அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான் காட்சியளித்த ஐதீக நிகழ்வாக தங்க மீனை கடலில் விடும் விழா நாளை மாலை நடைபெறுகிறது.
தமிழ், வீரம், சமயம், வரலாறு ஆகிய அனைத்திலும் பெருமை பெற்ற நாகைக்கு அளப்பரிய ஆன்மிக சேவையாற்றியவர் 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார். நாகையில் நம்பியார் நகர் என அழைக்கப்படும் திருநுளைப்பாடியில் அவதரித்த அதிபத்த நாயனார், மீனவர் தலைவராகவும், மிகச் சிறந்த சிவத்தொண்டராகவும் விளங்கியவர்.
தனது வலையில் சிக்கும் முதல் மீனை சிவனுக்கு அர்ப்பணம் எனக் கூறி கடலில் விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த இவர், சிவபெருமான் மீது எல்லையற்ற பக்தி கொண்டிருந்தார். அதிபத்த நாயனாரின் பக்தியை உலகுக்கு உணர்த்த திருவுளம் கொண்ட இறைவன், திருவிளையாடலால் அதிபத்த நாயனாரின் வலையில் ஒரு மீன் மட்டுமே சிக்குவது என்பது வழக்கமானது. இவ்வாறு கிடைக்கும் மீனையும் கடலில் விடுவதை அதிபத்தர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒருநாள் அதிபத்த நாயனாரின் வலையில் தங்க மீன் ஒன்று சிக்கியது. தன்னலம் கருதாமல் அந்த மீனையும் அதிபத்தர் சிவனுக்கு அர்ப்பணம் செய்தார். இதைக் கண்ட சிவபெருமான், பார்வதி சமேதராக எழுந்தருளி, அதிபத்த நாயனாருக்கு காட்சியருளினார் என்பது ஐதீகம். அதிபத்த நாயனாரின் சிவத்தொண்டை போற்றும் வகையில் நாகையில் நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணசுவாமி கோயிலில் தனி சன்னிதி உள்ளது.
இந்த ஐதீக பெருவிழா நாகை நம்பியார் நகரில் ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படுகிறது. நிகழாண்டில், இவ்விழா ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நம்பியார் நகர் மீனவ சமுதாய மக்கள் செய்து வருகின்றனர்.