திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

7 நாள்களில் நிறைவடைகிறது அத்திவரதர் தரிசனம்

Published: 10th August 2019 05:04 AM
40-ஆவது நாளான வெள்ளிக்கிழமை கனகாம்பர நிறப் பட்டாடையில் அருள்பாலித்த அத்திவரதர்.

அத்திவரதர் பெருவிழா நிறைவுபெற இன்னும் 7 நாள்களே உள்ளதால், அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

கனகாம்பர நிறப் பட்டாடை அணிந்து அருள்பாலித்த அத்திவரதர்: அத்திவரதர் பெருவிழாவின் 40-ஆவது நாளான வெள்ளிக்கிழமை பெருமாள் கனகாம்பர நிறப் பட்டாடையும், நீல நிற அங்கவஸ்திரமும் அணிந்து, மகிழம்பூ மற்றும் கனகாம்பர மாலைகள் சூடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

முக்கிய பிரமுகர்கள் வரிசையில் வந்த நபர்களுக்கு கோயில் பட்டாச்சாரியார்கள் பெருமாள் சயனக்கோலத்திலிருந்த திருவுருவப் படங்களையும், கோயில் பிரசாதங்களையும் வழங்கினார்கள். 

சகஸ்ரநாம அர்ச்சனையும் பட்டாச்சாரியார்களால் நடத்தப்பட்டது.

அத்திவரதரை காணவந்த பக்தர்கள் பலரும் ஆடி வெள்ளி என்பதால் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனையும் தரிசிக்க வந்திருந்தனர். காமாட்சி அம்மன் திருக்கோயில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முக்கிய பிரமுகர்கள் தரிசனம்:  பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சுவாமி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, முன்னாள் எம்.பி. தருண்விஜய், திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் ராகவேந்திரா, சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த், சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி மதுநம்பூதிரி உள்ளிட்டோர் அத்திவரதரை வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தனர்.

சுவாமி தரிசனம் 8 மணி நேரம் :

அத்திவரதரை வெள்ளிக்கிழமை பொதுதரிசனப் பாதையில் சென்று தரிசனம் செய்ய அதிகபட்சம் 8 மணி நேரம் வரை  ஆனதாக பக்தர்கள் பலரும் தெரிவித்தனர். முக்கிய பிரமுகர்கள் வரிசையில் 2 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து 3 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய பிரமுகர்கள் வரிசையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் போலீஸார் பிரச்னைகள் ஏதுமில்லாமல் வரிசையாக கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர். 
3 லட்சம் பேர் தரிசனம்: 40-ஆவது நாளான வெள்ளிக்கிழமை அத்திவரதரை சுமார் 3 லட்சம் பேர் தரிசனம் செய்தனர்.

3 நாள்கள் விடுமுறை-பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு: அத்திவரதர் பெருவிழா அடுத்ததாக 2059-ஆம் ஆண்டு தான் நடைபெறும். அப்போது தான் அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால் எப்படியாவது  பெருமாளை தரிசித்து  விட  வேண்டும்  என  முதியோர்கள்  உள்பட  பலரும்  ஆவலுடன் உள்ளனர். 

அத்திவரதர் தரிசனம் வரும் 16-ஆம் தேதி மாலை 4 மணியுடன் நிறைவு பெற இன்னும் 7 நாள்களே  இருப்பதாலும், ஆகஸ்ட் 10, 11 சனி, ஞாயிறு விடுமுறை நாளாகவும், 12-ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு  பொது விடுமுறை நாளாக  இருப்பதாலும்  அத்திவரதரை  தரிசிக்க  வழக்கத்துக்கும்  அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இதற்கான போதுமான ஏற்பாடுகளையும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் முன்கூட்டியே அறிந்து செய்திட வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

சிறப்பு அனுமதி ரத்து 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. 

ஜூலை 1 முதல் 31 வரை  சயனக்கோலத்திலும், ஆக. 1 முதல்  நின்ற கோலத்திலும் பெருமாள் காட்சியளித்து வருகிறார். ஆகஸ்ட் 16,17 ஆகிய இரு தேதிகளிலும் முக்கிய பிரமுகர்கள் தரிசனத்துக்கான அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.

சுவரொட்டி விளம்பரம்: ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் வெள்ளிக்கிழமை (ஆக. 9)முதல் நன்கொடையாளர்களுக்கான அனுமதிச் சீட்டு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு அனுமதிச் சீட்டு ஆகியன எதுவும் வழங்கப்பட மாட்டாது. சிறப்பு அனுமதிச்சீட்டு கேட்டு எவரும் அணுகக்கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சிடப்பட்டிருந்தது (படம்). 

மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் சிபாரிசுக் கடிதங்களை பெற்று வந்தவர்களுக்கு காஞ்சிபுரம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. இதற்காக அதைப்பெற வந்தவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அவதிப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (ஆக. 9) முதல் சிறப்பு அனுமதிச்சீட்டுகள் வழங்குவது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் தரிசனம்

அத்திவரதர் பெருவிழாவில் 40-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் இருந்து மாற்றுத்திறனாளிகள் சுமார் 250 பேர் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் 250-க்கும் மேற்பட்டோரும் பேர் ஒன்று சேர்ந்து அத்தி வரதரை தரிசிக்க வந்திருந்தனர்.

இவர்கள் 500 பேரும்  காஞ்சிபுரம்  வரதராஜப் பெருமாள் திருக்கோயில் அருகேயுள்ள துளசி மண்டபத்துக்கு  வந்த போது அவர்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி.க்கள் நாகராஜன், பெரியய்யா, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சுந்தரமூர்த்தி, சார்-ஆட்சியர் சரவணன் ஆகியோர் அவர்களை வரவேற்றனர். 

பின்னர் மதிய உணவும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவரையும் கிழக்கு கோபுர வாசல் வழியாக அத்திவரதர் காட்சியளிக்கும் வஸந்த மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்.

அங்கு தீயணைப்புத்துறை வீரர்களின் உதவியுடன் அனைத்து மாற்றுத்திறனாளிகளும், அவர்களுடன் வந்தவர்களும் அத்திவரதரை தரிசனம் செய்தனர். கோயில் பட்டாச்சாரியார்கள் தீபாராதனை செய்தனர். மாற்றுத்திறனாளிகள் அத்திவரதரை தரிசனம் செய்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சி தருவதாகத் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளிய அத்திவரதர்
திருச்செந்தூர் கோயிலில் நாளை ஆவணித் திருவிழா கொடியேற்றம்
அத்திவரதர் பெருவிழா: அத்திவரதர் அனந்தசரஸ் திருக்குளத்தில் ஆய்வு
அத்திவரதர் பெருவிழா: 1979-2019 ஆண்டுகளில் வியப்புக்குரிய ஒற்றுமை
பிரியாவிடை பெற்றார் அத்திவரதப்  பெருமாள்!