உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி உலக காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி உலக காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பிப்ரவரி 14-ல் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்தே ரோஜா பூக்களுக்கு ஏற்படும் தட்டுப்பாடு காதலையும் ரோஜா பூவின் மகத்துவத்தையும் பறை சாற்றும். இந்த ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு தங்கள் காதலை வெளிப்படுத்த ரோஜா பூக்களை வாங்கிய வண்ணம் இருப்பதால் ரோஜா பூவிற்கு திடீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு விலையும் விற்றென்று உச்சத்திற்கு சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காதலர் தினம்

இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். வேலன்டைன் என்ற பெயருடைய இரு கிறித்துவத் தியாகிகளின் பெயர்களை அடுத்து இந்நாள் வேலன்டைன் நாள் என்றும் காதலர்களே பெரும்பாலும் இந்நாளைக் கொண்டாடுவதால் காதலர் நாள் என்றும் காதலர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. காதலர்கள் தவிர பலரும் தங்கள் அன்பை தெரிவித்துக் கொள்ளும் நாளாகவும் இது இருப்பதால் அன்பர்கள் நாள் என்றும் அழைக்கப்படுகிறது.  

சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த காதலர் வாரம்

பொதுவாக நாம் பிப்ரவரி 14-ஐ மட்டும் தான் காதலர் தினமாக்க கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். ஒரே நாளில் எந்த பிரச்சனையையும் சந்திக்காமல் காதலை கூறி அதே நாளுக்குள் அவரும் முடிவு செய்து காதலித்து விட முடியுமா என்ன? அதனால் தான் காதலர் வாரம் என்று ஒன்று கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி 7-ம் தேதி இந்த காதலர் வாரம் தொடங்கும். தொடர்ந்து 7 நாட்கள் முடிந்ததும் 14-ம் தேதி காதலர் தினமாக இருவரும் கைகோர்க்கும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காதலர் வாரம் பிப்ரவரி 7-ம் நாள் தொடங்கும். அன்றிலிருந்து 7 நாட்களும் ஏழு விதமான காதல் கொண்டாட்டங்கள் இருக்கும். 

பிப்ரவரி 7 - ரோஸ் டே (ரோஜா தினம்)

பிப்ரவரி 8 - பிரபோசல் டே (காதலை கூறும் தினம்)

பிப்ரவரி 9 - சாக்லேட் தினம்

பிப்ரவரி 10 - டெடி டே (டெடி பியர்)

பிப்ரவரி 11 - பிராமிஸ் டே ( சத்தியபிரமான நாள்)

பிப்ரவரி 12 - கட்டிப்பிடி தினம் (கட்டிப்பிடிக்கும் நாள்)

பிப்ரவரி 13 - கிஸ் டே (முத்த தினம்)

பிப்ரவரி 14 - வேலன்டைன்ஸ் டே (காதலர் தினம்)

காதல், காதலர்கள் இரண்டிற்குமே காரகர் சுக்கிரனேதாங்க! அது மட்டுமா? இந்த காதலர் வாரத்தின் கொண்டாட்டங்களுக்கு காரணமான ரோஜாவிற்கும், காதலுக்கும். சாக்லேட்டிற்கும், கட்டிப்பிடி வைத்தியத்திற்கும் முத்தத்திற்கும் கூட காரகர் சுக்கிரன் தானுங்கோ!

காதலர் தினத்திற்கும் ரோஜா பூவிற்கும் உள்ள ஜோதிட தொடர்பு

காதலின் சின்னமாக காதலர்களின் தேசிய மலராக உள்ளது ரோஜா. ரோஜா செடிகளை வீட்டுத்தோட்டத்தில் வளர்ப்பது மிகவும் அற்புதமான மனதிற்கு இதமான செயல். ரோஜா செடிகளை நேர்த்தியாகப் பராமரித்தால் கொத்துக் கொத்தாய் பூக்கள் பூத்துக் குலுங்கும்.

உலகத்தில் பெண்களை பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா? கண்டிப்பாக இருக்கமாட்டார்கள். பெண்களை பிடிக்காதவர்களும் இருக்கமாட்டார்கள். ரோஜா பூக்களின் அழகில் மயங்காதவர்களும் இருக்கமாட்டார்கள். சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் வரை பெண்களை விரும்புவதும் ரோஜாப்பூக்களின் அழகில் மயங்குவதும் காலம் காலமாக நடந்துகொண்டுதான் இருக்கும். ஏனென்றால் இரண்டிற்குமே காரகர் சுக்கிர பகவான் தாங்க! 

வண்ண வண்ணமாய் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் அள்ளித்தருவதால் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டுவதிலிருந்து, நோயுற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வது, அன்பை அறிவிப்பது வரை ரோஜாப்பூங்கொத்து அளிக்கப்படுகிறது. 

குளிர்ச்சி, மகிழ்ச்சி, வெற்றி, பாராட்டு, ஆறுதல், அன்பு இவை அனைத்திற்கும் காரகர் சுக்கிரபகவானே தான் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். விழாக்கள் எதுவானாலும்  மணம் மிக்க எழிலான ரோஜாப்பூங்கொத்து வழங்குவது நிறைவான வாழ்த்துகளாகத் திகழ்கிறது.

விழாக்கள், கொண்டாட்டங்கள், எழில், நறுமணம், வாழ்த்துக்கள் இவையனைத்திற்கும் காரகர் சுக்கிரன். மணம் வீசி மனம் கொள்ளைகொள்ளும் மயக்கும் ரோஜா சமையலிலும் இடம் பிடிக்கும் .கேக், புடிங், பானங்கள், ரோஸ் வாட்டர், எசன்ஸ், என மணக்கும் ..! மலர்களின் ராணியான ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது. 

ஜோதிடத்தில் செவ்வாய் ஆண்மகனையும், சுக்கிரன் அழகிய இளம்பெண்ணையும் குறிக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் எந்த விதத்தில் சேர்க்கை பெற்றிருந்தாலும் அவர்களுக்கு காதல் மற்றும் காம உணர்ச்சி அதிகமாக இருக்கும். இத்தகைய அமைப்பு பெற்றவர்கள் காதலில் ஒரு வேகத்தோடு இருப்பதோடு அதிகமாக சிகப்பு ரோஜாவையே தன் காதலிக்கு வழங்க விரும்புவார்கள். சிவப்பு நிற ரோஜா உண்மையான காதலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பிரபஞ்சத்தில் மிகவும் பிரபலமான குறியீடுகளில் ஒன்றாக காதலை குறிக்கும் சிவப்பு ரோஜா விளங்குகிறது.    

ரோஜாப்பூவின் மருத்துவ குணங்கள்

ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. வீட்டிலேயே கலப்படமில்லாமல் நாம் தயாரிக்கலாம்.

குல்கந்து வயிறு கோளாறுகளை நீக்கும். உடலின் பித்த அளவை சீராக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும். மலமிளக்கியாகச் செயல்பட்டாலும், குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது. உடல் சூட்டினால் ஏற்படும் பித்தத்தை சுக்கிரனின் காரகம் நிறைந்த குல்கந்து குளிர்ச்சியளிப்பதினால் குறைக்கிறது.

குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணெய் ஆண்மை வலிமையை அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது. ஆண்மைக்கும் விந்து உற்பத்திக்கும் காரகர் சுக்கிரன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்தானே! 

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளைக் குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்துகிறது. வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். வெள்ளப்போக்கையும் குறைக்கும்.பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி).காலபுருஷனுக்கு ஏழாம் வீட்டதிபதியான சுக்கிரன்தான் பெண்களின் அடிவயிறு சம்மந்த பிரச்சனைகளுக்கும் காரகராவார்.

குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்தாகச் செயல்படுகிறது. இது மன அழுத்தத்தை போக்குகிறது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் காய்ச்சி ஆறவைத்த பாலில் அரை ஸ்பூன் குல்கந்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் நன்றாக உறக்கம் வரும். இது முகப்பரு, உடல் நாற்றம் இவற்றைக் குறைக்கும். குல்கந்தைச் சிறுவர்கள் 1/2 தேக்கரண்டியும் பெரியவர்கள் 1 தேக்கரண்டியும், தினமும் காலை இரவு உறங்கும் முன்பும் சாப்பிட்டு வரலாம். ஆரோக்கியத்திற்கு ஏற்றது. என்னங்க! நல்ல சுகமான தூக்கத்திற்கு காரகரும் சுக்கிரபகவான் தானுங்கோ!

ஜோதிட ரீதியாக ரோஜா பூவை அதிகம் விரும்புபவர்கள்

1. சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப மற்றும் துலாம் ராசியை லக்னமாகவோ சந்திரா லக்டனமாகவோ கொண்டவர்கள்.

2. சுக்கிரன் ரிஷபம் அல்லது துலா ராசியில் ஆட்சி பெற்றவர்கள் மற்றும் மீனத்தில் உச்சமடைந்தவர்கள், கன்னியில் புதன் சந்திரனோடு சேர்ந்து நின்று நீசபங்க மடைந்தவர்கள்.

3. லக்னம் சுக்கிரன் சாரத்தில் அமையப்பெற்றவர்கள்.

4. பஞ்ச மகா புருஷயோகத்தில் மாளவியா யோகம் பெற்றவர்கள்.

5. சுக்கிரன் ஆத்ம காரகனாக அமையப்பெற்றவர்கள்.

6. குருவும் சுக்கிரனும் சேர்க்கை பெற்றவர்கள் ரோஜா பூவை விரும்பாவிட்டாலும் குல்கந்தின் சுவையில் மயங்கிடுவர்.

7. எந்ந லக்னமாக இருந்தாலும் சுக்கிரன் சந்திரன் சேர்க்கை பெற்றவர்கள்.

8. ரிஷப, துலாம் வீடுகளை 2,5,7,9 வீடுகளாக அமையப்பெற்றவர்கள் அல்லது 2,5,7,9 ஆகிய வீடுகளில் சுக்கிரன் நிற்கப்பெற்றவர்கள்.

9. ரோஜாவின் ராஜா என்றும் "நேரு மாமா" என்றும் செல்லமாக அழைக்கப்படும் முன்னால் பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு தனது சட்டையில் எப்போதும் ஒரு ரோஜா பூவை குத்திவைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். திரு ஜவஹர்லால் நேரு கடக ராசி கடக லக்னம் பெற்று சுக்கிரன் துலாராசியில் ஆட்சி பெற்று மாளவியா யோகம் பெற்றவர் என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்றதாகும்.

இந்த காதலர் வாரத்தில் இளம் காதலர்கள் மட்டும்தான் ரோஜா பூ கொடுக்க வேண்டும் என்பதில்லை. கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து நிற்கும் கணவன்மார்கள் கூட சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த ரோஜாப்பூவை காதலுடன் தங்கள் மனைவிக்கு வழங்கி கட்டிப்பிடி வைத்தியம் செஞ்சா கருத்துவேறுபாடு போயே போச்சு!

அட எங்க கிளம்பிட்டீங்க? ரோஜா பூ வாங்கத்தானே! வாழ்த்துக்கள்!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com