செய்திகள்

தங்க நிறப் பட்டாடையில் அத்திவரதர்: மூன்று மணிநேரம் காத்திருந்து தரிசித்த பக்தர்கள்

15th Jul 2019 12:45 AM

ADVERTISEMENT

அத்திவரதர் பெருவிழாவின் 14 -ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை, நீல நிற அங்க வஸ்திரம் கொண்ட தங்க நிறப் பட்டாடையை அணிந்து அவர் காட்சியளித்தார். பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
 இவ்விழாவையொட்டி காஞ்சிபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாள்தோறும் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தவாறு உள்ளனர். சனிக்கிழமை 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். இதனால், வரும் நாள்களில் அத்திவரதரை தரிசனம் செய்ய கூடுதல் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரவேண்டும் என பக்தர்கள் சார்பில் கோரிக்கை எழுந்தது. அதன்படி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
 இந்நிலையில், அத்திவரதர் பெருவிழாவின் 14-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வழக்கம் போல் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சனிக்கிழமை வந்த பெரும்பாலான பக்தர்களை இரவு 11 மணிக்கு மேல் கிழக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கவில்லை. அத்துடன், உள்ளே அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்து அத்திவரதரை நள்ளிரவு 1.30 வரை தரிசனம் செய்தனர்.
 அதேபோல், அனுமதிக்கப்படாத பக்தர்கள் தெற்கு, வடக்கு, கிழக்கு மாடவீதிகளுக்கு அருகில் உள்ள இடங்களில் உறங்கினர். பின்னர், அதிகாலை 3.30 மணியளவில் வரிசையில் வரத்தொடங்கினர். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கிழக்கு கோபுரம் வந்தடைந்தனர். பின்பு, சரியாக 5 மணிக்கு கிழக்கு கோபுரம் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
 தங்க நிறப் பட்டாடையில் அத்திவரதர்: அத்திவரதருக்கு ஞாயிற்றுக்கிழமை நீல நிற அங்க வஸ்திரம் கொண்ட தங்க நிறப் பட்டாடையை அணிவித்து, பல்வேறு மலர்கள், துளசி ஆகியவற்றால் அலங்காரம் செய்திருந்தனர். பின்னர், நைவேத்தியம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, வஸந்த மண்டபத்தையொட்டி உள்ள வரிசைகளில் அத்திவரதரைக் காண பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, ஆழ்வார், தேசிகர் சந்நிதிகள் வழியாக நீண்ட வரிசையில் வந்த பக்தர்கள் பொதுதரிசனம் வழியாக அத்திவரதரைத் தரிசனம்செய்தனர்.
 பக்தர்கள் வருகை குறைவு: முன்னதாக, பக்தர்களின் வருகை இதுவரை இல்லாத அளவுக்கு சனிக்கிழமை அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதன்படி, கூட்டம் 3 மடங்காக இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை இரவு முதலே கிழக்கு கோபுர நுழைவுவாயிலின் இடதுபுறம் தூய்மை செய்யப்பட்டு, 220-க்கு 100 சதுர அடி பரப்பில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதனால், பக்தர்கள் எவ்வித நெரிசலுமின்றி நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
 அதேபோல், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், பொது தரிசன வரிசையில் அதிகாலை வேளையில் கணிசமான பக்தர்கள் கூட்டம் இருந்தாலும், நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் வருகை குறைந்தது. இதனால், பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
 1.5 லட்சம் பேர் தரிசனம்: அத்திவரதரை சனிக்கிழமை 1.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 தரிசனத்துக்கு 3 மணிநேரம்: அத்திவரதரைக் காண வடக்கு, தெற்கு மாடவீதிகளில் சனிக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 3 மணிநேரத்திலும், குறைந்தபட்சமாக 45 நிமிடத்திலும் தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டம் குறைவாக இருந்ததால் உள்ளூர்வாசிகள் பலர் இரண்டாவது முறையாகச் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
 கேரள ஆளுநர், தலைமை நீதிபதி தரிசனம்: அத்திவரதரை நாள்தோறும் அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் தரிசனம் செய்து வருகின்றனர். கேரள மாநில ஆளுநர் ப.சதாசிவம், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ, மாவட்ட நீதிபதிகள், சந்திரயான் விண்கலத் திட்ட முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, நடிகர் சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் முக்கியஸ்தர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரைத் தரிசனம் செய்தனர்.


 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT