மோட்சம் எனும் முக்தி அடையும் பிறவி யாருக்கு?

மோட்சம் எனும் முக்தி அடையும் பிறவி எனக்கு உண்டா? ஆம், இந்த கேள்வி எழாத மனிதப் பிறவியே..
மோட்சம் எனும் முக்தி அடையும் பிறவி யாருக்கு?

மோட்சம் எனும் முக்தி அடையும் பிறவி எனக்கு உண்டா? ஆம், இந்த கேள்வி எழாத மனிதப் பிறவியே இல்லை என சொல்லலாம். அப்படியானால், இதற்கு ஜோதிட சாஸ்திரத்தில் பதில் உள்ளதா என்றால், நிச்சயம் உண்டு என்றே சொல்லமுடியும். அதனை விரிவாக இந்த கட்டுரையில் காண்போம்.

முக்தி அல்லது மோட்சமடைதல் என்பது மனித வாழ்க்கையின் வரப்பிரசாதமான நிலை என்றால் அது மிகை ஆகாது. மனிதனுக்கு ஏழு பிறவிகள் உண்டு. ஏழாவது  பிறவிதான் மோட்சப் பிறவி என்று பொதுவாக கூறுவதுண்டு. நாம் வாழும் இந்த பிறவி தான் ஏழாவது பிறவி என்று எப்படி அறிந்து கொள்வது? இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இப்பூவுலகில் வாழும் மனித வாழ்க்கையை மட்டும் அல்லது அனைத்து ஜீவன்களின் வாழ்க்கையையுமே இறைவன் ரகசியமாகவே வைத்துள்ளான். அதில் மனித வாழ்க்கையின் ரகசியங்களை ஓரளவு அறிந்துகொள்ள (ஓரளவு தான் (முழுமையாக அல்ல) உதவுவது தான் ஜோதிட சாஸ்திரமாகும்.

இப்படியான பல ரகசியங்களில் ஒரு ரகசியம் தான் மோட்சம் எனும் முக்தி அடைதல். இது இறைவனின் ரகசியம் என்ற போதிலும், இந்த ரகசியத்தை ஜோதிட  சாஸ்திரமானது மோட்ச யோகம் என்ற விளக்கங்களில், ஒருவரின் ஜாதகம் மூலம் அறிந்துகொள்ள வழிவகை அளிக்கின்றது. அநேகம் பேர் ஒருவரின் ஜாதகத்தில், கேது (கேது மோட்ச காரகத்துவம் அளிப்பதாலேயே) 12ம் இடமான மோட்ச ஸ்தானத்தில் இருந்தால், அதனால் இந்த பிறவியே அவரின் மோட்சப்பிறவி என சட்டென்று கூறிவிடுகின்றனர். ஆனால், உண்மையில் மேலே குறிப்பிட்டது படி மூல நூல்கள் தனித்த கேது 12 இல் உள்ளதை மோட்சப்பிறவி என்று குறிப்பிடப்படவில்லை.  அப்படியானால், மோட்சப்பிறவிக்கான யோக விதிகளை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதை நாம் இப்போது காணலாம்.

மோட்சப்பிறவிக்கான யோக விதிகள்:-

  • விதி -1:- 12 ஆம் இடத்தில் கேது இருக்க, கேதுவுடன் குரு இணைந்திருந்தாலும் அல்லது கேதுவை குரு பார்த்தாலும்...
     
  • விதி -2:- 12 ஆம் இடத்தில்  இருக்க, அவரை  5 அல்லது 9 க்கு உரியவர்கள் , அதாவது அதிபதிகள் பார்த்தோ அல்லது அவருடன் சேர்ந்து இருந்தாலோ...
     
  • விதி -3:- 12 ஆம் இடத்தில் உச்சம் பெற்ற சுப கிரகங்கள்  ஏதேனும் இருந்து , அக்கிரகம் தேவலோகாம்சத்தில் இருப்பதுடன், மேலும் ஏதேனும் சுப கிரகங்கள் பார்த்திருந்தாலோ...
     
  • விதி -4:- 10 ஆம் இடது அதிபதி ஆனவர் 3-4 கிரகங்களுடன் கேந்திர - திரிகோணங்களில் இருக்க; 10 க்குடையவர் குருவாகவோ அல்லது 10 ஆம் இடத்தை குரு பார்த்தாலோ...
     
  • விதி -5:- 10க்கு உடையவவ்ன் 10 ஆம் இடத்திலேயே பலமாக கேதுவுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது 10 ஆம் இடத்தில் குரு -கேது இருந்து அவர்களை 10க்கு உடைய அதிபதி பார்த்தாலோ...     
     
  • விதி -6:- 9 ஆம் இடத்தில் ஒரு பலமான கிரகம் கேதுவுடன் இணைந்திருக்கவோ அல்லது குரு வீடு 12 ஆம் இடமாகி அதில் கேது இருக்க, குருவால் பார்க்கப்பட்டிருந்தாலோ...
     
  • விதி -7:- 5, 9 ஆம் அதிபதிகள் நல்ல நிலையில் இருக்க, 5-9-12 ஆகிய இடங்களில் எதிலாவது குரு-கேது இணைந்திருந்தாலோ அல்லது 12 ஆம் இடம் மீனம் -விருச்சிகம் ஆகி அதில் குரு -கேது இருந்தாலோ...மேலே கூறிய 7 விதமான விதி முறைகளில் ஏதேனும் ஒன்று  இருந்தாலும், மோட்ச யோகம் ஏற்படும். எனவே ஒரு ஜாதகர், மோட்சம்  எனும் முக்தியடையும் பிறவி என்பதனை அறிந்துக்கொள்ள மேலே கூறிய 7 விதமான விதி முறைகளில் ஏதேனும் ஒன்று அவசியமாகிறது. 

மேற்கொண்ட விதிப்படி கிரக நிலைகள் ஜாதகத்தில் இருந்தால் தான் அந்த ஜாதகர் இனி பிறவி இல்லாத முக்தி எனும் மோட்சத்தை அடைய முடியும். வெறுமனே கேது மட்டும் 12 ல் இருந்துவிட்டால் போதும் முக்தி தான், மோட்சம் தான்! இனி பிறவி கிடையாது என்று கூறுவது தவறான கருத்தாகி விடும். நமது வாசகர்கள் சரியான விதி முறைகளை அறிந்து கொள்ளவே பல்வேறு மூல நூல்களின் கருத்துக்களை தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன இந்த விதிமுறைகள், மோட்சம் எனும் முக்தி அடையும் பிறவிக்கு பராசரர், பலதீபிகை, ஸர்வார்த்த சிந்தாமணி போன்ற மூல நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டதாகும். 

அப்படியென்றால், அந்த விதிகளுக்கு எனது ஜாதகம் உட்படாமல் இருந்தால் எனக்கு மோட்சமே கிடைக்காதா?, என்ற கேள்வியும் எழவே செய்யும். நாம் வாழும் வாழ்க்கையும் சில போது மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும், அது, விதிகளுக்கு அப்பாற்பட்டது, இறைவனின் கட்டுப்பாட்டுக்குள் வருவது. 

ஒருவர், மோக வலையில் வீழ்ந்துவிட்டால் அதுவரை அடைந்த அறிவெல்லாம் நினைவுக்கு வராது. பூமியிடமிருந்து பொறுமை என்ற பண்பைக் கற்றுக் கொள்ளவேண்டும். பொறுமையானது பலமும், சகிப்புத்தன்மையும் கலந்திருக்கும் ஒரு குணம். பொறுமையாக இருப்பது பலவீனமல்ல. சோம்பலையும், தாமதமாக செய்வதையும், தமோ குண செயல்கள் இவைகளை பொறுமையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.  பொறுமை என்பது ஒருவிதமான செயலேயாகும். 

செயலின்மையல்ல. இது சத்துவ குணத்தின் வெளிப்பாடு, எங்கேயெல்லாம் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். செயல் செய்யும்போது அந்த செயலுக்கேற்ற வேகத்தில் செய்ய  வேண்டும். செயலை செய்து முடித்தப்பிறகு அதன் பலனை அடைவதில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கர்ம பலனை அனுபவிக்கும் போது பொறுமையாக இருக்க வேண்டும். அந்த பலன் நாம் எதிர்பார்த்தபடி இல்லையென்றால் கோபமடையக் கூடாது. துயரமான சூழ்நிலையில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்நிலையில் இந்த சூழ்நிலை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அப்போதும் நீங்கவில்லை என்றால் பொறுமையுடன் அனுபவித்து தீர்க்க வேண்டும். நமக்கு இன்ப-துன்பத்தைக் கொடுப்பவர்கள் அனைவரும் கர்த்தாவாக நினைக்காமல் கருவியாக எண்ணிக் கொள்ளவேண்டும். இறைவன் சங்கல்பத்தின்படி இது நடக்கின்றது. என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் என்னுடைய கர்ம பலனைத் தீர்த்துக் கொள்வதற்காக எனக்கு துன்பத்தை தருகிறார்கள் என்று எண்ணிக்கொள்ள வேண்டும்.

பரோபகாரம் அல்லது சேவை என்பது மற்றவர்களுக்கு உதவி செய்தல், அதனால் எதையும் எதிர்பார்க்காமல் இதைச் செய்ய வேண்டும். குருவுக்கு சேவை செய்யும் சிஷ்யனுக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்கக்கூடாது. அவருக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ வேண்டும். சேவை என்பது ஒருவிதமான ஈகைக்குணம், உழைப்பைக் கொடுத்தல். இது லோபம் என்ற தீய குணத்தை நீக்கிக் கொள்வதற்குப் பயன்படும். அறிவை பணத்தைக் கொடுத்து வாங்கலாம், இதுவே குருதட்சணை என்பர்.  அறிவைச், சேவையின் மூலமும் அடையலாம்.  

சேவையின் மூலம் பெற்ற அறிவில்தான் உயர்வடைய முடியும்.  இந்த உலகத்திடமிருந்து பல நன்மைகளை அடைந்திருப்போம். இதன் மூலம் இந்த உலகத்திற்கு நாம் பலவகையில் கடன்பட்டிருக்கின்றோம்.  இந்த கடனை தீர்ப்பதற்கு சேவைதான் உதவி செய்கின்றது.  சேவை என்பது ஒருவகையான முதலீடு போல கருதப்படும். ஆத்ம ஞானத்தை பெறுவதற்கு உதவிபுரிகின்றது. எனவே, சேவை செய்வதால் பயனின்றி போகாது. 

சேவையினால் நம் மனம் விரிவடைகின்றது. இயற்கையை, சுற்றுப்புற சூழ்நிலைகளைப் பாதுகாப்பதற்கான மனப்பக்குவத்தைக்  கொடுக்கும். சேவை என்பது நிஷ்காம்ய கர்மமென்று சொல்லப்படுகின்றது. சேவை செய்வதில் கர்வம் அடையக்கூடாது. புகழுக்காகச் செய்யக் கூடாது. எல்லா செயல்களும் மலைகளும், மரங்களும் கூட பிறர் நன்மைக்காகவே நடைபெறுகின்றது. இதனுடைய பிறப்பே மற்றவர்களுக்கு உதவும் பொருட்டே அமைந்துள்ளது. 

நல்ல மனிதன், சாதகன் இதை கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு மலைகள், மரங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தல் என்கின்ற பண்பைக் கற்றுக் கொடுக்கின்றது. ஒவ்வொன்றும் விதிகளுக்கு, விலக்காகச் சிலவற்றை நாம் அறிந்தே வைத்திருக்க வேண்டும். இவ்வகை செயல்களால், நிச்சயம்  நாம் அனைவரும், மோட்ச நிலையை அடையத் தயாராகுவோம்.

சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com