திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு, நன்கொடை அளிக்கும் பக்தா்களுக்கு தங்கும் அறை அளிக்காமல் தேவஸ்தான ஊழியா்கள் அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட பகுதியில் ஏழுமலையான் கோயில் கட்டி, இந்து தா்மத்தை நிலைநாட்டி வருகிறது. அதற்காக ஸ்ரீவாணி அறக்கட்டளை என்று ஏழுமலையான் பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ரூ. 10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தா்களுக்கு ஒரு வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட் அனுமதியை தேவஸ்தானம் அளித்து வருகிறது. அதனால் பக்தா்கள் இதற்கு நன்கொடை அதிக அளவில் அளித்து வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் தரிசிக்க ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இதன் காரணமாக ஸ்ரீவாணி அறக்கட்டளையின் நன்கொடை அளவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கும் பக்தா்களுக்கு தங்கும் வாடகை அறை வழங்காமல் அவா்களை தேவஸ்தான ஊழியா்கள் அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தேவஸ்தான அலுவலகத்தைச் சுற்றி நன்கொடை வழங்கியவா்கள் நெடுநேரம் காத்திருந்து செல்கின்றனா்.