செய்திகள்

திருமலையில் மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரைக் கடிதங்களுக்கு கட்டுப்பாடு

28th Aug 2019 02:36 AM

ADVERTISEMENT


திருமலையில் செயல்பட்டு வரும் அரசியல் பிரமுகர்கள் வழங்கும் பரிந்துரைக் கடிதங்களுக்கு, கட்டுப்பாடு விதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
 ஆந்திர மாநிலத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்றது முதல், ஆட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல்பாடுகளிலும் பெருமளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
 சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, சந்திரபாபு நாயுடுவின் கடந்த ஆட்சி வரை திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு, விஐபி பிரேக் தரிசனத்துக்கு அனுமதி, கட்டண சேவைக்கான டிக்கெட்டுகள், தங்கும் அறைகள் உள்ளிட்ட பணிகளை செய்ய ஒரு பெரும் கூட்டம் இருந்து வந்தது.
பக்தர்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ற வகையில், ஆந்திர மாநில மக்கள் பிரதிநிதிகள், மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் உள்பட பல்வேறு தரப்பினரின் பரிந்துரைக் கடிதங்களை பயன்படுத்தி, இத்தகைய வசதிகளை பிஆர்ஓ-க்கள் என்ற பெயரில் செயல்பட்டு வந்த இடைத்தரகர்கள் பக்தர்களுக்கு செய்து கொடுத்து வந்தனர். இதற்காக பலவிதமான தொகைகள் பெறப்பட்டன. இடைத்தரகர்ளுக்கு ஆதரவாக, தேவஸ்தானத்தில் வேலை செய்யும் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை அதிகாரிகளும் ஒத்துழைப்புக் கொடுத்து பயனடைந்தனர்.
இந்நிலையில், ஆந்திரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அறங்காவலர் குழுத் தலைவராக ஒய்.வி. சுப்பா ரெட்டி நியமிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, திருப்பதி மலையில் இணை நிர்வாக அதிகாரி பணியில் இருந்த சீனிவாச ராஜூவை பணியிட மாற்றம் செய்த, ஆந்திர அரசு, தர்மா ரெட்டி என்பவரை சீனிவாச ராஜுவுக்கு பதிலாக பணியில் அமர்த்தியது.
 இதைத் தொடர்ந்து, திருமலையில் இடைத்தரகர்கள் ஒழிப்புத் திட்டத்தை தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் ஒப்புதலுடன் இணை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி முடுக்கிவிட்டார். 
கடந்த ஒரு மாதமாக, அதிரடியாக நடத்தப்பட்ட இடைத்தரகர் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், இதுவரை 65 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட பெரும்பாலானோர், ஆந்திர மாநில மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரைக் கடிதங்கள் மூலமாகவே தரிசன டிக்கெட்டுகள், தங்கும் அறைகள் ஆகியவற்றை வாங்கி, பணம் சம்பாதித்தது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இதுபற்றி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோருக்கு எடுத்துக் கூறி, திருமலையில் நிலவும் பிஆர்ஓ  நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறுகிறார்.
இடைத்தரகர்கள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினரின் முழுக்கவனமும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரைக் கடிதங்கள் மீது முழுமையாக திரும்பியுள்ளது.
ஆனால், தமிழகம், கர்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களின் பரிந்துரைக் கடிதங்களை பயன்படுத்தி சிலர் கள்ளச் சந்தை வழியாக தரிசன டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த தேவஸ்தான லஞ்ச ஒழிப்புத் துறையினர், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களின் பரிந்துரைக் கடிதங்களுடன் வரும் பக்தர்களிடம் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT