திங்கள்கிழமை 22 ஜூலை 2019

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2019

Published: 01st February 2019 12:28 PM

 

2019-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் அவர்கள் நமக்கு துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். 

ஸ்ரீ விளம்பி ஆண்டு மாசி மாதம் 1-ம் தேதி (13.02.2019) அன்று நண்பகல் 13.30 மணி (ஐஎஸ்டி) அளவில் வாக்கிய பஞ்சாங்கப்படி, ராகு-கேது பகவான்கள் கடக, மகர ராசிகளிலிருந்து மிதுன, தனுசு ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.

வாசன் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, மாசி 23 (07.03.2019) அன்று விடியற்காலை 5.30 மணி (ஐஎஸ்டி) அளவில் ராகு- கேது பகவான்களின் பெயர்ச்சி உண்டாகிறது.

மற்றொரு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, பங்குனி மாதம் 9-ஆம் தேதி (23.03.2019) மாலை 4.14 மணி அளவில் ராகு-கேது பகவான்களின் பெயர்ச்சி ஆவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு, ராகு-கேது பகவான்கள் 17.09.2020 வரை சஞ்சரித்துவிட்டு, 18.09.2020 அன்று இரவு 8.45 மணி (ஐஎஸ்டி) அளவில் ரிஷப, விருச்சிக ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.

முதல் நான்கு (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்) ராசிகளுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை பார்ப்போம். 

{pagination-pagination}

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழில் மூலம் நல்ல லாபமும் புதிய தொழிலில் ஈடுபடும் வாய்ப்பும் கிட்டும். தேவைக்கேற்ப பணவசதி உண்டாகும். பொருளாதாரம் தொய்வு இல்லாமல் சீராகவே செல்லும். சிலருக்கு வண்டி வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களையும் நடத்தி மகிழ்வீர்கள். 

உற்றார் உறவினர்கள் நேயமாகப் பழகி குடும்பத்தின் அமைதியைக் கூட்டுவார்கள். பொதுச் சேவையில் நாட்டமுண்டாகும். அரசு அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நோய் நொடி உபாதைகள் தீர்ந்து ஆரோக்கியமாக வலம் வருவீர்கள். எடுத்த காரியங்களில் பெருமளவுக்கு வெற்றி கிடைக்கும். பழைய கடன்களையும் திரும்ப அடைத்து விடுவீர்கள். 

பூர்வீக அல்லது அசையாச் சொத்து சம்பந்தமாக ஏற்பட்ட சிக்கல்கள் தீர்ந்து அனுகூல சூழ்நிலையும் அமைந்து விடும். மறைமுக எதிர்ப்பாளர்களின் தொல்லையால் சண்டைச் சச்சரவு போன்றவை ஏற்பட்ட போதிலும் உடனுக்குடன் நிவாரணமும் ஏற்பட்டுவிடும். தர்க்கம் செய்வோரை சமயோசித பேச்சினால் வெற்றி கொள்வீர்கள். குடும்பத்தாருடன் ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவீர்கள். சிலருக்கு புதிய இடங்களுக்குச் சென்று செய்தொழிலை விரிவுபடுத்தும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.  

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் வாழ்க்கையில் பிரபலமான ராஜயோகம் உண்டாகும். மனதில் இருந்த சஞ்சலங்களும் வருத்தங்களும் மறைந்து தெளிவு பிறக்கும். வெளியிலிருந்து எதிர்பார்க்கும் விஷயத்தில் அனுகூலமான தகவலும் வந்து சேரும். செய்தொழில் மேன்மை அடையும். சிலருக்கு புதிய நூதனமான தொழில் ஏற்படும் பாக்கியம் உண்டாகும். தெய்வ பலம் கூடும். ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்த பழைய திட்டங்கள் முயல் வேகத்தில் நடக்கத் தொடங்கும். சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். 

உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க நினைத்தவர்கள் தவிடுபொடியாகி விடுவார்கள். பெயர், புகழ், செல்வாக்கு பலருக்கு உதவி செய்வது என உயர்வீர்கள். மற்றவர்களை உங்களது வாக்கு சாதுர்யத்தால் நயமாகப் பேசி வென்று விடுவீர்கள். அதோடு உங்களின் பேச்சாற்றலால் பணவரவும் உண்டாகும். பல அரிய சந்தர்ப்பங்களைக் கோட்டை விட்டவர்கள் இப்பொழுது மீண்டும் படித்து உற்சாகத்துடன் எழுந்து விடுவார்கள். மொத்தத்தில் மலைபோல் வந்த வினையெல்லாம் பனிபோல் கரைந்து விடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு குறையும். மேலதிகாரிகளைச் சாமர்த்தியத்துடன் சமாளிப்பீர்கள். இருப்பினும் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்வதால் குழப்பங்களிலிருந்து தப்பிக்கலாம். பொருளாதார வசதி மேம்பாடடையும். பேச்சில் வேகம் வேண்டாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருந்து வரும். புதிய தொழில் செய்வதற்கு திட்டங்களைத் தீட்டுவீர்கள். தனித்து இயக்குபவர்கள் கூட்டுத்தொழிலில் ஈடுபாடும் உண்டாகும். 

சிலருக்கு வியாபார நிலையங்கள் நீண்டகால குத்தகைக்கு கிடைக்கும். மொத்தத்தில் லாபம் கூடும். விவசாயிகள் ஆதாயங்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டிவரும். நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீரைத் தேக்கி வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கால்நடைகளாலும் பால் வியாபாரத்தாலும் பயன் அடைவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு பெரும்பாலான காலங்களில் கிடைக்கும். முயற்சிகளின் முழுப்பலன்கள் படிப்படியாகக் கிடைக்கத் தொடங்கும்.  

அரசாங்க அதிகாரிகளும் உங்கள் பேச்சை மதிப்பார்கள். மாற்றுக் கட்சியினரிடமிருந்து தள்ளி இருக்கவும். வீண் அபவாதங்களுக்கு ஆளாகலாம். நீங்கள் செயல்படும் விதத்தினை எதிர்கட்சியினரும் புகழ்வார்கள். பயணங்களால் நன்மைகள் அடைவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதன் மூலம் பெயரும் புகழும் பெறுவீர்கள்.

பெண்மணிகளுக்கு கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். தெய்வ வழிபாட்டைக் கூட்டிக்கொள்ளுங்கள். மாணவ மணிகள் தினமும் நன்றாகப் படித்து தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியரின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள்.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடந்தேறும். ஏற்கெனவே தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக நடந்தேறிவிடும். அரசாங்க ஆதரவு அரசியல்வாதிகளின் பக்கபலமும் தொடர்ந்து நீடித்துவரும். புதிய நண்பர்களும் உறவினர்களும் கிடைப்பார்கள். உற்சாகத்துடன் செயல்களைச் செய்வீர்கள். கணிசமான தொகை கிடைக்கும். 

சேமிப்பையும் உயர்த்திக் கொள்வீர்கள். உஷாராக இருந்து புதிய அசையும் அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். கடமை தவறாமல் உழைத்து பெயர், புகழ் பாராட்டைப் பெறுவீர்கள்.  செய்தொழிலை விரிவுபடுத்த  அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் தீர்ந்துவிடும். தேக ஆரோக்கியமும் சிறப்பாக அமையும் காலகட்டமாக இது அமைகிறது.

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் சுயமாக சிந்தித்து சரியாக முடிவெடுப்பீர்கள்.  மனதில் இருந்த வீண் சஞ்சலங்களும் குழப்பங்களும் மறையும். நண்பர்களுடன் விநோத மனப்பான்மையை விட்டொழித்து  சுமுகமாக நடந்து கொள்வீர்கள். சில காரியங்கள் சிறிது அலைச்சல்களுக்குப்பிறகே முடிவடையும். வாராக் கடன் என்று நினைத்திருந்த பணம் திரும்ப கிடைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பொருளாதார வளம் சீராகத் தொடங்கும். குழந்தைகள் புதிய படிப்பில் சேர்வார்கள். அவர்களுக்காக கணிசமாகச் செலவு செய்யவும் நேரிடும். சமூகத்தில் உயர்ந்தவர்களுடன் நல்லுறவு ஏற்படும். 

குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் தேடி வரும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆகார விஷயங்களில் கவனம் தேவை. மூத்த சகோதர, சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய வீடு கட்டும் வாய்ப்பும் ஏற்படும். கையிருப்புப் பொருள்கள் மீது கவனம் தேவை. சிலருக்கு களவு போகவும் வாய்ப்புள்ளது. இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும். எவருக்கும் முன்ஜாமீன் போடுவதோ, கடன் வாங்கிக் கொடுப்பதோ கூடாது.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு விரும்பிய இடமாற்றம் மற்றும் ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். சக ஊழியர்களின் எதிர்ப்பும் தொல்லையும் உங்களை ஒன்றும் செய்யாது. அவர்களுடன் நட்புடனும் பரிவுடனும் நடந்து கொள்ளவும். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற சந்தர்ப்பங்கள் உண்டாகும். எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த வீட்டுக் கடன்கள் கிடைக்கப் பெற்று இந்த காலத்தில் கிரகப் பிரவேசம் செய்வீர்கள். 

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள். கூட்டாளிகள் நட்புடன் நடந்து கொள்வார்கள். எல்லா முடிவுகளையும் கூட்டாளிகளை கலந்தாலோசித்தப் பிறகே எடுக்கவும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காது.  எல்லா காரியங்களிலும் தடையுடன் கூடிய வெற்றி கிடைக்கும். காய்கறிகள், பால் வியாபாரத்தால் லாபம் கூடும். புதிய ஸ்திரச் சொத்துகளை வாங்குவீர்கள். சுபச் செலவுகள் உண்டாகும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பும் மரியாதையும் பெருகும். பல வழியிலும் வருமானம் பெருகும். தொண்டர்களை அனுசரித்துச் செல்லவும். அரசாங்க அதிகாரிகளால் தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்வரும் இடர்களை திறமைக்குக்கேற்றவாறு சமாளித்துவிடுவீர்கள். கலை சம்பந்தப்பட்ட பிரயாணங்களில் ஏற்படும் சிரமங்களுக்கும் சங்கடங்களுக்கும் ரசிகர்களைக் குறை கூறாமல் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளவும். 

பெண்மணிகளுக்கு இந்த காலகட்டம் முழுவதும் ஓரளவு மகிழ்ச்சியைக் காண நேரிடும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் குறையாது. குடும்பத்தில் இருந்த பிணக்குகள் நீங்கும். கணவரின் உதவியுடன் புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் பிரிந்தவர்கள் கூடுவார்கள். மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் இருக்க வேண்டிய காலகட்டமிது. 

உங்கள் திறமைகளை வெளிக்கொணர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாவீர்கள். உழைப்பைக் கூட்டிக் கொள்வீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களை அரவணைத்துச் செல்லவும்.

பரிகாரம்: ஸ்ரீ சீதா ராமரை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் தடைபட்டிருந்த சுப காரியங்கள் அனைத்தும் நிச்சயமாக நடந்தேறும். உடன்பிறந்தோருடன் கலந்து குடும்ப பாகப்பிரிவினையை சுமுகமாக செய்து முடிப்பீர்கள். 

வெளிநாடு சம்பந்தப்பட்ட வர்த்தகத்தின் மூலம் ஒப்பந்தங்களும் வந்து சேரும். வெளியில் கொடுத்திருந்த பணமும் சரியான நேரத்தில் கிடைக்கும். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு காரியங்களைச் செய்வீர்கள். பெற்றோருக்கு ஆதரவாக இருப்பீர்கள். அவசரமாக எந்த முடிவையும் எடுக்காமல் உயர்ந்தவர்களைக் கலந்தாலோசித்தப் பிறகே எடுக்கவும். சமூகத்தில் உயர்ந்தோரின் ஆதரவு நிரம்பக் கிடைக்கும். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களுக்கு விரைவில் விசா கிடைத்துவிடும். 

எவ்வளவு பிரச்னை ஏற்பட்டாலும் சமாளிக்கக் கூடிய துணிவும் சாமர்த்தியமும் உண்டாகும். வழக்குகளில் முடிவு தாமதப்படுமாகையால் கூடுமான வரையில் வாய்தா வாங்கிக் கொள்வதே நலமாகும். குடும்பத்தில் அமைதி நிறையும். குல தெய்வ வழிபாட்டையும் செய்வீர்கள். எதிரிகளின் சூழ்ச்சிக்கு இடம் கொடாமல் கவனத்துடன் நடந்து கொள்ளவும்.

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் சில நன்மைகள் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான விஷயங்களில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். செலவுகளை ஈடுசெய்ய தக்க அளவுக்கு வருமானம் வந்து கொண்டிருக்கும். இதுவரை விலை போகாத அசையாச் சொத்துகள் நல்ல விலைக்கு விற்பனையாகும். குடும்ப நிர்வாகத்தை சிறப்பாக நடத்துவீர்கள். குழந்தைகளாலும் மகிழ்ச்சி உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு சிறப்பாக இருக்கும். அவர்களின் அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்வீர்கள். உடல்நலம் சற்று பாதிக்கப்பட்டாலும் மருத்துவ வழிச் செலவுகளுக்குப் பின்னர் நிவர்த்தியாகும்.

தந்தை மற்றும் இளைய சகோதரர்களுக்குள் சில பிரச்னைகள் தோன்றினாலும் நிதானத்துடன் சமாளிப்பீர்கள். ஏழை எளியவர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். சிலர் நல்ல வசதியான வீட்டிற்கு மாறுவார்கள். மனதில் இருக்கும் அதிருப்தியை வெளிக்காட்டாமல் நண்பர்களுடன் பழகுவீர்கள். பூர்வீகச் சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் மறையும். பூர்வீகச் சொத்துகளை பராமரிக்க வேண்டி செலவு செய்ய நேரிடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆலய திருப்பணிகளிலும் கலந்து கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் நற்பெயர் எடுக்க சற்று அதிகமாக உழைக்க வேண்டி வரும். சக ஊழியர்களிடம் இருந்து வந்த பகை நீங்கும். அவர்களால் சிறு உதவிகளைப் பெற முடியும். அலுவலகம் சம்பந்தமான பயணங்களில் நன்மையும் பணவரவும் உண்டாகும். வேலைகளை பதற்றுப்படாமலும் நிதானத்துடனும் யோசித்து ஈடுபடுவது நல்லது. வியாபாரிகள் பேச்சில் வசீகரம் கூடும். 

வியாபாரம் சூடுபிடிக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகள் வட்டாரத்தில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக முடியும். போட்டியாளர்களை சமாளிப்பீர்கள். கூட்டாளிகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் எதிர்பார்த்த அளவில் இருக்காவிட்டாலும் முதலுக்கு மோசம் போகாமல் இருக்கும். நீர்பாசன வகையில் கவனம் செலுத்துவீர்கள். வயல் வரப்பு விஷயங்களை சரியாக வைத்துக் கொள்ளாவிட்டால் வீண் சண்டைச் சச்சரவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியிலும் வெளியிலும் செல்வாக்கு அதிகரிக்கும். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெற்று மகிழ்வீர்கள். வருமானம் சீராக இருக்கும். எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளை முன்கூட்டியே அறிந்துகொண்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். கலைத்துறையினருக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். 

கர்வம் நிறைந்த பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் குறிப்பிட்ட தடங்கல்களை மீறி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். தாயாரின் அரவணைப்பினால் சத்தான ஆகாரங்களை உண்டு மகிழ்வீர்கள். வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவம் அனைத்தும் படிப்படியாக உயரத் தொடங்கும். குடும்பத்தினரிடையே இதுநாள் வரை மறைமுகமாக இருந்து வந்த போட்டி பொறாமைகள் மறைந்து நேசம் கூடத் தொடங்கும். போக்குவரத்து, கமிஷன் ஏஜெண்ட், ரசாயனம் போன்ற துறையினர் அபரிமிதமான வளர்ச்சியைக் காண்பார்கள். 

செய்தொழிலில் புதிய நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். வெளிநாட்டில் சிலகாலம் தங்கியிருந்தவர்கள் தாயகம் திரும்பி குடும்பத்துடன் இணைவார்கள். குடும்பத்துடன் தீர்த்த யாத்திரை செல்வதற்கும் வாய்ப்பு உண்டாகும்.  பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தானதர்மங்கள் செய்வீர்கள். 

அரசாங்கத்திலிருந்த கெடுபிடிகள் மறையும். உங்கள் அனுபவ அறிவால் செய்தொழிலை செம்மையாக நடத்துவீர்கள்.  மந்தமாக இருந்தவர்கள்  சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த குறைகள் அகன்று நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும். 

வெளியில் கொடுத்திருந்த பழைய கடன்களையும் வசூலிப்பீர்கள். மனதில் இருந்த சஞ்சலங்களும் குழப்பங்களும் விலகும். நெடுங்காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த, நவீன வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் மாறும் காலகட்டமாக இது அமைகிறது.

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் பிள்ளைகள்  விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.  குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தையும் மற்றையோருக்கு பேரக்குழந்தையும் பிறக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்களும் பணப்பற்றாக் குறையும் அகன்று பொருளாதாரம் மேன்மையடையும். பெற்றோருக்கு ஆதரவாக இருப்பீர்கள். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகளும் குறையும். தேக ஆரோக்கியத்தில் எந்தக் குறையும் இருக்காது. பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள்.  

முக்கிய விஷயங்களில்  எதிர்பார்த்த திருப்பங்கள் உண்டாகக் காண்பீர்கள். வருமானத்தில் பெரும் பகுதியை  புதிய முதலீடுகளில் சேமிப்பீர்கள். குடும்பத்துடன் புனித தலயாத்திரைகளை மேற்கொள்வீர்கள்.  எடுத்த காரியங்கள் நினைத்தபடி வெற்றி பெறும். பொன்பொருள் ஆபரணச் சேர்க்கையும் உண்டாகும். இதுவரை முடிவு பெறாத வம்பு வழக்குகள், வில்லங்கங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றியைக் கொடுக்கும். மனக்குழப்பங்கள் விலகி, புதுவித உற்சாகமும் தைரியமும் ஏற்படக்கூடிய காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை முழுமையாகச் செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகளுக்குத் தடங்கல்களைக் காண்பார்கள். மேலதிகாரிகளின் அரவணைப்பு உங்களுக்கு தொடரும். வேலையில் பளு கூடுமாகையால் வேலைகளைப் பட்டியலிட்டு  செயல்படுத்தவும். சிலர் விரும்பத்தகாத இடமாற்றங்களையும் பெறுவீர்கள். பணவரவுக்கு குறைவு வராது. வியாபாரிகளுக்கு தேவையான பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும். சாதுர்யமாக செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அள்ளலாம். 

போட்டிகளையும் சமாளிக்கலாம். கொடுக்கல் வாங்கல்கள் சீராகவே முடிவடையும். புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம்.  விவசாயிகளுக்கு இது சாதகமான காலகட்டமாகும். விளைச்சலைப் பெருக்கி லாபத்தை அள்ளுவீர்கள். கால்நடைகளில் எதிர்பார்த்த வருமானங்களைப் பெறுவீர்கள். புதிய நிலங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்கும் எண்ணங்கள் மேலோங்கும். 

அரசியல்வாதிகள் கட்சியில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர நினைக்க வேண்டாம். தற்போதுள்ள நிலைமையை பயன்படுத்தி கட்சி மேலிடத்திடம் நற்பெயர் எடுக்க முயலுங்கள். கலைத்துறையினர் எதிர்பார்க்கும் இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பது தாமதமாகும். ஒப்பந்தங்கள் செய்வதில் முட்டுக்கட்டைகளைச் சந்திப்பீர்கள். மனம் இயற்கையோடு இணைந்த வாழ்வைத் தேடும் காலகட்டமிது. 

பெண்மணிகள் குடும்பத்தாரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது சிறிது யோசித்து எடுக்கவும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நலம் தரும். 

மாணவமணிகளுக்கு இந்த காலகட்டத்தில் சிறிது அவசர புத்தியிருக்கும். வீண் விரயங்களிலும் மாட்டிக் கொள்வீர்கள். அதனால் "கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் கல்வியில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் ராகு கேது பெயர்ச்சிபலன்கள்

More from the section

திருவள்ளூர் திரௌபதி அம்மன் கோயிலில் மகா பாரத பெருவிழா
மனக்குழப்பம் உள்ளவர்கள் செல்லவேண்டிய காவனூர் சிவன்கோயில்
அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஓய்வறைகள் அமைக்கப்படும்: ஆட்சியர் பேட்டி
அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி 
திதி சூனியத்தில் நேர் - எதிர்மறை கோட்பாடுகள்!