந்து சந்தன மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்துவிட்டு இரும்புப் பாலத்தின் வலதுபுறமாக கீழே இறங்கும் வகையில் ஒருவழிப் பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.