தண்ணீர் பிரச்னை போக்கியருளும் தீர்த்தபாலீஸ்வரர்! மாசி மகம் கூறும் ஜோதிட ரகசியங்கள்!

இன்று மாசி மகம் 'கடலாடும் நாள்' என்றும் 'தீர்த்தமாடும் நாள்' என்றும் சொல்வார்கள். கும்ப ராசியில் சூரியன் இருக்கும்போது சந்திரன் சிம்ம..
தண்ணீர் பிரச்னை போக்கியருளும் தீர்த்தபாலீஸ்வரர்! மாசி மகம் கூறும் ஜோதிட ரகசியங்கள்!

இன்று மாசி மகம் 'கடலாடும் நாள்' என்றும் 'தீர்த்தமாடும் நாள்' என்றும் சொல்வார்கள். கும்ப ராசியில் சூரியன் இருக்கும்போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி மாத பெளர்ணமியுடன் கூடிய மாசி மகமாக திகழ்கிறது. மாசிமகம் மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த தினமாகும். இன்று சென்னை மெரினா கடற்கறையில் மயிலாப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சிவன் கோயில்களிலிருந்து சிவபெருமானும் பார்வதி தேவியும் குடும்ப சகிதமாக தீர்த்தமாட வருவது காணகண் கொள்ளா காட்சியாகும்.

அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும். 

கும்பகோணம் மகாமக குளம்

மாசி மகம் நீர்நிலைகளின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு போதிக்கிறது. எனவேதான் இறைவடிவங்களை நீர்நிலைகளில் தீர்த்தவாரியாடச் செய்வதோடு மக்களும் புனிதநீராடி மகிழ்கின்றனர். மாசிமகத்தன்று, கும்பகோணத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இருந்து மகாமக குளத்திற்கும், காவிரியாற்றுக்கும் அம்மையப்பர்  எழுந்தருளுவர். 

அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி |

புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம் விநச்யதி |

வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே விநச்யதி |

கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே விநச்யதி |

என்று கும்பகோணத்தின் பெருமையையும் காவேரி ஸ்நானத்தின் மகிமையையும் வேதம் போற்றுகிறது.

பிற ஸ்தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு. ஆண்டுதோறும் மாசி மகம் வந்தாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் சிம்ம ராசியில் இருக்கும்போது வருவது மகா மகமாகும். அன்றைய தினம் பல லட்சம் பேர் மகாமக குளத்தில் நீராடுவர். புண்ணிய இடங்களில் தீர்த்தமாட முடியாதவர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு சென்று உமாமகேஸ்வரனை தரிசிப்பர். தமிழகத்தை பொறுத்தவரை கும்பகோணத்தில் மாசி மகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். 

வருண தோஷம் போக்கிய மாசி மகம்

ஒருமுறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுவிட்டது. அவர் கட்டப்பட்டுக் கடலில் வீசப்பட்டு இருந்தார். வருணன் செயல்படாததால் உலகில் மழையின்றி வறட்சியும், பஞ்சமும் ஏற்பட்டது. அனைத்து உயிர்களும் துன்புற்றன. தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வருண பகவானை விடுவிக்கும்படி வேண்டி பிரார்த்தனை செய்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசிமக திருநாளாகும்.

விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவபெருமானிடம் வரம் கேட்டார். தான் பிரமஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடல் நீரில் இருந்தபடியே சிவனை வணங்கியதால் தோஷம் நீங்கியதை போன்று மாசிமகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி இறைவனை வழிபடும் பக்தர்களுக்கு அவர்களின் பாவவினைகள், பிறவி பிணிகள், துன்பங்கள்யாவும் நீங்கி அவர்கள் உயர்வு பெற அருள வேண்டும் என கேட்டுக் கொண்டார். சிவபெருமானும் வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். அன்று முதல் தீர்த்தமாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

குரு பகவான் விருச்சிக ராசியில் பயணம் செய்யும் காலம் கடல் மற்றும் நதிகளில் நீராடினால் நமது கவலைகள், பாவங்கள் தொலைந்துவிடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆண்டு குருபகவான் விருச்சிக ராசியில் கடந்த அக்டோபர் 11 அன்று  பிரவேசித்த நிலையில் சமீபத்தில் தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு முழுவதும் குருபகவான் விருச்சிக ராசியில் தனது சஞ்சாரத்தை தொடர்வதால் இந்த ஆண்டு முழுவதுமே நதிகள், சமுத்திரம் மற்றும் நீர்நிலைகளில் புனித நீராடுவது புஷ்கர காலத்தில் குளித்த புண்ணிய பலனை தரும். 

கடல் மற்றும் நதிகளில் தீர்த ஸ்நானம் செய்யும்முன் தகுந்த புரோஹிதர்களை கொண்டு ஸ்நான ஸங்கல்பம் செய்துக்கொள்வது சிறந்தது. முடியாதவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை கூறி துலா ஸ்நானம் செய்வது உசிதம்.

"கங்கேச யமுனே சைவ

கோதாவரி சரஸ்வதீ

நர்மதே சிந்து காவேரீ

ஜலேஸ்மின் சன்னிதிம் குரு"

"கவேர கன்யே காவேரி, சமுத்ர மகிஷிப் பிரியே

தேகிமே பக்தி முக்தி தவம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி "

ஜோதிடத்தில் தீர்த்த யாத்திரை மற்றும் கடலாடும் அமைப்பு யாருக்கு?

ஜோதிடத்தில் கடலும் கடல் சார்ந்த பொருட்களுக்கும் காரகர் சந்திர பகவான் ஆவார். காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகம் சந்திரனின் ஆட்சி வீடாகும். மேலும், கடக ராசி கடலும் கடல் சார்ந்த இடமுமான நீர் ராசியாகும். மாத்ரு காரகன், மனோ காரகன் என்றெல்லாம் ஜோதிடத்தில் சிறப்பிடம் பெற்ற நவக்கிரஹ நாயகர்களில் ஒருவரான சந்திரன் மஹாவிஷ்ணுவின் மனதிலிருந்து பிறந்ததாகவும் (சந்த்ரமா மனஸோ ஜாத: - புருஷ ஸூக்தம்), பாற்கடல் கடைந்த போது தோன்றியதாகவும் அறியமுடிகின்றது. பெரும் தவம் செய்து கிரஹ பதவி பெற்றவர் சந்திர பகவான். இந்த சந்திரனின் ராசியான கடகத்தை திரிகோண ராசிகளாக பெற்ற கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசி மற்றும் லக்னக்காரர்கள் அடிக்கடி தீர்த்த ஸ்நானம் செய்வர்.

ஜோதிடத்தில் ஒன்பதாம் வீட்டை தர்மஸ்தானம் என சிறப்பாக கூறப்படுகிறது. எனவே தீர்த்த யாத்திரை போன்ற புண்ணிய காரியங்கள் செய்ய லக்கினமும் ஒன்பதாம் பாவமும் பலமான தொடர்பில் இருக்கவேண்டும். ஜாதகத்தில் பன்னிரெண்டாம் பாவத்தை அயன சயன போக மோக்ஷ ஸ்தானம் எனப் போற்றப்படுகிறது.

கால புருஷனுக்கு தனுர் ராசி ஒன்பதாம் பாவமும் மீனம் பன்னிரெண்டாம் பாவமும் ஆகும். எனவே அதன் அதிபதியான குரு தர்மகாரியங்கள் மற்றும் தீர்த்த யாத்திரை போன்ற ஆன்மீக பயணங்களுக்கு செய்ய முக்கியப் பங்கு வகிக்கிறார்.

ஜாதக ஒன்பதாம் அதிபதி அல்லது கால புருஷ ஒன்பதாம் அதிபதி ஜலராசியில் இருந்து சுபகிரகத்தின் பார்வைபெரும் போது அந்த ஜாதகன் புனித பயணங்களை மேற்கொள்வான். மேலும் புனித நதியில் நீராடும் பாக்கியம் பெறுவான்.

ஒன்பதாம் வீட்டை குரு பகவான் பார்வை செய்தாலும் சந்திரனுக்கு ஒன்பதாம் வீட்டில் ஒரு சுப கிரகம் இருந்தாலும் அவன் பலமுறை புனித யாத்திரை செல்வான். 

குரு பகவான் ஒன்பதாம் வீட்டை பார்த்தாலும் ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் சேர்ந்து தர்மகர்மாதிபதி யோகம் பெற்று இருந்தாலும் அந்த ஜாதகன் பல புனித பயணங்களை மேற்கொள்வான்.

ஒன்பதாம் அதிபதி லக்னத்தில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றால் அந்த ஜாதகன் புனித நீராடுவான். சுபகிரகத்தின் பார்வை பன்னிரெண்டாம் வீட்டின் மீதும் பன்னிரெண்டாம் அதிபதி மீதும் இருக்கும் போது மத ரீதியிலும் தர்ம காரியங்களுக்காகவும் ஆன்மீக பயணங்களுக்காகவும் தனது சொத்தை செலவிடுவார். பன்னிரெண்டாம் அதிபதி சுபகிரகத்துடன் கூடிநின்றால் அந்த ஜாதகனை மரியாதைக்குரிய செலவு செய்ய வைக்கும்.

ஜோதிடத்தில் மேஷம், சிம்மம் மற்றும் தனுசு தர்ம திரிகோணங்கள் எனப்படும். மேலும் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய மூன்றும் மோக்ஷ திரிகோணங்கள் எனப்படும். தர்ம திரிகோண அதிபதிகளும் மோக்ஷ திரிகோண அதிபதிகளும் பரிவர்த்தனை பெற்று நின்றால் அடிக்கடி தீர்த்த யாத்திரை மற்றும் புனித யாத்திரை செய்யும் அமைப்பு ஏற்படும்.

மோக்ஷ திரிகோணங்களில் ஸர்ப கிரகங்கள் நின்றாலும் ஒன்பதாம் வீடு, ஒன்பதாம் வீட்டதிபதி ஸர்ப கிரங்களின் தொடர்பு பெற்றால் புனித யாத்திரை செய்யும் அமைப்பு ஏற்படும். தற்போதைய கோச்சாரத்தில் ராகு பகவான் நீர் ராசி மற்றும் மோட்ச திரிகோண ராசியான கடகத்தில் நின்று விருச்சிகம் மற்றும் மீனத்தை தனது திரிகோண பார்வையால் பார்க்கிறார்.

குருபகவான் நீரினை குறிக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரனோடு தொடர்பு கொள்ளும்போது தீர்த்தயாத்திரை செய்யும் நிலை ஏற்படும். தற்போதைய கோச்சாரத்தில் குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனது சுய வீடு மற்றும் மோட்ச திரிகோண ராசி மற்றும் நீர் ராசியான மீனத்தையும் சந்திரனின் வீடு மற்றும் நீர் ராசியான கடகத்தையும் பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

மாசி மகத்தில் கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது. அப்போது சிம்ம ராசிநாதன் சூரியன், கும்ப ராசியில் இருந்து சந்திரனை பார்க்கும் காலமே மாசிமகமாக திகழ்கிறது. இந்நாளில் சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூவருக்கும் கோவில்களில் அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.

மோட்சத்தை அருளக்கூடிய கேது பகவான் நட்சத்திரமான மகத்தில் இந்த நாள் அமைகிறது. இதனை கடலாடும் நாள் என்றும், தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். இந்நாளில் விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது விசேஷம். அப்படி செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை, சகல தோஷ நிவர்த்தி ஏற்படும்.

மாசி மகத்தில் வணங்க வேண்டிய ஸ்தலம்

மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களில் இருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. 

அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் ஶ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில். சென்னை திருமயிலையில் உள்ள சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய சந்திர ஸ்தலமாகும். பண்டைக் காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தீர்த்தங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. மாசி மாதத்தில் 7 சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காண்பதற்கு முன்பாக இந்தக் கோயிலில் இருந்த தீர்த்தக் குளங்களில் தான் தீர்த்தவாரி நடைபெறும். இத்தலம் நீருக்கு அதிபதியான சந்திர ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயில் இறைவனை திங்கள் கிழமைகளில் வணங்கி வர தண்ணீர் பஞ்சமே ஏற்படாது.

இந்த வருஷம் மழை பொய்த்துவிட்டதால் பிப்ரவரி மாதம் முதலில் இருந்தே பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையும் குடங்களோடு தண்ணீர் லாரிகளின் பின் போராடுவதை காண முடிகிறது. எனவே நாம் தண்ணீரை எத்தனை முறை மறுசுழற்சி முறையில் உபயோகபடுத்த முடியுமோ அத்தனை முறை பயன்படுத்திவிட்டு கடைசியில் கூட செடிகளுக்கு விட்டுவிடுவது சிறந்தது.

இந்த வருடம் மே ஜூன் மாதங்களின் நிலையை கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. எனவே சென்னையின் தண்ணீர் பிரச்னையை தீர்த்தருள வேண்டி மாசி மகம், பௌர்ணமி, திங்கள்கிழமை போன்ற சந்திர பலம் நிறைந்த நாட்களில் தீர்த்தபாலீஸ்வரரை வணங்கி வர வருண பகவானின் கருணையால் தண்ணீர் பிரச்னை தீர்ந்து நிம்மதி கிடைக்கும் என்பது நிதர்சனம்.

புண்ணியத் தலங்களுக்குச் செல்லும்போது தவறாமல், அங்குள்ள புண்ணிய நதி, கிணறு, குளம் ஆகியவற்றில் ஸ்நானம் செய்வது அவசியம் என்கிறது சாஸ்திரம். மாசிமகத்தன்று பிரசித்திப்பெற்ற புண்ணிய தலங்களில் ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேசுவரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் கொடுத்து பிதுர்க்கடன் செய்வது நலன் தரும். 

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com