கோகுலாஷ்டமி: தொட்டில் நிறையணுமா? ஸ்ரீ கிருஷ்ணரை வரவேற்போம் வாங்க!

ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மதுராநகர் மற்றும் வட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது.
கோகுலாஷ்டமி: தொட்டில் நிறையணுமா? ஸ்ரீ கிருஷ்ணரை வரவேற்போம் வாங்க!

நாளை (23/8/2019) வெள்ளிக்கிழமை கோகுலாஷ்டமி எனும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவை தமிழகத்திலும்(24/8/2019), ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மதுராநகர் மற்றும் வட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத சுக்லபட்ச அஷ்டமி, அத்தனைப் புண்ணியம் நிறைந்த நன்னாளாக மாறியதற்குக் காரணம் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவர் அவதரித்த திருநாள் இது. அன்றைய தினத்தை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.

தன் தங்கைக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்து பதறினான் கம்சன். முதல்கட்டமாக தங்கை தேவகியையும் அவளின் கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்து கண்கொத்திப் பாம்பாகப் பார்த்து வந்தான். எட்டாவது குழந்தைதான் நமக்கு வில்லன் என்றபோதிலும் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கொன்றான். பதறிப்போனார்கள் தம்பதியர்.

ஏழாவது குழந்தை பலராமர். தேவகியில் வயிற்றில் கருவாகியிருந்தார். அப்போது ஸ்ரீமகாவிஷ்ணு என்ன செய்தார் தெரியுமா. மாயாதேவியை (துர்கா தேவி) அழைத்தார். பலராமரின் கருவை, கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவியரில் ஒருவரான ரோகிணியின் கர்ப்பப்பைக்குள் வைக்கும்படி அருளினார். தவிர, மாயாதேவியை நந்தகோபரின் மற்றொரு மனைவியான யசோதையின் வயிற்றில் கருவாக வளரும்படி பணித்தார். எட்டாவதாக, கிருஷ்ண பகவான் தேவகியின் வயிற்றில் வளர்ந்தார். ஆவணி மாத சுக்ல பட்ச அஷ்டமியில் கிருஷ்ணர் அவதரித்தார். தாயும் தந்தையும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். அப்போது குழந்தையானது, ஸ்ரீமகாவிஷ்ணுவாக விஸ்வரூபம் எடுத்து காட்சி தர, வியந்து போனார்கள். இது வரம். ஏற்கெனவே வாங்கி வந்த வரம்.

இது நிகழ்ந்த நன்னாள்தான் ஆவணி சுக்லபட்ச அஷ்டமித் திருநாள். கிருஷ்ண ஜெயந்தி எனும் புனித நன்னாள். இந்த நாளில், வீட்டு வாசலில் இருந்து வீட்டுப் பூஜையறைக்குள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, குழந்தையாகவே பாவித்து நாம் வரவேற்று பூஜிப்பது வழக்கம்.

அனேக சமயங்களில் கோகுலாஷ்டமி ஆவனி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியில் ரோஹினி நக்ஷத்திரத்தோடு இணைந்து நிகழும். இந்த கிருஷ்ண ஜென்மாஷ்டமி தினத்தை வைஷ்ணவர்கள் ரோகினி நக்ஷத்திர அடிப்படையிலும் வைஷ்ணவரல்லாதோர் அஷ்டமியை அடிப்படையாக கொண்டும் அனுஷ்டிப்பார்கள். சில சமயங்களில் ஸ்மார்தர்களுக்கு அஷ்டமி திதியிலும் வைஷ்ணவர்களுக்கு ரோகினி நக்ஷத்திரத்திலும் தனித்தனியாக நிகழ்வதும் உண்டு. இந்தமுறை நாளை மறுநாள் சனிக்கிழமை கிழமை தான் அஷ்டமியும் ரோகினியும் இணைந்து வருகிறது. என்றாலும் நாளை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இரண்டு நாட்களுமே கோகுலாஷ்டமி தினமாக பஞ்சாங்கங்களில் காணப்படுகிறது. 

இந்த கோகுலாஷ்டமி தினத்தில் அரிசிமாவில் மாக்கோலமிட்டு கிருஷ்ணர் பாதம் வரைந்து குதூகலிப்போம். மாலை வரை விரதமிருப்போம். அதன் பிறகு கிருஷ்ணருக்குப் பிடித்த உப்பு சீடை, வெல்ல சீடை, தேன்குழல், தட்டை, அதிரசம், கைமுறுக்கு, அப்பம் வெண்ணெய், அவல், பால், கற்கண்டு முதலான பட்சணங்களை நைவேத்தியம் செய்து பூஜிப்போம்.

ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதகமும் ஜோதிடமும்

ஸ்ரீ கிருஷ்ணர் போன்ற தெய்வ திரு அவதாரங்கள் எல்லாம் நவ கோள்களுக்கெல்லம் அப்பார்பட்டவர்கள். எனவே தெய்வங்களுக்கு ஜாதகம் உண்டா இல்லையா என்ற ஆராய்ச்சியை விடுத்து ஸ்ரீ க்ருஷ்ணரின் அவதார குறிப்புகளைக் கொண்டு நம்முன்னோர்கள் நமக்களித்துள்ள ஜாதகத்தை இந்த கோகுலாஷ்டமி தினத்தில் நினைவுக்கூறுவது நன்மை பயக்கும்.

ஸ்ரீ கிருஷ்ண பகவான் ரிஷப லக்னம் ரிஷப ராசி சந்திரன் உச்சம். லக்னமும் ராசியும் ஒன்றாக அமைந்தால் ஜட ஜன்ம ராசி என்பார்கள். ஜட ஜென்ம ராசியில் பிறந்தவர்களும் ரிஷபத்தை லக்னமாகவோ ராசியாகவோ கொண்டவர்களுக்கு பிடிவாத குணம் அதிகம். ஸ்ரீ க்ருஷ்ணர் கோபியர்களிடம் செய்யும் பிடிவாதமும் வெண்ணை திருடி தின்பதில் இருக்கும் பிடிவாதமும் நாம் அறிந்தது தானே! மேலும் ஸ்ரீ க்ருஷ்ணர் எந்த விஷயத்தை எடுத்தாலும் அதை முடிக்காமல் விடமாட்டார்.

லக்னம், ராசி இரண்டையும் சனைஸ்வர பகவான் சம சப்தமமாக பார்ப்பதால் கருமை நிறம் கொண்வராக விளங்குகிறார். மாடு கன்றுகளை குறிக்கும் சுக்கிரனின் வீட்டில் சந்திரன் உச்சமானதால் கோபாலனாகவும் விளங்கினார். சந்திரன் லக்னத்தில் உச்சம். ஆனால் பரதேச கிரஹமான கேதுவின் திரிகோண பார்வையால் பெற்ற அன்னையை பிரிந்து வேறொரு இடத்தில் வளர நேர்ந்தது. என்றாலும் சந்திரன் உச்சமாக சுக்கிரனின் வீட்டில் நிற்க, ராகுவுடன் சேர்ந்து மாத்ருகாரகனின் வீட்டில் பரிவர்தனையாகி சுக்கிரன் பரிவர்த்தனையாகி நிற்க கோகுலத்தில் அனைத்து பெண்களும் தன் குழந்தையாகவே ஸ்ரீ கிருஷ்ணரை எண்ணினர். ஜாதகத்தில் புதன் கேது சேர்க்கை காதல் தொடர்புகளை கூறும். ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதகத்தில் கேது தனது ஒன்பதாம் பார்வையால் புதனை பார்ப்பதும் உச்சம் பெற்ற புதனும் ராதா கிருஷ்ணரின் காதல் லீலைகளுக்கு காரணமாயிற்று.

லக்னத்திற்கு இரண்டு மற்றும் ஐந்தாமதிபதிகள் காலபுருஷனுக்கு வயிற்றை குறிக்கும் கன்னியில் உச்சமானதால் கோபிகா ஸ்திரிகள் இவர் மீது காதலாக இருந்தனர். வெண்ணை மற்றும் நொறுக்கு தீனிகள் தின்பதற்கும் இதுவே காரணமாயிற்று. ஏழு மற்றும் பன்னிரெண்டாம் வீட்டதிபதி நீசமாகி ஆறாம் வீட்டதிபதியோடு சேர்ந்து நிற்க சத்ய பாமா, ருக்மிணி என இருவரை மணந்துகொண்டிருந்தார். மேலும் எல்லா மறைமுக எதிரிகளையும் வதம் செய்து அழித்தார்.

சனியும் கேதுவும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்வதால் சன்யாச யோகத்தில் எதிலும் பற்றற்ற கர்மயோகியாக விளங்கினார். காலபுருஷனுக்கு எட்டாமிடமான விருச்சிகத்தில் சனைஸ்வரன் நின்றும் சந்திரனை சம சப்தமமாக பார்த்து சனி சந்திர சேர்க்கை பெற்றதால் அரசியலில் சிறந்து விளங்கினார். 

குழந்தை பாக்கியம் பெற

பசுவின் சிறப்பை விளக்கும் விதமாக ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மாவை கோபாலன் என புரான இதிகாசங்கள் போற்றுகின்றன. குழந்தை பாக்கியம்பெற விரும்புபவர்கள் கோகுலாஷ்டமியன்று. கோதூளி முகூர்த்த காலத்தில் கோபூஜை செய்து ஸ்ரீ சந்தான கோபாலனை மனதில் நிறுத்தி கீழ்கண்ட மந்திரத்தை கணவன் மனைவி இருவரும் கூறிவர சுக்கிர தோஷம் மற்றும் புத்திர தோஷம் நீங்கி விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

சந்தான ப்ராப்திக்கான பரிகார ஸ்தலம்

குழந்தை வரம் வேண்டுவோர் சென்னையிலுள்ள அண்ணாநகரை அடுத்த முகப்பேரில் உள்ள அருள்மிகு சந்தான ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சந்தான கோபால பூஜை செய்வது சிறந்த பலனளிக்கும். 

சந்தான கோபால பூஜை

மகப்பேற்றிற்காக விஷேசமாக தம்பதி சமேதராக வந்து  சந்தான கோபால பூஜையில் கலந்து கொண்டு குழந்தை செல்வம் பெறுகின்றனர்.  தம்பதியர் இருவர் பெயரிலும் அர்ச்சனை செய்து ஸ்ரீ சந்தான கோபால ஸ்வாமியை இருவர் மடியிலும் எழுந்தருளச் செய்யப்படும்.  சந்தான கோபால ஸ்வாமியை தம்பதிகளிருவரும் மடியில் வைத்துக்கொண்டு தங்கள் குல தெய்வத்தை ப்ரார்தித்து பின் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைப் பக்தியுடன் கூறி ப்ரார்தனை செய்ய இஷ்டப்படி புத்திர பாக்கியம் ஏற்படும்.

ஸ்லோகம்

ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-தேவகீ சுத

கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே

தனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத:

தேவதேவ ஜகந்நாத கோத்ர விருத்திகர ப்ரபோ

தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்"

உண்மையான பக்தியுடன் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளில் சந்தான கோபால க்ருஷ்ணனை பூஜித்து வழிபட்டால் குழந்தையாகவே கிருஷ்ணர் நம் வீட்டுக்கு வருவார்! கஷ்டமெல்லாம் போக்குவார்!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com