ஏழுமலையான் தரிசனம் வரும் 16-ஆம் தேதி 5 மணிநேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையானுக்கு வரும் ஆனி மாத இறுதிநாள் ஆனி வார ஆஸ்தானம் எனப்படும் ஆண்டுக் கணக்கு முடித்து புதிய கணக்கு தொடங்கும் உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் வரும் 16-ஆம் தேதி சுத்தம் செய்யப்பட உள்ளது. அதனால் வரும் 16-ஆம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் சந்திர கிரகணம் நடைபெற உள்ளதால் அன்றிரவு 7 மணிக்கு ஏழுமலையான் கோயில் மூடப்பட்டு 17-ஆம் தேதி காலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது.
அதரன் பின் கோயில் சுத்தம் செய்யப்பட்டு புண்ணியாவாசனம் நடத்தி சுப்ரபாத சேவை நடத்தப்பட உள்ளது. இதை முன்னிட்டு தேவஸ்தானம் வரும் 16, 17-ஆம் தேதிகளில் அனைத்து ஆர்ஜித சேவைகளையும் ரத்து செய்துள்ளது. எனவே 16-ஆம் தேதி ஏழுமலையான் தரிசனம் 8 மணிநேரம் மட்டுமே வழங்கப்பட உள்ளது. சந்திர கிரகணத்தையொட்டி திருமலையில் உள்ள அன்னதானக் கூடம், லட்டு மடப்பள்ளி உள்ளிட்டவை மூடப்பட உள்ளன. இதை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.