வடலூரில் இன்று தைப்பூச ஜோதி தரிசனம்

கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜோதி தரிசன நிகழ்ச்சி திங்கள்கிழமை (ஜன. 21) நடைபெறுகிறது.
வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு சத்திய ஞான சபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம். (வலது) வள்ளலார் பயன்படுத்திய பொருள்களை பல்லக்கில் சுமந்து செல்லும் சன்மார்க்க அன்பர்கள். 
வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு சத்திய ஞான சபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம். (வலது) வள்ளலார் பயன்படுத்திய பொருள்களை பல்லக்கில் சுமந்து செல்லும் சன்மார்க்க அன்பர்கள். 

கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜோதி தரிசன நிகழ்ச்சி திங்கள்கிழமை (ஜன. 21) நடைபெறுகிறது.
 ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த, வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். 
இங்கு ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தைக் காண லட்சக்கணக்கானோர் வடலூருக்கு திரண்டு வருவர்.நிகழாண்டு 148-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  அதிகாலை 5 மணியளவில் அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. காலை 7.30 மணியளவில் தரும சாலை அருகே சன்மார்க்கக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 இதில், தெய்வ நிலைய செயல் அலுவலர் ஆர்.கருணாகரன், பெரம்பலூர் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள், இமயமலை ஞானநந்தா சுவாமிகள், நாகர்கோவில் பத்மேந்திரா சுவாமிகள், சன்மார்க்க சேவை மையம் ஜீவ.சீனுவாசன், பார்வதிபுரம் கிராம மக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
 இதையடுத்து, மருதூரில் வள்ளலார் பிறந்த இல்லம், தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழி,  வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் சன்மார்க்க கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 10 மணியளவில் சத்திய ஞான சபையில் கொடியேற்றம் நடைபெற்றது. 
முன்னதாக, தெய்வ நிலையத்துக்கு இடம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள், வள்ளலார் பயன்படுத்திய பொருள்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட பல்லக்கை சுமந்து, பலவகைப் பழங்கள், சீர்வரிசைப் பொருள்களுடன் ஊர்வலமாக கொடிமரத்தின் அருகே வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள், "அருள்பெருஞ்ஜோதி அருள்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருள்பெருஞ்ஜோதி' என்ற வள்ளலாரின் பாடலைப் பாடினர். பின்னர், வள்ளலாரின் கொடி பாடல்களை பாடியபடி சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. 
இதையடுத்து, அந்தப் பல்லக்கு சத்திய ஞான சபையை வலம் வந்தது. நிகழ்ச்சியில், பெரம்பலூர் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள் பங்கேற்றார். விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. முதல் தரிசனம் காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணிக்கு என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.
விழாவைக் காணவரும் சன்மார்க்க அன்பர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தெய்வ நிலைய நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com