செய்திகள்

அத்திவரதர் பெருவிழா: முதல் நாளில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்

2nd Jul 2019 02:53 AM

ADVERTISEMENT


அத்திவரதரை 40 ஆண்டுகளுக்குப் பின், முதல் நாளான திங்கள்கிழமை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா திங்கள்கிழமை  (ஜூலை 1) தொடங்கியது. ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு வெகுவிமரிசையாக விழா நடைபெறவுள்ளது.
இப்பெருவிழாவில் கலந்துகொண்டு அத்திவரதரை தரிசனம் செய்ய நாடு முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை தந்தவாறு உள்ளனர்.
 
வஸந்த மண்டபத்தில் அத்திவரதர்: கடந்த சில மாதங்களாக மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத் துறையினரும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்தனர். அனந்தசரஸ் குளத்திலிருந்து நீர் வெளியேற்றி பொற்றாமரைக் குளத்துக்கு மாற்றியமைக்கப்பட்டது. 
பின்பு, சகதியை அகற்றி கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2.30 மணிக்கு அத்திவரதர் வெளியே கொண்டுவரப்பட்டு வஸந்த மண்டபத்தில் வைக்கப்பட்டார். தொடர்ந்து, அத்திவரதருக்கு தைலக் காப்பு சாற்றுமுறை, ஆஸ்தான சடங்குகள், யாக பூஜைகள் செய்யப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை இரவு புண்ணியாக வாசனம், நைவேத்தியம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

திங்கள்கிழமை அதிகாலை அத்திவரதர் சுப்ரபாதம் பாடி துயில் எழுப்பப்பட்டார். பின்பு, பிரத்யேக கோயில் இட்லி, வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், மைசூர் பா, பாதாம் அல்வா நைவேத்தியம் செய்யப்பட்டது.  அத்திவரதருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களின் தரிசனத்துக்கென காலை 6.10 மணியளவில் கதவு திறக்கப்பட்டது. தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

ஆளுநர், அமைச்சர் தரிசனம்: அத்திவரதர் சயன கோலத்தில் சிறப்பு அலங்காரத்துடன், அனந்த புன்னகையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசனம் செய்ய வேண்டி பக்தர்கள் நள்ளிரவு முதலே கோயிலுக்கு வருகை புரியத்தொடங்கினர். அதன்படி,திரளானோர் கிழக்கு கோபுர சன்னதி தெரு, கிழக்கு கோபுர வடக்கு மாடவீதி உள்ளிட்ட பகுதிகளில் குவியத்தொடங்கினர். இதில், சிறப்பு தரிசனம் செய்ய விரும்பியோர் வடக்கு மாடவீதியில் தனித்தனி நுழைவுசீட்டு மையத்தில் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். 

காலை 5 மணியளவில் கோயிலின் கிழக்கு கோபுர பகுதியில் திரளான பக்தர்கள் பொது மற்றும் சிறப்பு தரிசன வரிசையில் நுழைந்து, ஆழ்வார், தேசிகர் சன்னதிகள் வழியாக வஸந்த மண்டபத்தை அடைந்து அத்திவரதரை கண்குளிர தரிசனம் செய்து ஆனந்தம் அடைந்தனர்.சுமார் 12 மணியளவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை இடைவேளை அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து, 3 மணிக்கு மீண்டும் அத்திவரதர் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, இரவு 8 மணிவரை நடைபெற்ற அத்திவரதர் தரிசனத்தின் போது மட்டும் சுமார் 1 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் அத்திவரதரை பக்தி பரவசத்துடன் கோவிந்தா, பெருமாளே, நாராயணா எனக்கூறி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.அதோடு, வஸந்த மண்டப கதவு திறக்கப்படும் போது மேளதாளங்களுடன் வேதங்கள் ஓத, அதிர்வேட்டுகள் வெடிக்கப்பட்டு விமரிசையாக அத்திவரதர் பக்தர்களுக்கு சர்வ தரிசனம் அளித்தார்.
 
ஏற்பாடுகள் திருப்தி: கோயில் வளாகத்தில் ஆம்புலன்ஸ், குடிநீர்த் தொட்டி, பக்தர்கள் சென்ற தனிவரிசை பகுதியில் குழாய்கள் அமைத்து 20அடிக்கு ஒரு இடத்தில் குடிநீர் வழங்கியது, கோயிலுக்கு வெளியில் தீயணைப்பு வாகனம், கண்காணிப்பு கோபுரம், மருத்துவ முகாம் அமைத்து பக்தர்களுக்கு உதவியது உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். இருப்பினும், வெளியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்கள் உணவு, நீரின்றி அவதிக்குள்ளாகினர். அன்னதான சத்திரங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

தற்காலிக பேருந்து நிலையம்: நகர்ப்பகுதியில் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கென ஒலிமுகமது பேட்டை, பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகம், ஓரிக்கை ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படத்தொடங்கியுள்ளன. 

ஒலிபெருக்கி அறிவிப்பு: தற்காலிக பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர். மத்திய பேருந்துநிலையத்தில் நேரம் காப்பாளர் அலுவலகத்தில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிக்கப்பட்டது. இதனால், பயணிகள் எவ்வித குழப்பமும் இன்றி சிற்றுந்துகளில் பயணித்து பெருமாள் கோயிலை அடைந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர்.  

சிற்றுந்து கட்டணம் ரூ.10: தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சிற்றுந்துகளில் பயணித்து வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வருவோர் பயணச்சீட்டு கட்டணமாக ரூ.10 செலுத்தி பயணித்தனர். 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. தற்காலிக பேருந்துநிலையத்தை வந்தடையும் பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டி தகவல் பலகைகள், அத்திவரதர் கோயிலுக்கு செல்லும் தூரம் உள்ளிட்டவை குறித்து தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் விவரங்கள் அடங்கிய தகவல் பலகைகள் ஆங்காங்கு வைக்கப்பட்டதன் மூலம் பயணிகள் சிரமமின்றி பயணித்தனர்.  

பாதுகாப்புப் பணிகள்: அத்திவரதர் பெருவிழாவையொட்டி சந்தோஷ் ஹதிமானி தலைமையில் 4 ஏடிஎஸ்பி, 20 டிஎஸ்பி, 48 காவல் ஆய்வர்கள் என மொத்தம் 2,656 காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில், கமாண்டோ படையினர் 40 பேர் அடங்குவர். கண்காணிப்பு கோபுரங்கள், இருசக்கர வாகன ரோந்து என நகர்ப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், குழந்தைகள் காணாமல் போனால் கண்டு பிடிக்கும் வகையில் குழந்தைகளின் கைகளில் அடையாள வில்லைகள் ஒட்டப்பட்டன. இதில், பெற்றோர்களின் செல்லிடப்பேசி, குழந்தையின் பெயர் ஆகியவை எழுதப்பட்டிருந்தது. இதனை, எண்- 1098-குழந்தைகள் உதவி மையத்தினர் செய்திருந்தனர். 

இதுகுறித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த ரமேஷ், ரங்கன், பாண்டியன்,சியாமளா, சந்தோஷ் உள்ளிட்ட பலரும் கூறியதாவது:
அத்திவரதர் பெருவிழாவுக்காக பல மாதங்களாக காத்திருந்தோம். அதன்படி, நாள்கள் நெருங்க நெருங்க அத்திவரதரை காணும் ஆர்வம் அதிகமானது. வேலூர், திருவண்ணாமலை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வந்தாலும் காஞ்சிபுரத்தில் நடைபெறும் இந்த பெருவிழாவினைக் காண ஆர்வத்துடன் காத்திருந்தோம். 

ஜூலை 1-ஆம் தேதியையொட்டி, நள்ளிரவு முதலே வரதர் கோயிலை அடைந்தோம். பல மணிநேரம் காத்திருந்து சிறப்பு தரிசன நுழைவு சீட்டு பெற்றும், பொது தரிசன வரிசையில் நின்றும் அத்திவரதரை தரிசனம் செய்து மகிழ்ந்தோம். இது வாழ்வில் கிடைத்த பெரும்பேறாக கருதுகிறோம். அத்திவரதரை கண்ட அந்த தருணம் பிறவிப்பயன் அடைந்ததற்கு ஒப்பான ஆனந்தத்தை உணர்கிறோம் என்றனர்.

இன்று முதல் சிறப்புக் கட்டண தரிசனம் ரத்து
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப்பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர்பெருவிழா வெகு விமரிசையாக திங்கள்கிழமை தொடங்கியது.

பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்யும் வகையில், வரதர் கோயிலின் கிழக்கு கோபுரவாசலிலிருந்து  சிறப்பு தரிசனம், பொது தரிசனம் ஆகிய தனித்தனி வரிசைகளுக்கு பந்தல், தடுப்புகள் அமைத்து ஏற்பாடு செய்ப்பட்டிருந்தன. 

தொடங்கிய முதல் நாளில் மட்டும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து மகிழ்ந்தனர். இந்நிலையில், பெரும்பாலான பக்தர்கள் அத்திவரதரை அருகில் இருந்து பார்த்துவிடலாம் என பொது தரிசனத்தை விட சிறப்புக் கட்டண தரிசன வரிசையை பயன்படுத்தினர்.
இதற்கென, ரூ.50 கட்டணம் செலுத்தி அதிகமானோர் சிறப்பு தரிசன வழியை பயன்படுத்தினர். இதனால், சிறப்புக் கட்டண தரிசன வரிசையைவிட பொது தரிசன வரிசையில் பக்தர்கள் விரைந்து சென்று அத்திவரதரை தரிசனம் செய்தனர். ஆனால், சிறப்புக் கட்டண தரிசன வரிசையில் அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு காலதாமதம் ஆனது.

அத்துடன், தள்ளு முள்ளு ஏற்பட்டு, காவலர்களிடம் பக்தர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு இனிவரும் 47 நாள்களிலும் சிறப்புக் கட்டண தரிசனத்துக்கென பிரத்யேக கட்டணமும், சிறப்பு வரிசையும் கிடையாது என அறிவித்துள்ளது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா கூறியதாவது: 
பொது தரிசன வழியில் சென்ற பெரும்பாலானோர் எவ்வித சிரமமின்றி அத்திவரதரை தரிசனம் செய்தனர். ஆனால், அத்திவரதரை அருகில் இருந்து பார்த்துவிடலாம் என அதிகமானோர் சிறப்புக் கட்டண தரிசன வழியை தேரந்தெடுத்தனர். இதனால், சில அசௌகரியங்களை சந்திக்க வேண்டி இருந்தது. 

இதற்காக, மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறையும் எடுத்த முடிவின் படி, அத்திவரதர் பெருவிழா நிறைவடையும் வரை அனைத்து பக்தர்களும் பொதுதரிசன வழியாக சென்று அத்திவரதரை தரிசனம் செய்யலாம். இனிவரும் 48 நாள்களிலும் சிறப்பு தரிசனத்துக்கென பிரத்யேக வரிசை கிடையாது என்றார்.

மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு தனிவழி
முதியோர், மாற்றுத்திறனாளிகள் கிழக்கு கோபுரத்திலிருந்து மேற்கு கோபுரம் வரை பேட்டரி காரில் அழைத்துச்செல்லப்பட்டனர். பின்பு, தனிவரிசை அமைக்கப்பட்டு வஸந்த மண்டப சாய்வு தளத்தின் மூலம் சக்கர நாற்காலி உதவியுடன் பொதுமக்கள் பொது தரிசன பகுதியை அடைந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர். அதுபோல், உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட மாலை 5 மணி முதல் 8 மணிவரை உள்ள நேரத்தில் உள்ளூர் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT