அடர் மஞ்சள் நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.
அடர் மஞ்சள் நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.

அத்திவரதரைத் தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்: தரிசன நேரம் நீட்டிப்பு

அத்திவரதர் பெருவிழாவின் 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்களின் வசதிக்காக புதன்கிழமை (ஜூலை 10)


அத்திவரதர் பெருவிழாவின் 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்களின் வசதிக்காக புதன்கிழமை (ஜூலை 10) முதல் தரிசன நேரத்தை 2 மணிநேரம் நீட்டித்து மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உத்தரவிட்டார்
இவ்விழா கடந்த 1-ஆம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த 8 நாள்களில் மட்டும் 7 லட்சம் பேருக்கு மேல் அத்திவரதரைத் தரிசனம் செய்துள்ளனர். 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் அதிகாலையிலிருந்து திரளானோர் காஞ்சிபுரத்துக்கு வந்தனர். விடுமுறை நாள்களில் அதிகம் கூட்டம் வரும் என்பதைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் வார நாள்களில் வருகின்றனர். இதனால், விடுமுறை நாள்களைப் போலவே செவ்வாய்க்கிழமை அதிக கூட்டம் வந்தது. அதன்படி, வடக்கு, தெற்கு, கிழக்கு மாடவீதிகளில் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு மேல் பக்தர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு கிழக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.
அடர் மஞ்சள் நிறப் பட்டாடையில் அத்திவரதர்
விழாவின் 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை அடர் மஞ்சள் (மாம்பழ) நிறத்தில் பட்டாடை அணிவித்து, மலர்களாலும், துளசி போன்றவற்றாலும் அத்திவரதரை அலங்கரித்தனர். அதன்பிறகு, நைவேத்தியம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, அத்திவரதரைத் தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆழ்வார், தேசிகர் சந்நிதிகள் வழியாக உள்ள பொது தரிசன வரிசையில் சென்று பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். 
தரிசனத்துக்கு 6 மணிநேரம் 
அதிகாலையிலிருந்து நீண்ட வரிசையில் வந்த பக்தர்கள் அதிகபட்சமாக 6 மணிநேரத்திலும், குறைந்தபட்சம் இரண்டரை மணிநேரத்துக்குள்ளும் தரிசனம் செய்தனர். 
1.20 லட்சம் பேர் தரிசனம்
அத்திவரதரை செவ்வாய்க்கிழமை மட்டும் மொத்தம் 1.20 லட்சம் பேர் தரிசனம் செய்தனர்.
தரிசன நேரம் நீட்டிப்பு
 அத்திவரதரை தரிசனம் செய்ய வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மாவட்ட நிர்வாகம் அடுத்தடுத்து மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. எனினும், செவ்வாய்க்கிழமை அதிக அளவில் பக்தர்கள் வந்ததால், தரிசன நேரத்தை இரவில் நீட்டிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதையடுத்து, வழக்கமான தரிசன நேரமான காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை என்பதை கூடுதலாக 2 மணிநேரம் நீட்டித்து ஆட்சியர் பா.பொன்னையா உத்தரவிட்டார். இந்த நடைமுறை புதன்கிழமை முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

கோடை உற்சவத்தில் வரதர் 
வரதர் கோயிலில் கோடை உற்சவத்தின் 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், திருக்குடையின் கீழ் பட்டாச்சாரியார்கள் வேதங்களை முழங்க, உற்சவர் மேற்கு கோபுர சந்நிதித் தெரு, உள்பிரகாரங்களில் பவனி வந்தார். அத்துடன், இளைப்பாறுதல் சேவையும் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வரதரையும், அத்திவரதரையும் வழிபட்டனர். அத்திவரதர் பிறந்ததாகக் கருதப்படும் ஹஸ்த நட்சத்திரத்தில் இருவரையும் ஒருசேர தரிசனம் செய்தனர். 

 ஆட்டோக்களில் அதிக கட்டணம் 
அத்திவரதரைத் தரிசனம் செய்ய வரும் வெளியூர் மக்களுக்கென தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சிற்றுந்துகள், நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், ஆட்டோக்களும் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இதில், ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட அதிகமாக வசூல் செய்கின்றனர். இதைத் தடுக்க, குறிப்பிட்ட தொகையை மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்து உத்தரவிட வேண்டும் என பக்தர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கியஸ்தர்கள் தரிசனம்
அகோபில மடத்தின் ஜீயர், பிரதமரின் அறிவியல் ஆலோசகரும், முன்னாள் அணுசக்தி ஆணையத் தலைவருமான ஆர்.கே.சிதம்பரம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் குடும்பத்தினர், பாமக நிறுவனர் ராமதாஸின் குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை வரிசையில் வந்து அத்திவரதரைத் தரிசனம் செய்தனர்.

வதந்திகளை நம்ப வேண்டாம் 
அத்திவரதரைத் தரிசனம் செய்ய வரும் 14, 15, 16, 23 உள்ளிட்ட நாள்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வருகை தரவுள்ளதாகவும், அப்போதுபொதுமக்கள் யாரும் தரிசனம் செய்ய செல்ல வேண்டாம் என்றும் கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இது போன்ற வதந்திகளை பொதுமக்கள் என்றும், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் சம்பந்தப்பட்ட முகநூல், கட்செவி அஞ்சல் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com