செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

மேலூரில் 100 ஆண்டுகளுக்கு முன் மாயமான திரெளபதியம்மன் சிலை மீட்பு

Published: 29th April 2019 11:10 AM

 

மதுரை மாவட்டம் மேலூர் திரெளபதியம்மன் கோயிலில் நூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் காலத்தில் காணாமல் போன திரெளபதியம்மன் ஐம்பொன் சிலை போலீஸாரால் மீட்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை கோயிலில் வைக்கப்பட்டது.

இக்கோயிலில் ஆங்கிலேயர் காலத்தில் 3 அடி உயரமுள்ள திரெளபதியம்மன் ஐம்பொன் சிலை மாயமானது. இதுகுறித்து அப்போது பூசாரியாக இருந்த நாராயணன், போலீஸில் புகார் செய்துள்ளார். ஆனால் சிலை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அக்காலத்தில் பூசாரிக்கு உதவியாளராக பணிபுரிந்த கந்தசாமி என்பவரது வாரிசுதாரரான முருகேசன் என்ற முதியவர், தங்கள் மூதாதையர்கள் அழகர்கோவில் ரோட்டிலுள்ள வீட்டை வேறுநபருக்கு கிரையம் செய்துவிட்டதாகவும், அவ்வீட்டின் சுவற்றில் திரெளபதியம்மன் சிலை புதைக்கப்பட்டுள்ளதாகவும், கோயிலில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தற்போதைய பூசாரி மேலூர் போலீஸில் புகார் செய்தார். இதற்கிடையே சம்பந்தப்பட்ட வீடு பல ஆண்டுகளுக்கு முன் வேறு நபருக்கு கிரையம் செய்து கொடுக்கப்பட்டதாகவும், அது மேலும் சிலருக்கு அடுத்தடுத்து விற்கப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால், யாரும் அந்த வீட்டை புதுப்பிக்கவோ, மராமத்து செய்யவோ இல்லை. இந்நிலையில், இதுகுறித்த புகார், தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

சிலை திருட்டு தடுப்பு மீட்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி மற்றும் மேலூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில், வீட்டின் சுவர் இடிக்கப்பட்டு சிலை மீட்கப்பட்டது. அச்சிலை கோயில் பூசாரி நாராயணனிடம் ஒப்படைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு ஞாயிற்றுகிழமை வைக்கப்பட்டது. சுமார் மூன்று அடி உயரமுள்ள திரெளபதியம்மன் சிலைக்கு மூன்று கண்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மனின் நகைகள் எங்கே?

மேலூரில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட திரெளபதியம்மனுக்கு நகைகள் அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவை என்ன ஆனது எனவும் கேள்வி எழுந்துள்ளது.

மேலூர்- அழகர்கோவில் சாலையில் நகைக் கடை வீதியில் உள்ள பூசாரி வீட்டிலிருந்து திரெளபதியம்மன் ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது. இச்சிலை கோயில் பூசாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. பின்னர் இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. 

அம்மன் சிலை மீட்கப்பட்ட நிலையில், அம்மமனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒட்டியாணம் உள்ளிட்ட நகைகள் என்ன ஆனது என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நகைகள் அதே வீட்டில் வேறு எங்கும் புதைக்கப்பட்டுள்ளதா என்று சோதனையிட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுதுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் மாங்கனி இறைத்து வழிபாடு
இன்று நள்ளிரவில் சந்திரகிரகணம்: சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!
திருப்பதிக்குச் செல்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா!
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை முதல் ராமாயண பாராயணம்
அத்திவரதர் பெருவிழா: மருத்துவ முகாம்களில் இதுவரை 12,500 பேருக்கு சிகிச்சை