தேர்தலிலும் தேர்விலும் வெற்றிபெறச் செய்யும் சூரிய ஜெயந்தி!

சூரிய ஜெயந்தி எனும் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகிறது. சூரிய ஜெயந்தி சூரியனுக்குரிய விசேஷ தினமாகும். அதிலும்..
தேர்தலிலும் தேர்விலும் வெற்றிபெறச் செய்யும் சூரிய ஜெயந்தி!

சூரிய ஜெயந்தி எனும் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகிறது. சூரிய ஜெயந்தி சூரியனுக்குரிய விசேஷ தினமாகும். அதிலும் ரத சப்தமியோடும் இணைந்து வருவது மிகவும் சிறப்பாகும். நாம் பல பண்டிகைகளையும் விசேஷ தினங்களையும் கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம். 

அதை எதற்காகச் செய்கிறோம் என பொருளுனர்ந்து செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அந்த வகையில் சூரிய ஜெயந்தியை எதற்காகக் கொண்டாடி வருகிறோம் என  அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க தரிசனத்தையும் அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. சூரிய ஜெயந்தி அன்று நாம் செய்யும் பூஜைகள், மந்திரங்கள்,  ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தைக் காட்டிலும் சுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக்கூடியவை.

சூரிய பகவான் பிறந்த கதை

ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி. ஒருநாள் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தபோது தான் யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்க்க, ஒரு  பிராமணன் ''பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு'' என்று கேட்க, ''இருங்கள் கொண்டு வருகிறேன்'' என்று அதிதி மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து வந்து கணவருக்கு  உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள். ''ஏன் இவ்வளவு தாமதமாக வந்து உணவைக் கொடுத்தாய். என்னை  உதாசீனமா பண்ணினாய். உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்'' என கோபித்து சாபமிட்டான்.

பிராமணனின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி காஸ்யபரிடம் விஷயத்தை சொல்ல, ''நீ இதற்கெல்லாம் வருந்தாதே, அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு  மகன் நமக்கு கிடைப்பான்'' என்று வாழ்த்த ஒளி பிரகாசமான சூரியன் மகனாகப் பிறந்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில்  ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.  

சூரிய ஜெயந்தி நாளில் காலை புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய  ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பண்டங்களை தருவதும், செப்பு பாத்திரத்தில் வைத்து கோதுமையை தானம் செய்வதும் (கோதுமை  தானம் செய்தால் பார்வை சரியாகும்), சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். அந்நாளில் மறக்காமல் புண்ணிய நதிகளில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்ய கண்களில் உள்ள  கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.

உலகத்தின் உயிராகச் சூரியதேவன் விளங்குகிறார். வேதகாலம் முதலே சூரியனைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில்  ஒன்றாக விவரிக்கிறது. யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்று போற்றுகிறது. அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து  விடுபடுவர் என்று வழிகாட்டுகிறது. மிகப்பழங்காலத்தில் சூரியவழிபாடு வடமாநிலங்களில் பரவி இருந்த காலத்தில் வன்முறை வழிபாடாக சூரியனுக்கு ரத்தத்தை  அர்க்கியமாக (கைகளில் வார்த்து சூரியனுக்குச் சமர்ப்பித்தல்) இருந்து வந்தது தெரிகிறது.

பார்வையருளும் சூரிய ஜெயந்தி

ஜோதிடத்தில் சூரியன் வலது கண்ணுக்கும் சந்திரன் இடது கண்ணுக்கும் காரக கிரகங்களாக அமைந்துள்ளனர். இரண்டாம் வீடு வலக்கண்ணையும் பன்னிரண்டாம் வீடு  இடக்கண்ணையும் குறிக்கும் பாவங்களாகும். இரண்டாம் இடத்திலும் - பன்னிரண்டாம் இடத்திலும் பாவ கிரகங்கள் இருந்து இந்த இடத்து பலமில்லாமல் இருந்து சூரியனும்  சந்திரனும் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அந்த ஜாதகனுக்கோ அல்லது ஜாதகிக்கோ கண் சம்பந்தமான குறைபாடுகள் உண்டாகும் .

சூரியன் லக்னத்தில் அமைவது கண்களை பாதிக்கும் என்கிறது மருத்துவ ஜோதிடம். சூரியன் மேஷ லக்னத்தில் உச்சம் பெற்று இருந்தால் கண்களில் எரிச்சல் ஏற்படும். மேஷம் செவ்வாயின் வீடு என்பதால் கண்களில் உஷ்ணத்தால் ஏற்படும் எரிச்சல் ஏற்படும். சூரியன் சிம்ம லக்னத்தில் ஆட்சி பெற்று இருந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும்.  சூரியன் கடகத்தில் லக்னத்தில் இருந்தால் கண்களில் பீளையும் நீரும் வடியும். மேலும் கண் புரை நோய் ஏற்படும்.

சூரியன் துலா லக்னத்தில் நீசம் பெற்றிருந்தால் பார்வையிழப்பு ஏற்படும். சூரியன் இரண்டாம் வீட்டில் நிற்பது, இரண்டாம் வீட்டில் இரண்டிற்கு மேற்பட்ட அசுப கிரகங்கள்  நிற்பது, அசுப தொடர்பு பெற்ற சந்திரன் இரண்டாம் வீட்டில் நிற்பது போன்றவை பார்வை இழப்பை ஏற்படுத்தும். சூரியனும் சந்திரனும் இணைந்து இரண்டாமிடத்தில் நிற்பது  மாலைக்கண் நோயை ஏற்படுத்தும். இதுபோன்ற ஜாதக அமைப்பு உடையவர்கள் சூரிய ஜெயந்தியில் சூரிய பகவானை வணங்கி வரப் பார்வை கோளாறுகள் நீங்கும்.

அரசு வேலைக் கிடைக்க சூரியன் வழிபாடு

ஜோதிடத்தைப் பொறுத்தவரை பத்தாமிடம் இடம் உத்தியோக ஸ்தானமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை  சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலைக் கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் கர்மகாரகன் எனக் கூறப்படும் சனைஸ்வரன் அரசாங்க உத்தியோக காரகன்  சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலைக் கிடைக்கும். சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக  அமையும். செவ்வாய் பத்தாமிடம் மற்றும் சூரியன் சனி ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் சீருடை பணியாளர்கள் எனப்படும் காவல் துரை, தீயணைப்பு  மற்றும் ராணுவத்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள். இத்தகைய அமைப்பை ஜாதகத்தில் கொண்டவர்கள் சூரிய ஜெயந்தி நாளில் வணங்கினால் அரசாங்க வேலை  விரைவில் கிடைக்கும் என்பது நிதர்சனம்.

அரசியலில் பிரகாசிக்க சூரியன் வழிபாடு

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுடன் சனி சேர்க்கை பெற்று இருந்தால் ராஜாங்க சம்மந்தமான வேலைகள், அரசு, அரசு சார்ந்த தொழில், அரசியல், தலைமை பதவி,  கெளரவ பதவிகள் ஆகியவை அமைகின்றது. அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன் சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான  சனைஸ்வர பகவானும் ஆவர். தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் பலரும் அரசியலில் மாற்றத்தை நோக்கிக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அரசியல்,  அதிகாரம், அந்தஸ்து, கௌரவம், உயர்பதவிகள் ஆகியவற்றைக் குறிக்கும் சூரியன் கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் பலமிழந்து நிற்கிறது. மேலும் ஆண்மை,  வீரம், பலம், அதிகாரம் ஆகியவற்றை தரும் செவ்வாய் பகை வீடான கன்னியில் பலமிழந்து நிற்கின்றது. இந்நிலையில் அரசியலில் கொடிகட்டி பறக்க விரும்புபவர்கள்  சூரிய ஜெயந்தியில் சூரியனை வணங்க அரசியலில் அமோக வெற்றி உண்டாகும்.

இந்த ரத சப்தமி மற்றும் சூரிய ஜெயந்தி நாளில் சென்னை வியாசர்பாடி இரவீஸ்வரர் மற்றும் சூரியனார் ஜோயில் போன்ற ஸ்தலங்களில் வணங்கிவர அரசியலில் வெற்றி,  அரசாங்க வேலை மற்றும் உயர்பதவி/தலைமை பதவி கிட்டும். சிவப்பு மலர்களால் சூரியனாரை அர்ச்சித்து கோதுமையை நிவேதித்து விரதம் மேற்கொள்வது நலம்.  ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படித்தால் எதிரிகளை வெற்றி கொள்ள முடியும். எதிரிகள் நம் கட்டுக்குள் இருப்பார்கள்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com