செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

காவி நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்: 85 ஆயிரம் பேர் தரிசனம்

Published: 06th July 2019 02:58 AM
5-ஆவது நாளில் காவி நிறப் பட்டாடையில் காட்சியளித்த வரதர். 


அத்திவரதர் பெருவிழாவின் 5 -ஆம் நாளான வெள்ளிக்கிழமை காவி பட்டாடை உடுத்தி அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப்பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. தற்போது வெகுவிமரிசையாக நடைபெற்று வருவதோடு, ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை 48 நாள்களுக்கும் நடைபெறவுள்ளது.

இப்பெருவிழாவில் கலந்துகொண்டு அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து காஞ்சிபுரம் நோக்கி வருகை தந்தவாறு உள்ளனர்.  அத்திவரதர் பெருவிழாவையொட்டி மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறையினர் பக்தர்களின் கோரிக்கைக்கேற்ப ஏற்பாடுகளை மாற்றி அமைத்து வசதிகளை செய்து தந்தவாறு உள்ளனர். 

கடந்த 4 நாள்களில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். அதிகபட்சமாக ஜூலை 1-ஆம் தேதி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து, 5 -ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை வழக்கத்துக்கு மாறாக அதிகாலை 3 மணியிலிருந்து பக்தர்கள் வடக்கு, கிழக்கு மாடவீதிகளில் குவியத் தொடங்கினர். காலை 5 மணிக்கு கிழக்கு கோபுரம் வழியாக தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

காவி நிறப் பட்டாடையில் அத்திவரதர்: அத்திவரதர் பெருவிழா நடைபெறும் 48 நாள்களும் பல்வேறு நிறங்களில் பட்டாடைகள் உடுத்திக் கொண்டு பக்தர்களுக்கு சேவை சாதிக்கவுள்ளார். அதன்படி, கடந்த 4 நாள்களில் மஞ்சள், பச்சை, நீல அரக்கு, வெண்பட்டு, இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 5 -ஆம் நாளான வெள்ளிக்கிழமை அத்திவரதர் சுப்ரபாதம் பாடி துயில் எழுப்பப்பட்டார்.

பின்பு, காவி நிறப் பட்டாடை அணிவித்து, முல்லை, துளசி மாலைகளால் அலங்கரிக்கப்பட்டார். பிரத்யேக கோயில் இட்லி, வெண், சர்க்கரைப் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

அதன்பிறகு, நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய கிழக்கு கோபுரம், ஆழ்வார் சந்நிதி, தேசிகர் சந்நிதிகள் வழியாக பொது தரிசன வரிசையில் வந்து அத்திவரதரை கண்குளிர தரிசனம் செய்தனர். 

தரிசனத்துக்கு 3.30 மணி நேரம்..: நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டே சென்றது. குறிப்பாக, காலை 8 மணியளவில் கிழக்கு கோபுரம் வழியாக நுழைந்த பக்தர்கள் அதிகபட்சமாக 3.30 மணி நேரத்திலும், குறைந்த பட்சமாக 1 மணிநேரத்திலும் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.  பின்பு, அங்கிருந்து பொதுதரிசன வரிசையில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்து பின்பு மேற்கு கோபுரம் சென்றனர்.  

அங்கிருந்து மூலவர், உற்சவர், தாயார் சந்நிதிகளுக்குச் சென்று வழிபட்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஆங்காங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் பக்தர்களை பக்குவமாக வழிநடத்தினர்.

 இருப்பினும், காலை 9, நண்பகல் 12 மணிக்கு கிழக்கு கோபுரம் வந்தவர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். 
கூட்டம் அதிகமாக வந்ததால் வடக்கு, கிழக்கு மாட வீதிகளில் 6 தடுப்புகள் வரை வைத்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணிகளில் காவலர்கள் ஈடுபட்டனர். குறிப்பாக, 200-300 பேர் வரை பகுதி பகுதியாக பக்தர்கள் நெரிசலின்றி அனுப்பப்பட்டனர். இதனால், கூடுதல் நேரம் ஆனாலும் சிரமமின்றி பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் ஒத்துழைப்பு அவசியம்: வரிசை தொடங்கும் போதிலிருந்து முடியும் வரை இடையிடையே காவலர்கள் நின்று, பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் கண்காணித்து உதவி வருகின்றனர். இருப்பினும், பக்தர்கள் சிலர் வரிசையில் செல்லாமல் குறுக்கு வழியாகச் செல்வது, நெறிமுறைகளை மீறிச் செல்லுதல் என போலீஸாருக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துவதைக் காணமுடிந்தது. 

இதனால், போலீஸார் வலுக்கட்டாயமாக அவர்களை ஒழுங்குபடுத்துவது, கடும் சொற்களைப் பயன்படுத்தும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். அத்திவரதரை காணவரும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகம் செய்துள்ள ஏற்பாடுகள், நெறிமுறைகளுக்கு ஏற்ப ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம், சிறிது நேரம் காத்திருந்தாலும் எளிமையாகச் சென்று அத்திவரதரை தரிசனம் செய்யலாம். எனவே, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

முக்கியஸ்தர்கள் வரிசையிலும் காத்திருப்பு: பொது தரிசன வரிசைக்கு அடுத்து முக்கியஸ்தர்கள் தரிசன வரிசை மேற்கு கோபுரம் வழியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், காலை முதல் முக்கியஸ்தர்களுக்கான அனுமதிச் சீட்டுடன் திரளானோர் வந்த வண்ணம் இருந்தனர். அத்துடன், ஆன்லைனில் ரூ.500-க்கான சிறப்பு தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் வருகை தந்தனர். 

இதனால், முக்கியஸ்தர்கள் வரிசையில் செல்வோர் வஸந்த மண்டபத்தையொட்டிச் செல்லும் வழியில் அதிகமானோர் குவிந்ததால், சுமார் 1 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அத்திவரதர் பெருவிழா என அச்சிடப்பட்ட கைப்பையுடன் லட்டு, தட்டுவடை, மஞ்சள், குங்குமம், துளசி உள்ளிட்ட பிரசாதப் பொருள்கள் வழங்கப்பட்டன. 

மீண்டும் தரிசன நேரத்தில் மாற்றம்: அத்திவரதர் பெருவிழா 48 நாள்களுக்கு தொடர்ந்து நடைபெறும் நாள்களில், சுமார் 22 நாள்களுக்கு வழக்கமாக நடைபெறவுள்ள உற்சவங்களும் நடைபெறவுள்ளன். அதன்படி, முதலில் தொடங்கிய கோடை உற்சவம் ஜூலை 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கடந்த 4 நாள்களை விட வெள்ளிக்கிழமை பக்தர்களின் கூட்டம் கணிசமாக அதிகரித்துக் காணப்பட்டதுடன், மாலை 5 மணிக்கு மேலும் அதிகமானோர் அத்திவரதரை தரிசனம் செய்ய வந்திருந்தனர். இதனால், மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைப்படி, வரும் ஜூலை 11, ஜூலை 15 ஆகிய இரு நாள்களுக்கு மட்டும் காலை 5 மணி முதல் மாலை 5 மணிவரை அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோடை உற்சவம் நடைபெற்றாலும் இதர நாள்களில் காலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரை அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் உத்தரவுக்குப் பிறகு வஸந்த மண்டபத்தில் அத்திவரதரை தரிசிக்கும் நேரம் முடிந்தது எனக் கூறி வஸந்த மண்டபக் கதவுகள் அடைக்கப்பட்டன. 

இதனால், கூடுதல் நேரம் அறிவிப்புக்குப் பிறகு வந்த பக்தர்கள் அத்திவரதரை காணவேண்டும் என கோயில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆட்சியர் இத்தகவலை அறிந்ததும், வந்திருந்த பக்தர்கள் அனைவரும் இரவு 8 மணிவரை அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என உத்தரவிட்டார். அதன்பிறகு, பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு, கோடை உற்சவத்திலும் கலந்துகொண்டு உற்சவரை தரிசனம் செய்து வழிபட்டனர். 
இளைப்பாறிய வரதர் 

வரதர் கோயிலில் வழக்கமாக நடைபெறும் உற்சவங்களில் வியாழக்கிழமை கோடை உற்சவம் தொடங்கியது. இதையடுத்து, 2 -ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாலை வரதருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 
வெள்ளிக்கிழமைதோறும் வரதர் தாயாருடன் கோயில் வளாகத்தில் உள்ள திருத்தோட்டம் சென்று இளைப்பாறுவது வழக்கம். அதன்படி, அலங்கரிக்கப்பட்ட திருக்குடை ஏந்திய பட்டாச்சாரியார்களுடன் வரதர் பவனியாக மேற்கு கோபுர சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் வரை சென்றார். பின்பு, மேற்கு கோபுர வாசலில் தாயார் காத்திருக்க, வரதரும் தாயாரும் சேர்ந்து திருத்தோட்டம் சென்றனர்.
 அப்போது, கோயில் வளாகத்தில் உள்ள நான்குகால் மண்டபம் அருகே தாயாருடன் வரதரும் இளைப்பாற ஜல சேவை நடைபெற்றது. பின்பு, வரதர் தாயாருடன் திருத்தோட்டம் சென்றார். அங்கிருந்து, ஆழ்வார் சந்நிதி, தேசிகர் சந்நிதிகள் வழியாக பவனிவந்து கடவுளர்கள் கோயில் உள்பிரகாரம் சென்றனர். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

முக்கியஸ்தர்கள் தரிசனம்!

அத்திவரதர் பெருவிழாவில் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், தமிழக உளவுத் துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி, முன்னாள் அதிமுக அமைச்சர் பட்டாபிராமன் உள்ளிட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். 

நீதிபதி பிரகாஷ் அத்திவரதரை தரிசனம் செய்த அனுபவம் குறித்து வரதர் கோயில் பதிவேட்டில் எழுதினார். அதில், அத்திவரதர் பெருவிழாவில் கலந்துகொண்டு தரிசனம் செய்தது பெரும் பேறாகவும், பக்தர்கள் தங்கு தடையின்றி அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு மாவட்டநிர்வாகம், அறநிலையத்துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நிகழ்வில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

ரயில் நிலையங்களிலிருந்து சிற்றுந்துகள் இயக்கக் கோரிக்கை 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த 1-ஆம் தேதி முதல் அத்திவரதர் பெருவிழா தொடங்கியுள்ளது. இதற்காக, நாட்டின் பலவேறு பகுதிகளிலிருந்து திரளானோர் நாள்தோறும் காஞ்சிபுரம் வருகை புரிகின்றனர். குறிப்பாக, மின்சார ரயிலில் சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்திலிருந்து காஞ்சிபுரம் வருவோரும், அரக்கோணம் மார்க்கத்திலிருந்து வருவோரும் காஞ்சிபுரம் புதிய, பழைய ரயில் நிலையங்களில் இறங்கி பெருமாள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். 
இவ்வழியாகச் செல்லும் பல ரயில்களை காஞ்சிபுரத்தில் நிறுத்த ரயில்வே உத்தரவிடப்பட்டுள்ளது.அவ்வாறு வருவோர் புதிய ரயில்நிலையத்திலிருந்து பொன்னேரிக்கரை வழியாக செல்லும் வழக்கமான பேருந்துகளில் செல்ல வேண்டியுள்ளது. அதிலும், குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்துகள் வருவதில்லை. 
ஆனால், பழைய ரயில் நிலையத்திலிருந்து வரதர் கோயிலுக்கு வருவோர் எந்தவொரு சிற்றுந்துகளும் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோக்கள், டாக்சிகளில் வரதர் கோயிலுக்கு வரவேண்டியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இவ்விரு ரயில் நிலையங்களிலிருந்தும் புதியதாக சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வாகன நிறுத்தம் பகுதியில் ஆட்டோக்களை அனுமதிக்கக் கோரிக்கை 

வாலாஜாபாத், அரக்கோணம், வேலூர், சென்னை மார்க்கங்களிலிருந்து வருவோர் குறிப்பிட்ட தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து வரதர் கோயிலுக்கு அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்கள் சென்று வருகின்றனர். 
ஆனால், வாலாஜாபாத் சாலை வழியாக வரும் 4 சக்கர வாகனங்களை திருவீதிப்பள்ளம் பகுதியில் உள்ள 4 சக்கர வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து கோயிலுக்குச் செல்லவேண்டும். அவ்வாறு சென்று வருவோர் வாகன நிறுத்தத்துக்கு சுமார் 1.5 கி.மீ. தூரம் நடந்து செல்லவேண்டியுள்ளதால் கடும் சிரமத்துக்குள்ளாவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, வாகன நிறுத்தப்பகுதிகளிலிருந்து கோயிலுக்குச் சென்று வரும் வகையில் ஆட்டோக்கள் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இன்றுமுதல் 6 கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் பெருவிழாவையொட்டி, கடந்த 1-ஆம் தேதி முதல் அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் வழியாக செங்கல்பட்டுக்கும், செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் வழியாக அரக்ககோணத்துக்கும் புதிய சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது .
இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம்-சென்னை ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கோரிக்கைகளுக்கு இணங்க, மேலும் 6 சிறப்பு ரயில்கள் சனிக்கிழமை (ஜூலை 6) முதல் இயக்கப்படவுள்ளன. 

முதல் ரயில், காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை மார்க்கத்தில், காஞ்சிபுரத்திலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு 8.20 மணிக்கு செங்கல்பட்டு வந்து, பின்னர் சென்னை கடற்கரையை அடையும். 2-ஆவது ரயில் காஞ்சிபுரத்திலிருந்து மாலை 4.30-க்கு புறப்பட்டு செங்கல்பட்டு வழியாக மாலை 5.40-க்கு தாம்பரம் செல்லும்.  

3-ஆவது ரயில் இரவு 7.45-க்கு காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு வழியாக இரவு 11.40-க்கு சென்னை கடற்கரையை சென்றடையும்.
4-ஆவது ரயில் சென்னை கடற்கரை-காஞ்சிபுரம் மார்க்கத்தில், தாம்பரத்திலிருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு காலை 6.05 மணிக்கு காஞ்சிபுரம் வந்தடையும்.

5-ஆவது ரயில் சென்னை கடற்கரையிலிருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு வழியாக காலை 7.15 மணிக்கு காஞ்சிபுரம் வந்தடையும்.

6-ஆவது ரயில் செங்கல்பட்டிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.55 மணிக்கு காஞ்சிபுரம் வந்தடையும். 

இவ்வாறு 6 சிறப்பு ரயில்கள் அத்திவரதர் பெருவிழாவையொட்டி இயக்கப்படவுள்ளன.  பக்தர்கள் இதனைப் பயன்படுத்தி அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

2.30 மணி நேரத்தில் அத்திவரதர் தரிசனம்: 1.25 லட்சம் பேர் வழிபாடு
சந்திர கிரகணம்: திருப்பதி கோயில்கள் இன்று 11 மணிநேரம் மூடப்படும்
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.65 கோடி
திருமலையில் ஆகஸ்ட் 18 வரை வார இறுதியில் விஐபி தரிசனம் ரத்து
அமராவதியில் விரைவில் தேவஸ்தான அலுவலகம்