செய்திகள்

திருப்பதி தேவஸ்தானத்துக்கு செயல் இணை அதிகாரி நியமனம்

2nd Jul 2019 02:51 AM

ADVERTISEMENT


திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய செயல் இணை அதிகாரியாக பசந்த்குமார் என்ற ஐஏஎஸ் அதிகாரியை ஆந்திர அரசு நியமித்துள்ளது.
தேவஸ்தானத்தின் திருப்பதி பிரிவுக்கான செயல் இணை அதிகாரியான லட்சுமிகாந்தத்தின் பதவிக்காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அவர் ஓய்வு பெற்றார். அப்பதவிக்கு விசாகப்பட்டினம் பெருநகர வளர்ச்சிக் கழகத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வரும் பசந்த்குமாரை ஆந்திர அரசு நியமித்துள்ளது. 
அதேபோல், கடந்த 9 ஆண்டுகளாக தேவஸ்தானத்தின் திருமலை பிரிவு செயல் இணை அதிகாரியாக பணியாற்றி வந்த சீனிவாசராஜுவை ஆந்திர அரசு பணியிடமாற்றம் செய்துள்ளது. புதிய அதிகாரி நியமிக்கப்படும் வரை வசந்த்குமார், திருமலை செயல் இணை அதிகாரி பொறுப்பையும் கவனிக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பசந்த்குமாருக்கு சித்தூர் மாவட்டத்தில் பணிபுரிந்த அனுபவம் உள்ளது. அவர் ஆந்திர ஆளுநர் நரசிம்மனின் செயலராகவும் பணியாற்றியுள்ளார். அப்போது அவர் தன் மகளுக்கு ரூ.16,100 மட்டுமே செலவு செய்து திருமணம் செய்து வைத்தார். அத்திருமணத்தில் ஆளுநர் தம்பதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 
ஆந்திர முதல்வரின் நம்பிக்கைக்குரிய அதிகாரி ஒருவர், தேவஸ்தான திருமலை பிரிவு செயல் இணை அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT