திங்கள்கிழமை 20 மே 2019

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம்

Published: 28th April 2019 01:29 AM
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற மகா ருத்ர யாகம்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு சித்திரை மாத மகாபிஷேகம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. 
இந்தக் கோயிலில் சித் சபையில் வீற்றுள்ள மூலவருக்கு ஆண்டுக்கு 6 முறை, அதாவது சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி மாதங்களில் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். 
ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித் சபைக்கு வெளியே உள்ள கனக சபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.
இதன்படி, சித்திரை மாத மகாபிஷேகம் கனக சபையில் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
ருத்ர மகாயாகம்: மகாபிஷேகத்தை முன்னிட்டும், உலக நன்மையைக் கருதியும் சனிக்கிழமை காலை மகா ருத்ர ஜப பாராயணம் மற்றும் யாக நிகழ்வு கணபதி பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சித் சபையில் உள்ள மூலவருக்கு காலை 8 மணிக்குள் உச்சி கால பூஜை நடைபெற்றது. பின்னர் காலை 9 மணியளவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் கனக சபையில் எழுந்தருளினார். ஆயிரங்கால் மண்டபம் முன் அமைக்கப்பட்டுள்ள  யாகசாலை பந்தலில் யாகசாலை பூஜை தொடங்கியது. பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை லட்சார்ச்சனையும், 300 பேர் பங்கேற்ற மகாருத்ர யாகமும் நடைபெற்றது. பின்னர், யாக சாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு கனக சபைக்கு சென்ற பின்னர் மகாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

திருப்பதி பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு
திருச்சானூரில் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவு
இன்று வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி பெருவிழா விமரிசையாகக் கொண்டாட்டம்
ஆலங்குடி குரு பகவான் கோயிலில் சிறப்பு யாகம்