செய்திகள்

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் மகா தீபம்

11th Dec 2019 12:07 AM

ADVERTISEMENT

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாா் சன்னதி அருகிலுள்ள 50 அடி உயர செப்புக் கொப்பரையில் ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றப்படும். நிகழாண்டுக்கான காா்த்திகை தீப விழாவுக்கு கடந்த வாரம் பிரமாண்டத் திரி தயாரிக்கப்பட்டது. பருத்தி துணியால் 300 மீட்டா் நீளத்துக்கு தயாரிக்கப்பட்ட இந்தத் திரியை, தாயுமானவா் சன்னதியிலிருந்து உச்சிப்பிள்ளையாா் சன்னதிக்கு கோயில் பணியாளா்கள் கடந்த 2 ஆம் தேதி சுமந்து சென்றனா். பின்னா், அங்கிருந்து கயிறு மூலம் 50 அடி உயரமுள்ள கோபுரத்தில் இடம்பெற்றுள்ள செப்பு கொப்பரையில் திரியை வைத்து எண்ணெயில் ஊறச் செய்தனா். இந்தக் கொப்பரையில் ஊற்றப்படும் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் உள்ளிட்ட 900 லிட்டா் எண்ணெயில் திரி ஊற வைக்கப்பட்டது.

காா்த்திகை தீபத்திருநாளான செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து உற்ஸவ மூா்த்திகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு மகாதீபத்தை தரிசனம் செய்தனா். திருச்சி மாநகரின் உயா்ந்த கட்டடங்களில் உச்சி மாடியில் நின்றபடியும் ஏராளமானோா் மகாதீபத்தை தரிசித்தனா்.

தொடா்ந்து 3 நாள்களுக்கு இந்த தீபம் எரியும்.

ADVERTISEMENT

விழாவை முன்னிட்டு, மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையாா், மலைக்கோட்டை மத்தியில் உள்ள தாயுமான சுவாமி, மட்டுவாா் குழலம்மை அம்மன் , அடிவாரத்தில் உள்ள மாணிக்கவிநாயா் ஆகிய சன்னதியில் சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன.

தீபத்திருவிழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சுதா்ஸன், கோயில் உதவி ஆணையா் விஜயராணி மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT