திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கைகளைக் கணக்கிடும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தி தேவஸ்தானம் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
திருமலை ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் தினசரி கோயிலிலிருந்து கொண்டு செல்லப்பட்டு, ரூபாய் நோட்டுகள் சில்லறை நாணயங்கள் எனப் பிரித்து கணக்கிடப்பட்டு வருகிறது. ரூபாய் நோட்டுகள் திருமலையிலும், சில்லறை நாணயங்கள் திருப்பதியிலும் கணக்கிடப்படுகின்றன. இப்பணியில் இதற்கு முன் தேவஸ்தான ஊழியர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆனால் காணிக்கையைக் கணக்கிட தாமதமாவதால் தேவஸ்தானம் அதில் வங்கி, மத்திய, மாநில அரசு ஊழியர்களை நியமித்து வருகிறது.
அவ்வாறு வந்து திருமலையில் தங்கி, காணிக்கை கணக்கிடும் பணியில் ஈடுபடுவோருக்கு, தேவஸ்தானம் ஏழுமலையான் தரிசனம், லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. இந்நிலையில், ரூபாய் நோட்டுகள் மட்டுமே தினசரி கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.
ஆனால் சில்லறை நாணயங்கள் நிலுவையில் வைக்கப்படுகின்றன. இதனால் சில்லறை நாணயங்களின் நிலுவை அதிகமானது. இதைத் தடுக்க தேவஸ்தானம் தற்போது, தேவஸ்தானக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை திங்கள்கிழமை முதல் பிரித்து காணிக்கை கணக்கிடும் பணியில் ஈடுபடுத்தத் தொடங்கியது.
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான எஸ்.வி.கலைக் கல்லூரி, எஸ்.ஜி.எஸ். கலைக் கல்லூரி, எஸ்.வி. ஓரியண்டல் கல்லூரிகளைச் சேர்ந்த 125 மாணவர்கள் குழு முறையில் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு வழிகாட்டியாக 25 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என தேவஸ்தானம் நியமித்தது. மாணவர்களுக்கு தேவஸ்தானம் வேட்டி, காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கியது.
இனி மாதத்துக்கு ஒருமுறை காணிக்கை கணக்கிடும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேவஸ்தான கல்லூரிகளில் மட்டுமல்லாமல், தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் இதில் பங்கு கொள்ள முன்வரலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு ஏழுமலையான் தரிசனமும், ரூ. 5 விலையில் 4 லட்டுகளை வழங்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
மாதத்தில் ஒரு நாள் என்பதால் மாணவர்களின் படிப்புக்கும் பாதிப்பு ஏற்படாது, அதேசமயம் உண்டியல் காணிக்கைகள் நிலுவையில் வைப்பது தவிர்க்கப்படும் என தேவஸ்தானம் கருதுகிறது.