ஆண்டாள் கிளியுடன் நீலப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்: ரூ.300 கட்டணத்தில் விரைவு தரிசனம் அறிமுகம்

அத்திவரதர் பெருவிழாவின் 19-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஆண்டாள் கிளியுடன் நீல நிறப் பட்டாடையில் அத்திவரதர் காட்சியளித்தார். 
19-ஆம் நாளான வெள்ளிக்கிழமை நீல நிறப்பட்டாடையில், ஆண்டாள் கிளியை கையில் ஏந்தி காட்சியளித்த அத்திவரதர்.
19-ஆம் நாளான வெள்ளிக்கிழமை நீல நிறப்பட்டாடையில், ஆண்டாள் கிளியை கையில் ஏந்தி காட்சியளித்த அத்திவரதர்.


அத்திவரதர் பெருவிழாவின் 19-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஆண்டாள் கிளியுடன் நீல நிறப் பட்டாடையில் அத்திவரதர் காட்சியளித்தார். 

அத்திவரதர் பெருவிழாவால் நாடு முழுவதும் அத்திவரதர் குறித்து பேசப்பட்டு வருவதோடு, நாள்தோறும் பக்தர்களின் வருகை குறைந்தபாடில்லை. இதனால், சின்னகாஞ்சிபுரம், முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை, கருக்குப்பேட்டை, வாலாஜாபாத், செவிலிமேடு, சிறுகாவேரிப்பாக்கம், ஒலிமுகமதுபேட்டை, பொன்னேரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் அதிகம் காணப்படுகிறது.

நகரப்பகுதிகளான வணிகர் தெரு, மடம் தெரு, காமராஜர் சாலை, காந்தி சாலை, திருக்கச்சி நம்பி தெரு, விளக்கொளி பெருமாள் கோயில் தெரு, கீரை மண்டபம், காவலான் கேட், மேட்டுத் தெரு, செங்கழுநீரோடை வீதி, பூக்கடைச்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் அதிக அளவில் வாகனங்களை நிறுத்திவிட்டு அத்திவரதரை தரிசனம் செய்யச் சென்று வருகின்றனர். 

வெள்ளிக்கிழமை வழக்கம் போல் கிழக்கு, வடக்கு, தெற்கு மாடவீதிகளில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து கிழக்கு கோபுரம் நுழைவு வாயிலுக்கு வந்தனர். 

2.75 லட்சத்துக்கும் மேல்..: அத்திவரதர் பெருவிழாவில் அதிகபட்சமாக கடந்த 13 -ஆம் தேதி 2.50 லட்சம் பேர் தரிசனம் செய்தனர். இதையடுத்து, வியாழக்கிழமை (ஜூலை 18) சுமார் 2.75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். பக்தர்கள் நள்ளிரவு 1.30 மணிவரை அத்திவரதரை தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. வியாழக்கிழமை தரிசனம் செய்ய முடியாதோர் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்ய வந்த பக்தர்களோடு இணைந்து கொண்டனர். தொடர்ந்து, அதிகாலை 4.45 மணிக்கு கிழக்கு கோபுர பொதுதரிசன வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

ரங்கசாமி குளத்தோடு சிற்றுந்துகள் நிறுத்தம்: தொடர்ந்து, காஞ்சிபுரத்துக்கு பக்தர்கள் அதிகம் வருகை புரிவதால் தற்காலிக பேருந்து நிலையங்களான ஒலிமுகமது பேட்டை, ஓரிக்கையிலிருந்து ரங்கசாமி குளம் வழியாக வரதர் கோயிலை அடைந்து பெரியார் நகர் வரை சிற்றுந்துகள் இயக்கப்பட்டன.  
இந்நிலையில், வரதர் கோயிலிலிருந்து ரங்கசாமி குளம் வரை அதிகமானோர் சாலையில் சென்று வந்தனர். இதனால், சிற்றுந்துகள், பேருந்துகளை இயக்க முடியவில்லை. எனவே, ஒலிமுகமதுபேட்டை, ஓரிக்கையிலிருந்து ரங்கசாமி குளம் வரையிலும், பெரியார் நகரிலிருந்து சுங்கச்சாவடி வரையிலும் மட்டுமே சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. இதனால், பக்தர்கள் சுமார் 2 கி.மீ. தூரம் வரை நடந்து மாடவீதிகளுக்குச் சென்றனர். 

திருவீதிப் பள்ளம், பெரியதோட்டம் பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தங்களில் 4 சக்கர வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் ஆங்காங்கே உள்ள தெருக்கள், சாலையோரங்களில் 4 சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
 நீல நிறப்பட்டாடையில் அத்திவரதர்: வெள்ளிக்கிழமை நீல நிறப்பட்டாடை அணிந்து, ஆண்டாள் கிளியை கையில் ஏந்தியவாறு அத்திவரதர் காட்சியளித்தார். தொடர்ந்து, நைவேத்தியம் செய்யப்பட்டு, வெட்டிவேர், முல்லை, துளசி, செண்பகப்பூ, மரிக்கொழுந்து, தாமரை உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

போலீஸார் கெடுபிடியால் முக்கியஸ்தர்கள் வரிசை சீரானது: நாள்தோறும் முக்கியஸ்தர்கள் வரிசையில்  அரசியல் கட்சியினர், அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் திரளானோர் வந்து சென்றனர்.  அதிலும், அனுமதிச் சீட்டு இன்றி காவல்துறையினரின் குடும்பத்தினர் அதிகமானோர் வந்து சென்றனர். 

இதுதொடர்பாக, நாளிதழ்களில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்தன. இதனால், மாவட்ட நிர்வாகம் அனுமதிச் சீட்டு இல்லாதோரை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டது. அதோடு, சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், வெள்ளிக்கிழமை முக்கியஸ்தர்கள் வரிசை எவ்விதப் பரபரப்புமின்றி காணப்பட்டது.

போலீஸாரின் கெடுபிடியாலும் முக்கியஸ்தர்கள் வரிசை சீராகச் சென்றது. பக்தர்கள் அதிக பட்சமாக 3 மணிநேரம் காத்திருந்து முக்கியஸ்தர்கள் வரிசையில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தனர். பொதுதரிசன வரிசையிலும் காலை முதல் இரவு வரை பக்தர்களின் வருகை சீராக இருந்தது. இதனால், எவ்வித இடையூறுமின்றி அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  

தரிசனத்துக்கு 6 மணிநேரம்: பொது தரிசன வரிசையில் கிழக்கு கோபுரத்திலிருந்து வஸந்த மண்டபம் வரை வரிசையில் வந்து அத்திவரதரை அதிகபட்சமாக 6 மணி நேரத்திலும், குறைந்த பட்சமாக 3.30 மணி நேரத்திலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

முக்கியஸ்தர்கள் தரிசனம்: அத்திவரதரை உடுப்பி புத்திகே பீடாதிபதி சுகனேந்திர தீர்த்த சுவாமிகள், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், சிபிஐ இயக்குநர் ரிஷிகுமார் சுக்லா, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, நடிகர்கள் சந்தானம், சங்கிலிமுருகன் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தனர்.

ரூ.300 கட்டணத்தில் விரைவு தரிசனம் அறிமுகம்

அத்திவரதரை விரைவு தரிசன வரிசையில் தரிசிப்பதற்காக ரூ.300 கட்டணத்தில்  இணையதளத்தில் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 18 நாள்களாக முக்கியஸ்தர்கள் வரிசையில் சென்று அனுமதிச் சீட்டு வைத்துள்ளோர், சகஸ்ரநாம அர்ச்சனைக்கு முன்பதிவு செய்தோர் உள்ளிட்டோர் தரிசனம் செய்து வந்தனர். 

இந்நிலையில், அனுமதிச் சீட்டு வைத்துள்ளோர் நாள்தோறும் மாலை 6 மணி வரையில்தான் முக்கியஸ்தர்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும், அதன்பிறகு, இரவு 10 மணிவரை விரைவு தரிசனம் செய்ய இணையதளத்தில் ரூ.300 செலுத்தி அனுமதிச் சீட்டு பெறலாம் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார். 

இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட்டது. ஆனால், மாலை நேரத்தில் பக்தர்கள் நிறைய பேர் முக்கியஸ்தர்கள் வரிசைக்கு வந்தனர். 

அப்போது, இந்த நடைமுறை எங்களுக்குத் தெரியாததால், இன்று மட்டும் எங்களை அனுமதிக்க வேண்டும் எனக்கோரி முக்கியஸ்தர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஒருநாள் மட்டும் விதிவிலக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

டிஎஸ்பியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அத்திவரதர் பெருவிழாவின் போது முக்கியஸ்தர்கள் வரிசையில் டிஎஸ்பி, ஏடிஎஸ்பி உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுபோல், ஆட்சியரின் அறிவுறுத்தல், உத்தரவுக்கிணங்க வருவாய் உள்ளிட்ட துறையைச் சார்ந்தோரும் நுழைவுச் சீட்டு சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பணிபுரியச் சென்ற வருவாய்த்துறை அலுவலர், ஆட்சியரின் உதவியாளர் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளில் பேசியும், ஆட்சியர் அளித்த அனுமதிச் சீட்டை கிழித்து பணி செய்யவிடாமல் தடுப்புகளுக்கு வெளியில் டிஎஸ்பி சரவணன் வெள்ளிக்கிழமை நிறுத்தியுள்ளார். இதைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தீயணைப்பு வீரர்கள் வரவழைப்பு
அத்திவரதர் பெருவிழாவுக்கென பாதுகாப்பு, மீட்புப் பணிகளுக்கென கோயில் வளாகம், மேற்கு, கிழக்கு கோபுரங்கள், தற்காலிக பேருந்து நிலையங்களில் தீயணைப்பு ஊர்திகளுடன் வீரர்கள் 260 பேர் பாதுகாப்பு, மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தீயணைப்புத்துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 100 கமாண்டோக்கள் பக்தர்களுக்கு உதவி புரிய வெள்ளிக்கிழமை வரவழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பக்தர்கள் மயங்கி விழுந்தாலோ, காயம் ஏற்பட்டாலோ விரைந்து சென்று முதலுதவி அளிக்க தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com