செய்திகள்

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: லட்சக்கணக்கானோர் தரிசனம்  

15th Jul 2019 02:31 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ரதவீதியில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான சுவாமி நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேர்த் திருவிழா, கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனர். சனிக்கிழமை மாலையில் சுவாமி கங்காளநாதர் தங்கச் சப்பரத்தில் வீதியுலா வந்தார். விழாவின் சிகர நிகழ்வாக தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர் மலர் அலங்காரத்துடன் சுவாமி-அம்பாள் தேருக்கு எழுந்தருளினர்.
 தேரோட்டத்தையொட்டி மாநகரப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்ததால் காலை 6 மணி முதலே பக்தர்கள் நீண்ட தொலைவில் வாகனங்களை நிறுத்திவிட்டு ரதவீதிக்கு வரத் தொடங்கினர். முதலில் விநாயகர், முருகர் தேர்கள் ரதவீதிகளைச் சுற்றி பக்தர்களால் இழுத்துவரப்பட்டு கிழக்கு ரத வீதியில் கோயில் அருகே நிறுத்தப்பட்டன. பின்பு காலை 8.45 மணிக்கு சுவாமி தேரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வடம்பிடித்து தொடங்கிவைத்தார். "ஓம் நமச்சிவாய... தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்ற முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் காந்திமதியம்மன் தேரும், சண்டிகேஸ்வரர் தேரும் வடம்பிடித்து இழுக்கப்பட்டன.
 வாகையடிமுனை, சந்திப்பிள்ளையார் கோயில் முனை உள்ளிட்ட திருப்பங்களில் மட்டும் தேர் திரும்புவதற்கு சிறிது நேரம் ஆனது. அலங்கார துணிகள், மலர் அலங்காரத்துடன் ஆடி அசைந்து வந்த சுவாமி தேர் மாலை 5 மணிக்கு நிலையை அடைந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT