பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்!

தைமாதம் என்பது உத்தராயண காலத்தின் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது..
பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்!

தைமாதம் என்பது உத்தராயண காலத்தின் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும்.  பௌர்ணமி தினத்தில் சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு  இருபுறமும் நேர்கோட்டில் நிற்க "தைப்பூச திருநாள்” அமைகின்றது. இச்சிறப்புமிக்க இத்தினம் இவ்வருடம் 21.01.2019 அன்று மனோகாரகனின் நாளான திங்கள் கிழமையில்  அமைந்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி மற்றும் அனைத்து முருகன் கோயில்களிலும் தை பூச திருவிழா கோலாகலமாக நடைபெற ஏற்பாடுகள் செய்துவருகின்றனர். தமிழ்  கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக் கடன்களை  நிறைவேற்றுவார்கள். இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம்  செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூசையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை  நிறைவு செய்வர். முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்திற்கும் உள்ள இத்தகைய தொடர்பின் காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு  விழாக்கள் நடத்தப்படுகின்றன.

தொட்டது துலங்கும் தை பூசம்

தைப்பூச திருநாளில் "தொட்டதெல்லாம் துலங்கும்" என்பது பழமொழியாக அமைவதால் அன்றைய தினம் குழந்தைகளுக்கு காது குத்துதல், வித்யாரம்பம் எனப்படும் கல்வி  தொடங்குதல் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற்கொள்ளப்பெறுகின்றன. இத்தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள்  தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும். தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகின்றது. சிவசக்தி ஐக்கியம் இந்நாளிலேயே நிகழ்ந்ததாகவும் ஐதீகம். 

பஞ்ச பூதங்கள் உருவான நாள்

சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகின்றது. சிவசக்தி இணைந்த இப்புண்ணிய தினத்தில்  முதலில் உருவாகியது நீரென்றும், அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை உருவாகின என்றும் நம்பிக்கை கொள்கின்றோம். எனவே உலக  இயக்கத்திற்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இத்தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு  செய்கின்றோம்

பூசத்தின் அதிதேவதை குருபகவான்

தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும் பிரகஸ்பதி (குரு பகவான்) பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகின்றார். இவர் அறிவின் தேவதையாகவும்  போற்றப்படுகின்றார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராசப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்தநாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றது. அத்துடன் வாயுபகவானும், வர்ணபகவானும், அக்கினி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள்  போற்றப்படுகின்றது. அதாவது இயற்கையைக் கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமை உணர்த்தப்பட்ட புண்ணியநாள் இத் தைப்பூச நன்னாளாகும்.

பூசத்தின் புகழ் கூறும் நட்சத்திர சிந்தாமணி

இதனைப் புஷ்யம் என்றும் குறிப்பிடுவார்கள். சமஸ்கிருதத்தில் ‘புஷ்டி’ என்றால் ‘பலம்’ என்று பொருள். அதிலிருந்து மருவியது புஷ்யம். மூன்று நட்சத்திரங்கள் புடலங்காய்  போலத் தோற்றமளிக்கும். 27 நட்சத்திரங்களில், சிறப்பு வாய்ந்த சில நட்சத்திரங்களில் பூசமும் ஒன்று! பூசம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் இராசிச்  சக்கரத்தில் பேசப்படுகின்ற 27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் ஆகும்.

இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளி, மென்பேச்சு மற்றும் ஆன்மீகவாதிகளாக இருப்பார்கள். அறிவுசார்ந்த வேலைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பார்கள் என்பது  ஜோதிட நம்பிக்கை ஆகும். நட்சத்திர சிந்தாமணி எனும் நூலில் பூச நட்சத்திரத்தைப் பற்றி கூறுகையில் "பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல மதிப்பு உடையவர்களாகவும்,  வழக்கறிந்து வழக்காட வல்லவர்களாகவும் குற்றமற்ற ரத்தினங்களும் ஆபரணங்களும் அணிந்து மகிழ்பவர்களாகவும் விளங்குவார்கள் என்கிறது. இராமாயணத்தில் பரதன்  பூசநட்சத்திரத்தில் பிறந்தான் என்பது உலகறிந்ததே. இதைக் கம்பரும் உறுதி செய்கிறார். 

சனி-சந்திர சேர்க்கை தரும் புணர்ப்பு தோஷம்

நவக்கிரகங்களில் மிக வேகமாக நகரும் கிரகம் சந்திரபகவான் ஆவார். அவரை மாத்ருகாரகன் என்றும் மனோகாரகன் என்றும் அழைக்கப்படுகிறார். சந்திரபகவான்  ஒருராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இரண்டரை நாளுக்கு ஒருமுறை நகர்ந்து செல்கிறார். எனவே இவரை வேகமான கிரகம் எனப்படுகிறது. ஆனால் நவக்கிரகங்களில்  மிகவும் மெதுவாகச் செல்லும் கிரகம் சனைஸ்வரன் எனப்படும் சனி பகவான் ஆவார். எனவே இவரை மந்தன் என்று அழைப்பதுண்டு. சனி பகவான் ஒரு ராசியில் இருந்து  மற்றொரு ராசிக்கு நகர இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார். இவர் நவக்கிரகங்களில் சூரியனுக்கு மிக தொலைவில் பயணிப்பதால் இவர் ஒளிகுன்றி இரண்டு கிரகமாக விளங்குகிறார்

சூரியனை பகல் நேர பித்ருகாரகன் என்றும் சனி பகவான இரவு நேர பித்ரு காரகன் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதே போன்று சுக்கிரனை பகல் நேர மாத்ரு  காரகன் என்றும் சந்திரனை இரவு நேர மாத்ருகாரகன் என்றும் ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. இரவு நேர பித்ரு காரகனான சனியும் மாத்ருகாரகனான சந்திரனும் இணையும் இரவும்பொழுதில் உடல் உள்ளம் இரண்டிற்கும் ஓய்வு கொள்ளும் விதமாக அமைந்துள்ளது. மேலும் பல "உணர்ச்சி" மிகுத்த காரியங்கள் நடைபெறுவதும்  இரவில்தான் என்பது அனைவரும் அறிந்ததே!

இரண்டு ஆற்றல் மிக்க ஆக்கப்பூர்வமான கிரகங்களான சந்திரன் சனி இணைவைப் புணர்ப்பு தோஷம் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் சனியும்  சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்தனை பெற்றாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது சம சப்தம பார்வை பெற்றாலோ  சந்திரனின் நக்ஷத்திரங்களான ரோஹினி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் சனி நின்றாலோ அல்லது சனைச்சர பகவானின் நட்சத்திரங்களான பூசம்,  அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் சந்திரன் நின்றாலோ புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது.

புணர்ப்பு தோஷம் என்ன செய்யும்?

புணர்ப்பு தோஷம் உள்ளவர்களுக்கு எளிதில் திருமணம் நடைபெறுவது இல்லை. அப்படியே நடந்துவிட்டாலும் பிரிவில் முடிகிறது. அல்லது நிம்மதியற்ற வாழ்க்கையை  அனுபவிக்க நேருகிறது. மேலும் பலருடன் தொடர்பு கொள்ளும் நிலையும் ஏற்படுத்துகிறது. அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும்  ஆன்மீகத்தொண்டு செய்பவர்களுக்கும் பத்தில் எட்டு பேருக்கு இந்த சந்திர-சனி கிரக சேர்க்கை கட்டாயம் இருக்கும்.

புணர்ப்பு தோஷம் கொண்டவர்கள் பொதுவாழ்விலும் ஆன்மீகத்திலும் அதிகம் ஈடுபடுவதால் அவர்களுக்கு தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். அதுவே அவர்களுக்குக் குடும்ப வாழ்வில் பல பிரச்னைகளுக்கு காரணமாகிறது.

புணர்ப்பு தோஷத்திற்கு விதிவிலக்கும் பரிகாரமும்

1. குரு பார்வை/சேர்க்கை பெற்று புணர்ப்பு தோஷம் ஏற்பட்டிருந்தால் தோஷம் கிடையாது.

2. குரு வீட்டில் சனி சந்திர சேர்க்கை பெற்று புணர்ப்பு ஏற்பட்டிருந்தால் தோஷமில்லை.

3. சனியின் எதிரியான சூரியன் மற்றும் செவ்வாய் அல்லது லக்ன மற்றும் ராசியின் யோகாதிபதி, இவர்கள் சந்திரன் மற்றும் சனியின் இடையே நிற்க. புனர்பு தோஷ பங்கம்  ஏற்படுகிறது.

4. சுக்கிரனின் வீட்டில் புணர்ப்பு பெற்றால் தோஷம் நீங்குவதோடு மிகப்பெரும் புகழை தந்துவிடுகிறது.

சனி-சந்திர சேர்க்கையால் பிரச்சனை மட்டும்தானா?

புணர்ப்பு தோஷம் எல்லோருக்குமே இல்லற வாழ்வில் பிரச்னையை ஏற்படுத்திவிடுகிறதா என்றால் இல்லை என அடித்து கூறலாம். திருமண தடைக்கான அமைப்பு  மற்றும் களத்திர தோஷம் போன்றவை இருந்து அதோடு புணர்ப்பு தோஷமும் இருந்தால் சிறிது பிரச்சனை ஏற்படும். என்றாலும் மெதுவாக செல்லும் கிரஹமான சனிக்கு  பின் வேகமாக செல்லும் சந்திரன் நின்று புணர்ப்பு தோஷம் ஏற்பட்டிருந்தால் அது இதசல யோக அமைப்பை பெற்று நன்மையை அளித்திடும்.

புகழ் உச்சம் தரும் பூசம்

என்னுடைய ஆய்வில் நான் கவனித்தவரை பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணவாழ்வு சற்று ஏறக்குறைய இருந்தாலும் (பூச நட்சத்திர புணர்ப்பு தோஷமும் காரணம்  தானே) ஏதோ ஒரு விதத்தில் சாதனையாளர்களாகத்தான் இருக்கிறார்கள். சிலர் ஆன்மீகத்தில் உச்சம் தொட்டிருக்கிறார்கள். சித்தர்களில் கமல முனி சித்தர் தை பூசத்தில்  பிறந்தவர் என்கிறது வரலாறு.

சிலர் அரசியலில் புகழ் பெற்றிருக்கிறார்கள். மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் பிறந்தது தை பூசம் என்கிறது நூல்கள். சிலர் ஆடல் பாடல் சினிமா கலை துறையில்  உச்சம் தொட்டிருக்கிறார்கள். சிலரோ தியாகத்தில் உச்சம் தொட்டிருக்கிறார்கள். தன் உயிரை கூட துச்சமாக மதித்து பலரை காப்பாற்றி புகழின் உச்சியை அடைந்தவர்களும்  இந்த தை பூசத்தில் பிறந்தவர்கள் தான். இராமாயணத்தில் அண்ணன் இராமனுக்காக ஆட்சியை தியாகம் செய்த பரதன் பூச நட்சத்திரத்தில் பிறந்தவன் என்பது  குறிப்பிடத்தக்கது. 

தடை மற்றும் தாமதம் கூட நன்மைக்கே!

பொதுவாக சனிக்கிழமையன்று ஏதாவது ஒரு வேலையை தொடங்குவதென்றால் அந்தவேலை வளரும் என்று பலரும் தொடங்க யோசிப்பார்கள். மேலும் சனைச்சரன்  என்றாலே தடையை தருபவர் என்றும் அவரை நிந்திப்பார்கள். வண்டியில் செல்லும்போது சனியின் காரம் பெற்ற ப்ரேக் வேலை செய்யவில்லை என்றால் என்ன ஆகும்  என்பதையும், பத்து மாதத்தில் பிறக்க வேண்டிய குழந்தை மூன்று மாத்தில் பிறந்தால் என்ன ஆகும் என்பதையும் சிந்தித்தால் தடை மற்றும் தாமதம் கூட வாழ்க்கைக்கு  அவசியம்தான் என்பதை உணர முடியும்.

அதேநேரம் சனியின் ஆதிக்கத்தில் ஒரு நற்காரியத்தை தொடங்கினால் தர்ம கர்மாதியான சனி அதை பலமடங்கு வளர செய்து புகழ்பெற செய்வார் என்பதுதான் உண்மை.  பூசநட்சத்திர அதிபதி சனி. பூச நட்சத்திரத்தின் அதிதேவதை குரு. இவர்கள் இருவரும் இணைந்த தை பூச தினத்தில் வள்ளலார் ஆரம்பித்த அன்னதானம் இன்றும் கொடிகட்டி பறக்கிறது என்பது கண்கூடு. உலக சிருஷ்டியின் சிருஷ்டிகர்த்தாவின் மாபெரும் சக்தியின் உண்மையை உள்ளத்தில் இருத்தி அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர்கொள்ள இத்தைப்பூச நன்னாளிலே சிவசக்தி பேரருளை நாடி வழிபடுவோம்.

புணர்ப்பு தோஷம் போக்கும் பரிகாரங்கள்

1.சந்திர ஸ்தலமான திருப்பதியில் வெங்கடாஜலபதியை திங்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் சந்திரனின் ரோஹினி, ஹஸ்தம், திருவோணம் நக்ஷத்திர நாட்களிலும்   சனைச்சர பகவானின் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நக்ஷத்திர நாட்களிலும் தரிசனம் செய்வது சிறந்த பரிகாரமாகும்.

2. சனிக்கிழமையிலோ அல்லது சனைச்சர பகவானின் நக்ஷத்திர நாட்களில் வரும் பௌர்ணமியில் சத்தியநாராயண விரத பூஜை செய்வது சனி-சந்திர சேர்க்கையால்  ஏற்படும் பிரச்னைகளை போக்கி மகிழ்ச்சியான வாழ்வை அளிக்கும்.

3. தைப்பூச நாளில் குருவின் நிறமாகிய மஞ்சளாடை அணிந்து முருகனுக்கு காவடியெடுப்பது, சந்திரனின் காரகமாகிய உணவினை சனியின் காரகம் பெற்ற உழைப்பாளிகள்,  உடல் ஊனமுற்றோர், ஏழைகள் ஆகியவர்களுக்கு அன்னதானம் செய்துவர புணர்ப்பு தோஷம் நீங்கும்.

4. சனைச்சர பகவானின் மகர ராசியில் சூரியன் பயணம் செய்யும் மகர மாதம் எனப்படும் தை மாதம் வரும் பூச நக்ஷத்திர நாளில் சந்திரனின் காரகமாகிய பச்சரிசி மாவில்  சுக்கிரனின் இனிப்பு வெல்ல பாகு மற்றும் ஏலக்காய் சேர்த்து சனியின் எள் சேர்த்து குருவின் நெய்யில் மாவிளக்கு வைத்து வழிபட புணர்ப்பு தோஷம்  நீங்கி விரைவில்  திருமணம் நடைபெறும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com